Published:Updated:

`PMCARES v PMNRF' என்ன நடக்கிறது பிரதமர் நிதியில்... ஒரு விரிவான அலசல்!

PMCARES v PMNRF
PMCARES v PMNRF

PMCARES பற்றி ஓராயிரம் சர்ச்சைகளும் PMNRF என்பது எவ்வளவு புனிதமானது தெரியுமா என்பது பற்றி ஓராயிரம் விளக்கவுரைகளும், சமூக வலைதளங்கள் முழுக்க நடுநிலைவாதிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் எழுதப்பட்டு வருகின்றன. உண்மை என்ன?

இந்தக் கொரோனா உலகம் நமக்குப் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. Rapid test கிட் ஏன் தமிழகத்துக்குத் தாமதம் எனக் கேள்வி கேட்கிறோம்; சத்தீஸ்கரைவிடவும் நாம் அதிக விலைக்கு வாங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜன் தன் யோஜ்னா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து, அதற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி வணக்கம் தெரிவிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்களை டிடி செய்திகள் தொலைக்காட்சி தாமாகவே முன்வந்து ஒளிபரப்பிவருகிறது. இப்படித் தினமும் புதிய புதிய செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

அப்படி நாம் சமீபத்தில் புதிதாகக் கற்றுக்கொண்ட மற்றுமொரு வார்த்தை PMCARES.

ஸ்பெயினில் பால்கனிகளில் நின்று கைதட்டியதைப் பார்த்து, நாமும் ஒரு சுபயோக சுபதினத்தில் அவ்வாறாக கை தட்டினோமோ, அதன் ஒரு நீட்சிதான் இந்த PMCARES. பராக் ஒபாமா ஆட்சியில் OBAMACARES என்ற ஒன்றை உருவாக்கினார் அமெரிக்க அதிபர்.

அதுபோலவே தற்போது PMCARES என ஆரம்பித்து இந்தியா முழுக்க கார்ப்பரேட்டுகளிடமும் மக்களிடமும் நன்கொடைகள் வாங்கி வருகிறார் நம் பிரதமர். வெளிநாடுகளில் இருந்தும் இதற்குப் பணம் தர முடியும். PMCARES பற்றி ஓராயிரம் சர்ச்சைகளும் PMNRF என்பது எவ்வளவு புனிதமானது தெரியுமா என்பது பற்றி ஓராயிரம் விளக்கவுரைகளும், சமூக வலைதளங்கள் முழுக்க நடுநிலைவாதிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் எழுதப்பட்டு வருகின்றன. அதன் ஒரு தொடர்ச்சிதான் இந்தக் கட்டுரை என்பதும் என நினைத்து இதனுடன் க்ளோஸ் பட்டனை அழுத்திவிடாதீர்கள். தாராளமாக நீங்கள் தொடரலாம்.

PMNRF
Prime Minister's National Relief Fund

முதலில் நேருவின் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம். Prime Minister's National Relief Fund, சுருக்கமாக PMNRF. பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த மக்களுக்காக 1948-ல் ஆரம்பிக்கப்பட்ட PMNRF, படிப்படியாக இயற்கை பேரிடர், மனிதத் தவறுகளால் நடக்கும் பேரிடர் என இரண்டுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பொதுமக்கள், நிறுவனங்கள், அயல்நாட்டில் வசிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் PMNRF-க்கு நன்கொடை அளிக்கலாம். PMNRF-க்கென தனியாகப் பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீடும் செய்யப்பட மாட்டாது.

நேரு
நேரு

1948-ல் PMNRF தொடங்கப்பட்டபோது, அதன் குழுவில் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா, துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் பட்டேல், அப்போதைய நிதியமைச்சர் சண்முகம் செட்டி, பிரதமர்... இவர்களோடு டாட்டா நிறுவனத்தைச் சேர்ந்தவரும் டிரஸ்ட்டிகளாக அங்கம் வகித்தனர்.

2019 டிசம்பர் வரையில் அதன் கணக்குகள் ஆடிட் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் இன்னும் செலவு செய்யாமல் இருக்கும் தொகை 3,800 கோடி. காங்கிரஸின் சோனியா காந்தியில் தொடங்கி அக்கட்சியைச் சேர்ந்த சஷி தரூர், கௌரவ் வல்லப் என பலர் அதிலிருக்கும் 3,800 கோடி ரூபாயைச் செலவு செய்யாமல், ஏன் புதிதாக வேறொரு பெயரில் ஆரம்பிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

PMNRF-ல் 100 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம்.

PMCARES
Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund

மார்ச் 28-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதைத் தொடங்கினார் நரேந்திர மோடி. அதன் பலன்களைச் சுருக்கமாகச் சொல்வதென்றால் PMNRF நலத்திட்டப் பட்டியலில் கொரோனாவையும், அது சார்ந்து நடக்க இருக்கும் ஆய்வுப் பணிகளையும் சேர்த்துக்கொண்டால் அதுதான் PMCARES.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

PMNRF-ல் குறிப்பிடப்பட்டது போலவே, பொதுமக்கள் , நிறுவனங்கள், அயல்நாட்டில் வசிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் PMCARES-க்கு நன்கொடை அளிக்கலாம். PMNRF போலவே PMCARES-க்கென தனியாகப் பட்ஜெட்டில் எந்த ஒதுக்கீடும் செய்யப்பட மாட்டாது.

2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் PMNRF-க்கு வந்த நன்கொடை (486.65 கோடி, 783.18 கோடி) 1,269.83 கோடி. PMCARES தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 6,500 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

PMCARES-ல் குறைந்த தொகைக்கான வரையறை எதுவும் இல்லை.

PMCARES... சூழும் சர்ச்சைகள்!

சர்ச்சை 1
CAG தணிக்கை இல்லை!

இந்த PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் சமீபத்தில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது. இது, அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்த பிஎம் கேர்ஸ் மூலம் நாட்டின் கொள்ளை நோய் பாதிப்புக்காகத் திரட்டப் பட்டிருக்கிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. அதாவது, அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் தொடங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்குப் போகிறது. அதாவது, இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது.

தனி ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை ஆடிட் செய்வார்கள்.

2ஜியில் 1.7 லட்சம் கோடி நாட்டுக்கு இழப்பு எனச் சொல்லிய மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG, PMCARESஐ தணிக்கை செய்யாது என்பது அச்சமளிக்கக்கூடிய செய்தியென சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது ஒருபுறம் இருக்கட்டும், PMNRF-ல் என்ன நடைமுறை என்று பார்ப்போமா ?

அரசுக்குச் சம்பந்தமில்லாத நபர்கள்தான் PMNRF-ஐயும் இதுவரையில் ஆடிட் செய்து வந்திருக்கிறார்கள். ( பார்க்க: https://pmnrf.gov.in/en/faqs/pmnrf கேள்வி 7)

சர்ச்சை 2
CSR பஞ்சாயத்து!

பெரும் நிறுவனங்கள் அதன் லாபத்தில் 2% சமூக நலத்திட்டங்களுக்கு/NGO-க்கள் மூலம் செலவிட வேண்டும். (Corporate social responsibility, CSR)

அந்த 2% லாபத்தை #PMCaresFunds'-க்கு தரச் சொல்கிறார் மோடி!

முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தரக்கூடாது எனவும் தடுக்கிறார்!

கார்ப்பரேட்டுகள் CSR மூலம் 2% தொகையை (500 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்) முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்ததாகக் கணக்குக் காட்ட முடியாது என்பது உண்மைதான். அதே சமயம், நிறுவனங்கள் State Disaster management Authority-க்கு செலவிடும் தொகையை CSR ஆக்டிவிட்டியாக கணக்குக் காட்ட முடியும்.

அதே போல், தாங்களாக முன் வந்து கொரோனா தொற்றைப் போக்கச் செய்யப்படும் செலவுகளையும் CSR கணக்குகளின் கீழ் கொண்டு வர முடியும். ஆக, தற்போதும் நிறுவனங்கள் மாநிலத்துக்கு நன்கொடை அளிக்க முடியும். PMCARES போல் எளிதாக மாநில அரசுகளுக்கு அளிக்க முடியாது என்பது மட்டும் திண்ணம்.

சர்ச்சை 3
PMNRF-ல் காங்கிரஸ் தலையீடு

PMNRF-ல் காங்கிரஸ் தலைவரும் டிரஸ்ட் குழுமத்தின் ஓர் அங்கம். அதனால்தான் PMCARES எனப் புதிய பெயரில் இதை ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. டிரஸ்ட் குழுவின் அங்கத்தினரை வைத்துப் பார்த்தால், இதில் ஓரளவு உண்மை இருப்பதையும் நம்மால் அறிய முடியும். ஜனவரி 24-ம் தேதி 1948-ம் ஆண்டு நேருவால் ஆரம்பிக்கப்பட்ட PMNRF-ல் பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைப் பிரதமர், டாடா நிறுவன டிரஸ்ட்டி, நிதி அமைச்சர், FICC (Federation of Indian Chambers of Commerce) ஆகிய ஆறு பேர் மட்டுமே அங்கம் வகித்தனர். PMNRF-ல் இருக்கும் பணத்தின் மூலம் யாருக்கு உதவலாம் என்பதை இந்தக் குழு முடிவு செய்யும். 1985-ல் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில், PMNRF-ன் அங்கீகாரம் முழுவதுமாக இந்தக் குழுவிடமிருந்து பிரதமருக்கு மாற்றி எழுதப்படுகிறது. பிரதமர் பாதிக்கப்பட்ட யாருக்கு வேண்டுமானாலும், இதன் மூலம் உதவி செய்ய முடியும். யாருடைய அனுமதியையும் பெற வேண்டியது இல்லை. குழு, பரிந்துரைகளை மட்டுமே வழங்கும்

PMNRF TRUST COMMITTEE
PMNRF TRUST COMMITTEE

மாறாக PMCARES-ல் தலைவராகப் பிரதமர் இருக்கிறார். மூவர் குழுவில் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் மூவரும் இருக்கிறார்கள். அதேபோக, சுகாதாரம், சட்டம், அறிவியல் போன்ற துறைகளிலிருந்து மூவரை PMCARES-ல் குழுவில் சேர்க்கப் பிரதமருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியா என்கிற கட்டமைக்கப்பட்ட தேசம் உருவானபோது, காங்கிரஸை விட்டால், இங்குப் பெரிதாக அரசியல் கட்சிகள் ஏதும் இல்லை. ஆனால், தற்போது அனைத்தும் மாறிவருகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமே செயல்படும் ஒரு கட்சியாகக் காங்கிரஸ் செயல்பட்டுவருகிறது. ராகுல் காந்தியின் அசரீரி வார்த்தைகளை மத்திய அரசு கேட்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம், எந்தவித பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான, ஆக்ரோஷமான போராட்ட முறைகள் இல்லை என்பது வெளிப்படை.

SONIA GANDHI LETTER
SONIA GANDHI LETTER

சோனியா காந்தி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் 5-வது பாயின்ட். PMCARES நிதிகளை PMNRF-க்கு மாற்ற வேண்டும் என்பது. நியாயமான கோரிக்கை. குறைந்தபட்சம் PMNRF குழுவிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டு இப்படிக் கேட்டிருக்கலாம்.

சர்ச்சை 4
PMCARES-ல் சேர்க்கப்படும் PSU நிதிகள்!

பொதுத்துறைக்கு கீழே வரும் PSU (Public Sector Undertakings ) நிதியும் PMCARES-ல் சேர்க்கப்படுவதால், இது பாராளுமன்றத்தின் பார்வையின்கீழ் கொண்டு வர வேண்டும். பொதுமக்கள், பெருநிறுவனங்கள் மட்டுமே PMNRF-ல் நன்கொடை செலுத்த முடியும். பட்ஜெட் அல்லது Public Sector Undertaking-ல் இருக்கும் பணத்தை PMNRF-ல் சேர்க்க முடியாது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை 2022-ம் ஆண்டு வரை அனைத்து உறுப்பினர்களுக்கும் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்துவருகிறது.

பா.ஜ.க-வில் இருக்கும் அனைத்து எம்.பி-க்களும் அவர்களது நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை PMCARES-க்கு வழங்குவார்கள் என மார்ச் 28-ம் தேதி அறிவித்தார் ஜே.பி.நட்டா. மத்திய அரசின் கணக்கில் இருக்கும் இந்தப் பணம் அனைத்தும் மக்களின், மாநில அரசுகளின் வரிப்பணம். ஆனால், இவை எப்படி செலவு செய்யப்படுகின்றன என்பதில் போதிய வெளிப்படைத்தன்மை இருக்காது என்பது நிச்சயம் சர்ச்சைக்குரியதே.

இரண்டிலும் பொதுவாக இருக்கும் சாதக பாதகங்கள்!

உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு திட்டங்களிலும் போதிய வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே நிதர்சனம்.

இந்திய அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் அனைத்துப் பணிகளையும் மத்திய தணிக்கைக் குழு என்னும் CAG என ஆடிட் செய்கிறது. ஆனால், PMNRF, PMCARES இரண்டுமே இதிலிருந்து விலகி இருக்கின்றன.

பொதுமக்கள் இரண்டில் எதற்கு நன்கொடை அளித்தாலும் 80G பிரிவின் கீழ் வரிவிலக்குப் பெற முடியும்.

அதே போல், RTI சட்டத்தின் மூலம் PMNRF-க்கு யாரெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார்கள் போன்ற தகவல்களைப் பெற இயலாது. PMCARES-க்கும் இதே நிலைதான் நீடிக்கும் எனக் கணிக்கிறார்கள், RTI ஆர்வலர்கள். ’RTI சட்டத்தின் கீழ் தங்களுக்கு நிதி தந்த நன்கொடையாளர்களின் பெயர்களையோ, உதவி பெற்றவர்களின் பெயரையோ வெளியிட நிர்ப்பந்திக்க முடியாது’ என அறிவித்தது PMNRF.

RTI
RTI

ஏனெனில், PMNRF அரசுப் பொதுத் துறைக்குக் கீழ்வரும் அறக்கட்டளை அல்ல. மே 2018-ல் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின், அடுத்தகட்ட அமர்வு வருகின்ற ஜூலை மாதம் நடக்கவிருக்கிறது. இதே சட்ட திட்டங்கள் PMCARES-க்கும் பொருந்தும். பாராளுமன்றத்தில் PMNRF நிதிகள் குறித்துக் கேள்வியெழுப்ப முடியாது. RTI தகவல்கள் பெற முடியாது, மத்திய தணிக்கைக் குழு ஆடிட் செய்ய முடியாது.

2012-ல் இருந்து இதில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை எனப் போராடிவரும் அஸீம் டக்யாரின் வழக்குதான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. (2018 தீர்ப்பு பிரதியைக் காண ).

download

PMCARES-ல் தற்போது மிரட்டல் தொனியில் நன்கொடை வேட்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அரசின் பல சங்கங்கள் தாமாகவே முன்வந்து தங்களின் ஒருநாள் ஊதியத்தைக் கொடுக்க முன்வந்துள்ளன. ’ஒருவர் சுய விருப்பத்தின் பெயரில் தந்தால் போதும், யாருக்கும் கட்டாயம் இல்லை’ என்கிறது இந்தக் குறிப்பு. ஆனால், அனைத்து அரசு ஊழியர்களிடமும் PMCARES-க்கான நிதி கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள். அதுவும் நிதி அமைச்சகத்துக்குக் கீழ்வரும் வருவாய்த்துறை ஒருபடி மேலே போய், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, ஒவ்வொரு ஊழியரும் 12 மாதங்களிலும் ஒருநாள் ஊதியத்தை PMCARES ஃபண்டுக்கு அளிக்க வேண்டும். இன்னொன்று, ஒருவருக்கு நன்கொடை அளிக்க விருப்பம் இருந்தாலும், அவருக்கு விருப்பப்பட்ட இடத்தில் அந்த நன்கொடையை அளிக்க வாய்ப்புத்தர வேண்டும். இப்படி அரசு ஊழியர்களிடம் ப்ரோ நோட்டில் கையெழுத்து வாங்காத குறையாக வசூல் செய்வது எவ்விதத்தில் அறம் எனத் தெரியவில்லை.

இப்படியாக அரசின்கீழ் இருக்கும் ஒவ்வொரு துறையிலும் கீழ்மட்ட ஊழியர்கள் வரை இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. இப்படியாக வசூலிக்கப்படும் பணத்துக்கும் வெளிப்படைத்தன்மை இருக்காது என்பதுதான் நம்மை அதிகமாக அச்சமூட்டுகிறது. இந்த விஷயங்களில்தான், வெளிப்படைத்தன்மையில் PMNRF-ஐ விடவும், PMCARES பின் தங்கி இருக்கிறது. காரணம் ஏற்கெனவே சொன்னதுதான். அரசு ஊழியர்களோ, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் இருந்தோ PMNRF-க்கு நன்கொடை அளிக்க இயலாது.

PMNRF Inocme and  Expenditure
PMNRF Inocme and Expenditure

PMNRF தளத்தில் கடந்த பத்தாண்டுகளில் நன்கொடையாக அளிக்கப்பட்ட தொகை, உதவி செய்த தொகை, போன்றவற்றின் மொத்த எண்ணிக்கையை நம்மால் காண முடியும். அதே போல், ஒரு குறிப்பிட்ட பேரிடருக்கு, எவ்வளவு தொகை பிரதமரின் இந்த நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதனையும் பார்க்க முடியும். அதைப் போலவே , PMCARES-லும் பார்க்க முடியுமா என்பதை அடுத்தடுத்த மாதங்களில்தான் முடிவு செய்ய முடியும்.

அடுத்த கட்டுரைக்கு