Published:Updated:

மன்றாடும் மாநிலங்கள்... பாரபட்ச பிரதமர்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

டெல்லிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் மத்தியப் பிரதேசத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இதை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது

ஒவ்வொரு மாநில உயர் நீதிமன்றத்திலும் கொரோனா தொடர்பான ஏதாவது ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். ரெம்டெசிவிர் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி ஒதுக்கீடு போதவில்லை என வரிசை கட்டுகின்றன புகார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமன்றி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும்கூட இதேபோன்ற குரல்கள் ஒலிக்கின்றன.

மருத்துவமும் சுகாதாரமும் மாநில அரசின் பொறுப்பு என்றாலும், கொரோனா காலத்தில் எல்லா விநியோகங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தன. பரிசோதனைக் கருவிகள், முக்கியமான மருந்துகள் என எல்லாவற்றையும் மத்திய அரசே மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது. பிறகு தடுப்பூசிப் பகிர்வும் இதேபோல நடந்தது. இயல்பான நேரங்களில் பிரச்னை இல்லை. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உக்கிரமாகத் தாக்கத் தொடங்கியதும், எல்லா மாநிலங்களும் அபயக்குரல் எழுப்பின.

மா.சுப்பிரமணியன், இம்ரான் ரஸா அன்சாரி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி
மா.சுப்பிரமணியன், இம்ரான் ரஸா அன்சாரி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி

‘‘மத்திய அரசு மாநிலங்களிடம் இவ்வளவு பாரபட்சம் காட்டிய வரலாறு எப்போதும் கிடையாது. எல்லா விஷயங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மாநில அரசுகள் ஒவ்வொன்றுக் காகவும் கெஞ்சுகின்றன. பேரழிவை பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் நடந்த எல்லா விஷயங்களையும் அவரின் சாதனையாக பா.ஜ.க-வினர் கொண்டாடினார்கள். இப்போதைய வேதனைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்’’ என்கிறார், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்.

ஆக்சிஜனில் ஆரம்பித்தது முதல் பஞ்சாயத்து. டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துகொண்டிருந்த நேரத்தில், ‘எங்களுக்கு மத்திய அரசு போதுமான ஆக்சிஜன் தர வேண்டும்’ என டெல்லி அரசு வழக்கு போட்டது. டெல்லி உயர் நீதிமன்றம் உடனே மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நேரத்தில், டெல்லிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் மத்தியப் பிரதேசத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இதை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. மத்திய அரசின்மீது நம்பிக்கை இழந்து, மாநிலங்களுக்கு ஆக்சிஜன் பிரித்துக்கொடுக்க ஒரு நிபுணர் குழுவை நீதிமன்றமே அமைத்தது.

மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற பிரச்னைகள் இருந்தன. நாட்டின் மொத்த உற்பத்தியைவிட தேவை அதிகமாகிப்போன நிலையில், மத்திய அரசு தடுமாறியது. ஒரு கட்டத்தில் பஞ்சாப்பில் நிலைமை மோசமாக, ‘பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்துகொள்கிறோம். எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டது. அதை மத்திய அரசு மறுத்துவிட்டது.

மன்றாடும் மாநிலங்கள்... பாரபட்ச பிரதமர்!

ரெம்டெசிவிர் மருந்துகளைப் பகிர்ந்து கொடுப்பதிலும் பாரபட்சம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு மாநிலத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே ரெம்டெசிவிர் வழங்கப்பட வேண்டும். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டதாக மற்ற மாநிலங்கள் குற்றம் சாட்டின.

தடுப்பூசி விஷயத்தில் இந்தக் குற்றச்சாட்டு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. மற்ற நாடுகள் பலவும் ‘அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசி’ என்று திட்டமிடலில் இருக்க, ‘45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசத் தடுப்பூசி கிடைக்கும்’ என மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசின் பொறுப்பில் தள்ளிவிட்டது மத்திய அரசு. சில மாநிலங்கள் இலவசத் தடுப்பூசியை அறிவித்தன. பல மாநிலங்கள் இன்னமும் முடிவெடுக்கவில்லை.

தடுப்பூசிக்காகப் பல மாநிலங்கள் மன்றாடுகின்றன. இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் இருப்பது தெலங்கானா மாநிலத்தில். ஆனால், அந்த மாநிலத்தில் மே 15 முதல் 22 வரை வெறும் 12,331 பேருக்கே தடுப்பூசி போடப்பட்டன. மிகச் சிறிய கோவா மாநிலத்தில் இரண்டே நாள்களில் இதைவிட அதிகம் தடுப்பூசி போட்டுவிட்டனர். தெலங்கானா மாநிலம் போர்க்கொடி தூக்கிய பிறகே தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன.

குஜராத்துக்கு அதிக தடுப்பூசி ஒதுக்கப்படுவதாகப் பல மாநிலங்கள் புகார் செய்கின்றன. ‘‘மகாராஷ்டிராவில் பாதி மக்கள்தொகை கொண்டது குஜராத். எங்களுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஒதுக்குகிறது மத்திய அரசு. குஜராத்துக்கு 1.62 கோடி தடுப்பூசிகளைத் தருகிறது. இது எந்த வகையில் நியாயம்? மோடி ஏன் குஜராத் மீது கருணைகொண்டு எங்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறார்’’ என்று கேட்கிறார் மகாராஷ்டிரா அமைச்சர் அரவிந்த் சாவந்த். அது மட்டுமில்லை, ‘‘வெளிநாடுகளிலிருந்து வந்த உதவிப் பொருள்களைக்கூட பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும், நட்புக் கட்சிகளின் செல்வாக்கில் உள்ள மாநிலங்களுக்கும் கொடுத்தது மத்திய அரசு. மகாராஷ்டிராவுக்குக் கொடுக்கவில்லை’’ என்று குற்றம் சாட்டுகிறார், மாநில காங்கிரஸ் பிரமுகர் சச்சின் சாவந்த்.

‘‘6.37 கோடி மக்கள்தொகை கொண்ட குஜராத்துக்கு 16.4 சதவிகித தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 8.38 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு வெறும் 6.4 சதவிகித தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. இது அநீதி’’ என்கிறார் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

காஷ்மீரிலும் சர்ச்சை எழுந்துள்ளது. பா.ஜ.க வலுவாக இருக்கும் ஜம்மு பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 99.39 சதவிகிதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டனர். நகர் பகுதியில் 35.5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே போட்டுள்ளனர். ‘‘மோசமான தொற்றுநோய் பரவும் நேரத்தில் ஒரு பகுதிக்கு முன்னுரிமை கொடுத்து, இன்னொரு பகுதியைப் புறக்கணிப்பது வேதனை’’ என்கிறார் முன்னாள் அமைச்சர் இம்ரான் ரஸா அன்சாரி. இத்தனைக்கும் பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர் இவர்.

மாநில அரசுகள் நேரடியாகத் தடுப்பூசிகள் வாங்குவதற்கு குளோபல் டெண்டர் விட முடிவு செய்தன. அதிலும் இப்போது சிக்கல். ஃபைஸர், மாடெர்னா போன்ற வெளிநாட்டுத் தடுப்பூசி நிறுவனங்கள் இப்படி மாநிலங்களுக்கு விற்பனை செய்ய மறுத்துள்ளன. மத்திய அரசுக்கே தர முடியும் என்கின்றன. சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் போன்ற இந்திய நிறுவனங்களில், மாநில அரசுகள் நிறைய வாங்கவும் முடியாது. 18-44 வயதில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாதா மாதம் மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி ஒதுக்கீடு செய்கிறதோ, அந்த அளவுக்கே பணம் செலுத்தி மாநில அரசுகள் வாங்கிக்கொள்ள முடியும். இதனால்தான் மாநிலங்கள் தடுப்பூசி போட முடியாமல் தடுமாறுகின்றன.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

‘‘இது கிட்டத்தட்ட போர்க்காலச் சூழல். மத்திய அரசுதான் எல்லா மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை வாங்கித் தர வேண்டும். ஒரே தேசமாக இணைந்து செயல்பட வேண்டும். நாளை பாகிஸ்தான் போர் தொடுக்கிறது என்றால், ஒவ்வொரு மாநிலமும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று விட்டுவிட முடியுமா? டெல்லி மாநிலம் தனியாக ஆயுதங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்பீர்களா? உத்தரப்பிரதேசம் தன் பாதுகாப்புக்கு டாங்குகள் வாங்க வேண்டும் என்பீர்களா?’’ என்று கேட்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் பிரதமரின் படமே இருக்கிறது. ‘நாங்கள்தான் செலவு செய்கிறோம். இதில் எதற்கு அவர் படம்’ என சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இதில் பிரதமர் படத்தை அகற்றிவிட்டன. ‘‘தடுப்பூசியைத் தன் விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏன் அதற்குச் செய்யும் சுமையை மாநிலங்களின் தலையில் கட்டுகிறார்? மாநிலங் களைத் தடுப்பூசித் தட்டுப்பாட்டில் தவிக்க விடுகிறார்?’’ என்று கேட்கிறார் பிரியங்கா காந்தி.

‘‘வரும் டிசம்பர் மாதத்துக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்கும்’’ என்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன். ஆனால், இந்தியத் தடுப்பூசிகள் இரண்டும் அவ்வளவு கிடைக்காது. ஃபைஸர், மாடெர்னா போன்ற நிறுவனங்கள் வரும் 2023 வரை தயாரிக்கும் தடுப்பூசிகளுக்கு இப்போதே உலக நாடுகள் பலவும் புக்கிங் செய்துவிட்டன. அமெரிக்கா சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த நிறுவனங்களிடம் பேசுகிறார். இந்தியாவில் அவர்கள் கேட்கும் விதிவிலக்குகள் கிடைத்து, நம் நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்கும் பணி தொடங்கினால் நமக்கு ஓரளவு கிடைக்கலாம். ஆனால், இந்த ஆண்டு டிசம்பருக்குள் வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை.

இந்த இக்கட்டான சூழலில், தடுப்புசிகள், மருந்துகள், ஆக்சிஜன், நிதி என அனைத்திலும் மாநிலங்களுக்கிடையில் பாரபட்சமற்ற பகிர்வை பிரதமர் உறுதிசெய்ய வேண்டும்!

மன்றாடும் மாநிலங்கள்... பாரபட்ச பிரதமர்!

நிவாரணத்தில் பாரபட்சம்!

சமீபத்தில் டவ்தே புயல் இந்தியாவின் மேற்குக்கரையைத் தாக்கியது. உடனடியாக குஜராத் மற்றும் டையூ டாமன் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்ட பிரதமர், குஜராத்துக்கு 1,000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்தார். பொதுவாக மத்தியக் குழு வந்து பார்வையிட்ட பிறகே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகும். பக்கத்தில் இருக்கும் மகாராஷ்டிராவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த மாநிலத்துக்கு மோடி போகவில்லை. ‘‘ஏன் இந்தப் பாரபட்சம்?’’ என்று ஆளும் சிவசேனா கட்சி கேட்டது.

யாஸ் புயல் அபாயம் இருந்தபோது, மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலியில் உரையாடினார். ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களுக்கு புயல் தற்காப்புப் பணிகளுக்காக தலா 600 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, மேற்கு வங்காளத்துக்கு 400 கோடி ஒதுக்கியது.

‘‘மக்கள் நெருக்கத்திலும் பரப்பளவிலும் மூன்றிலும் பெரிய மாநிலம் மேற்கு வங்காளம். ‘எங்களுக்கு ஏன் குறைவான நிதி’ என அமித் ஷாவிடம் கேட்டேன். ‘அறிவியல்பூர்வமாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது’ என்றார் அவர். எனக்கு அறிவியல் அந்த அளவுக்குத் தெரியாது. ஆனால், அரசியல் அறிவியல் தெரியும்’’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி.

கவுஷல் ராஜ் சர்மா
கவுஷல் ராஜ் சர்மா

வாரணாசியில் ஸ்பெஷல் கவனம்!

பிரதமரின் தொகுதியான வாரணாசியில் கொரோனாத் தடுப்புப் பணிகளைச் செய்வதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் ஒன்று 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதில் 355 பேர் பணியாற்றுகிறார்கள். நாட்டிலேயே மிகச் சிறப்பான கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் இங்கு செய்யப்படுகின்றன. வீட்டுக் கண்காணிப்பு முதல் மருத்துவமனை அட்மிஷன் வரை ஒரே ஒரு போன் காலில் கிடைத்துவிடுகின்றன.

‘‘இங்கிருக்கும் எட்டு அரசு மருத்துவமனைகள், 52 தனியார் மருத்துவமனைகளை இணைத்து இரண்டு வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பித்திருக்கிறோம். ஒரு நோயாளி பற்றிய விவரங்களைப் பதிவிட்டால், எந்த மருத்துவமனையில் இடம் காலியாக இருக்கிறதோ, அந்த மருத்துவமனை உடனே முன்வந்து சேர்த்துக்கொள்ளும். ஒரு நிமிட தாமதம்கூட இல்லாமல் எல்லாம் நடக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. உ.பி மாநிலத்திலேயே அதிகம் ரெம்டெசிவிர் விநியோகம் செய்யப்பட்டது இங்குதான். பிரதமர் அலுவலகத்திலிருந்து மூன்று அதிகாரிகள் எப்போதும் இந்தக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வாரணாசி நிலவரம் பற்றி பிரதமருக்கு அறிக்கை போகிறது’’ என்கிறார் மாவட்ட கலெக்டர் கவுஷல் ராஜ் சர்மா.

மோடி குஜராத்தில் பிறந்தவர் என்றாலும், இந்தியாவுக்கே பிரதமர். வாரணாசி மக்கள் அவரை எம்.பி ஆக்கினாலும், அவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பிரதமர். ‘‘எங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் நான் உழைப்பேன்’’ என்று பதவி ஏற்கும்போது அவர் சொன்னார். குஜராத்துக்குக் கொடுத்ததுபோல எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்திருந்தால், வாரணாசியில் செய்ததை அவர் இந்தியா முழுக்கச் செய்திருந்தால், பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு வந்திருக்காதே!