Published:Updated:

``அரசு ஊழியர்கள், பணி நீட்டிப்பு கேட்கவேயில்லை!'' - வெளிவரும் ரகசியங்கள்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்துப் பேசும் அமைச்சர் ஜெயக்குமார், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்று பதிலடிகொடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு அதிகரித்து, தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்புமாக, கலந்துகட்டிய ரியாக்‌ஷன்கள் கிடைத்துவருகின்றன.

நடப்பு ஆண்டில் பணிஓய்வு பெற இருந்தவர்களுக்கு, இந்த அறிவிப்பு பால்வார்த்திருக்கிறது என்றால், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்போடு வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலக் கனவுகளை கருக்கிவிட்டது, அரசின் இந்த அறிவிப்பு!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதுகுறித்துப் பேசும் 'தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி'யின் பொதுச்செயலாளர் ச.மயில்,

''தமிழ்நாட்டில், படித்துமுடித்து வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில், ஆசிரியர் பணியிடங்களுக்காகக் காத்திருப்போர் பட்டியல் மட்டுமே பல லட்சங்களைத் தொடும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியர் காலிப் பணியிடங்கள் போதுமான அளவில் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது... வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரிடியாகவே இறங்கியிருக்கிறது. இதுமட்டுமல்ல, பதவி உயர்வுக்காக அடுத்தடுத்த நிலையில் காத்திருப்போருக்கும் அரசின் இந்த அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக் கல்வித் துறையில், எந்த வருடமும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மே 31-ம் தேதியோடு பணி ஓய்வு பெறப்போகிற ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழாகப் பலன் பெறப்போகிற ஆசிரியர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதமாக இருந்தது. இதன்படி பணிஓய்வு பெறுகிற ஓர் ஆசிரியருக்கு பணப்பலன்கள் மொத்தமாக 20 லட்சம் ரூபாய்வரை அரசு கொடுக்கவேண்டியிருக்கும். ஆக, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகத்தான், அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மற்றபடி, எந்த ஓர் ஆசிரியரும் 'பணி நீட்டிப்பு வழங்குங்கள்' என அரசுக்கு கோரிக்கை எதுவும் வைக்கவேயில்லை.

'பணி நீட்டிப்பு கிடைக்கிறதே...' என்று சிலர் இதை வரவேற்கலாம். ஆனால் பெரும்பாலானோர், 'மகள் கல்யாணம், வீட்டுக் கடன்' என்பதுபோன்ற மிகப்பெரிய செலவுகளுக்குத் தாங்கள் ஓய்வு பெறப்போவதன் மூலமாகக் கிடைக்கும் பணப்பலன்களை நம்பித்தான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் எல்லாம் இந்தப் பணி நீட்டிப்பை விரும்பவில்லை. எனவே, அரசே முன்வந்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும். படித்துமுடித்து பல வருடங்களாக வேலையின்றித் தவித்துவரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற இது ஒன்றுதான் வழி!'' என்றார் அக்கறையோடு.

'தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க' மாநிலத் தலைவரும் 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.அன்பரசு, ''தமிழகத்துக்குத் தேவையான கொரோனா நிவாரண நிதி உரிமையை, மத்திய அரசிடம் கேட்டுப்பெற தைரியமில்லாத தமிழக அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்தது. இந்த வகையில் மட்டும் மொத்தம் 15 ஆயிரம் கோடி ரூபாயை எங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஈட்டிய விடுப்புத் தொகையான 2,300 கோடி ரூபாயையும் நிறுத்திவைத்துள்ளது.

`கொலை… சாலை மறியல்… முற்றுகை!’ - தேனி டாஸ்மாக் களேபரங்கள்
ச.மயில் - மு.அன்பரசு
ச.மயில் - மு.அன்பரசு

இந்த நிலையில்தான், 'அரசு ஊழியர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், பணி ஓய்வு பெறுகிறவர்களுக்கான வயது வரம்பை 58-லிருந்து 59-ஆக நீட்டித்துள்ளோம்' என முதல்வரே அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர் சங்கத்திலிருந்து ஒருவர்கூட இப்படியொரு கோரிக்கையை வைக்கவேயில்லை. ஆனாலும்கூட, இப்படியொரு நிலைப்பாட்டை அரசு எடுத்திருப்பதன் பின்னணியில், ஓய்வுபெறுகிறவர்களுக்கு பணப்பலன்களைக் கொடுக்க அரசிடம் நிதிநிலை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஆக, தனது இயலாமையை மறைப்பதற்கும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்தின் உரிமையைப் போராடிப் பெற தைரியமில்லாத கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவும், 'ஊழியர்கள் கேட்டுக்கொண்டார்கள்' என்று வீண்பழி சுமத்தியிருக்கிறது தமிழக அரசு.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பதவி உயர்வு கிடைக்கப்பெறாமல் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்களையும் ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பதற்கான வேலைகளைத் திரைமறைவில் செய்துவரும் அரசு, இந்த ஓராண்டு இடைவெளியில் அதை முழுமையாக நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகளைச் செய்துமுடித்துவிடும் என்றே சந்தேகிக்கிறோம்'' என்றார் கொதிப்பாக.

அரசு ஊழியர்களின் இந்தக் கேள்விகளுக்கு மத்தியில், 'பணி நீட்டிப்பு' உத்தரவின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்துப் பேசுவோர், ''டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருப்பதால், பொதுமக்களிடையே அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்துதான், டாஸ்மாக் திறக்கப்பட்ட அன்றே 'பணி நீட்டிப்பு' என்ற உத்தரவை வெளியிட்டு, மக்களின் எதிர்ப்புணர்வு குறித்த செய்தியை மட்டுப்படுத்தவும், அரசு ஊழியர்களாக உள்ள நடுத்தர மக்களின் ஆதரவைப் பெறவுமாக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார்கள்.

அடுத்ததாக, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. ஏற்கெனவே நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துவருகிறது தமிழக அரசு. இந்த நிலையில், இப்படியொரு உத்தரவை வெளியிட்டிருப்பதன் மூலம், மீதமிருக்கும் இந்த ஒரு வருட கால ஆட்சியையும் நிதி நெருக்கடியின்றி நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று அரசு நினைக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதாவது, இந்த வருடம் பணிஓய்வு பெறவிருந்தவர்கள் அனைவருமே அடுத்தவருடம்தான் பணிஓய்வு பெறுவார்கள் என்கிறபோது, அவர்களுக்கான பணப்பலன்கள் அனைத்தையும் வரப்போகிற புதிய அரசுதான் கொடுக்கவேண்டி வரும் என்று திட்டமிட்டே செயல்பட்டிருக்கிறார்கள். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், எப்படியும் அ.தி.மு.க வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அவர்களாகவே ஒப்புக்கொள்கிற மாதிரிதான் இந்த நடவடிக்கை இருக்கிறது'' என்கின்றனர்.

'ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கச் சொல்லி ஊழியர்கள் கோரியது உண்மையா, மத்திய அரசிடம் மாநில நிதி உரிமையைப் போராடிப் பெறமுடியாததால் இப்படியொரு உத்தரவு வெளியிடப்பட்டதா அல்லது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவா' என தமிழக அரசுக்கு எதிராக எழுப்பப்படும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கேட்டு, 'பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை' அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்...

''பணிஓய்வுக் காலத்தை 58-லிருந்து 60-ஆக உயர்த்தச்சொல்லி, ஏற்கெனவே ஊழியர்கள் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடிவரும் நெருக்கடியான இந்தச் சூழலில், அரசுத் துறைகளில் பணியாற்றிவரும் அனுபவம் மிக்க ஊழியர்களின் பணித் திறமை அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் ஓய்வுபெறும் வயதை ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு... வடசென்னையை விஞ்சுகிறதா தென்சென்னை? #ChennaiUpdate
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

இந்த அறிவிப்பை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். அடுத்ததாக, தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, 2011-ம் ஆண்டிலிருந்து இதுநாள் வரையிலும் அரசின் அனைத்துத் துறைகளிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. எனவே, 'இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டது, வேலைவாய்ப்புகள் தனியார் மயமாக்கப்பட்டுவிடும்' என்றெல்லாம் சொல்வது வெறும் கற்பனை வாதம்.

வரவிருக்கிற 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-தான் வெற்றிபெறப்போகிறது. ஆனால், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தான் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற கதையாக, 'இது தேர்தல் கணக்கு, மத்திய அரசிடம் பயந்துவிட்டார்கள்' என்றெல்லாம் அரசியல் முடிச்சுப் போட்டு பார்க்கிறார்கள்!'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு