Published:Updated:

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஒரு வாரம் முடிகிறது. அதற்குள் அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டத் தீ, பல்வேறு மாநிலங்களுக்கும் பரவி, வட இந்தியாவும் வட கிழக்கு இந்தியாவும் பற்றி எரிகின்றன. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. இதன் காரணம் என்ன?

குடியுரிமை சட்டத் திருத்தம் எதிர்ப்புப் போராட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தம் எதிர்ப்புப் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டு ஒரு வாரம் ஆகும்நிலையில், அஸ்ஸாமில் தொடங்கிய போராட்டத் தீ, திரிபுரா, மணிப்பூர், மேற்கு வங்காளம், மேகாலயா, டெல்லி எனப் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. வட இந்தியாவும் வட கிழக்கு இந்தியாவும் பற்றி எரிகின்றன. `நாடாளுமன்றம் அவர்களுடையதாக இருக்கலாம். ஆனால், இந்த வீதிகள் உங்களுடையது’ என்ற முழக்கங்கள் மாணவர்களால் எழுப்பப்படுகின்றன.

'பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் இந்து மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்' என 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது பி.ஜே.பி. அதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு, இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. அதனால் பின்வாங்கியது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடந்த ஆண்டு, அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு மூலமாக, யார் இந்தியாவின் குடிமக்கள் எனக் கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், 19 லட்சம் பேர் குடியுரிமை இழந்தனர். தற்போது, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே, அஸ்ஸாமில் போராட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன?

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக, ‘1955 குடியுரிமை சட்ட’த்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, இந்த சட்டத் திருத்தம் பொருந்தும்.

அமித் ஷா
அமித் ஷா
``இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்!”- அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்த சட்டத் திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்த, இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள், மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கு இது பொருந்தாது.

ஏன் போராட்டம்?

வடகிழக்கு மாநிலங்களில், வங்காள தேசத்தைச் சேர்ந்த அகதிகள் பெரும்பான்மையாகக் குடியேறிவிட்டதாகவும், அதனால் வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாகப் பிரச்னை நிலவுகிறது. இந்த சட்டத் திருத்தம் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படுவதால் போராட்டம் வெடித்தது.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருக்கும் அஸ்ஸாம் கன பரிஷத் உட்பட, பல்வேறு கட்சிகளும் மக்களும் அஸ்ஸாம் வீதிகளைப் போராட்டக்களமாக மாற்றினர். அஸ்ஸாம் தலைநகர் டிஸ்பூரில், சட்டமன்றம் நோக்கி மக்கள் பேரணி நடத்த முயற்சிசெய்ய, அது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கலவரமாக மாறியது. போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டன. தற்போதைய நிலவரப்படி, 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அஸ்ஸாமில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவிலும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்காளத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, 5 இடங்களில் ரயில்கள் கொளுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்டத் திருத்தத்தை அற வழியில் எதிர்ப்போம் எனவும், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சட்டத்திருத்தம் மேற்கு வங்காளத்தில் அமலில் வராது என்று பத்திரிகைகளில் விளம்பரங்களும் கொடுத்தது மம்தா அரசு. அதை அம்மாநில ஆளுநரே விமர்சிக்கவும் செய்தார். மேற்கு வங்க மாநில பி.ஜே.பி, மாநில சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அறிவித்தது. எனினும் மம்தா பானர்ஜி, 'பி.ஜே.பி-யினர் தூண்டுதலால் சிலர் வன்முறையில் இறங்கியுள்ளனர்' எனக் கூறியதோடு, இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் பேரணி நடத்தியுள்ளார்.

டெல்லியில் என்ன போராட்டம்?

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கும், டெல்லி முதலான மற்ற பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில், வங்காள தேசத்திலிருந்து வரும் இந்துக்கள் குடியேறினால், தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுகின்றனர். டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், 'இந்திய அரசு ஒரு மனிதனைத் தனது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட இந்தச் சட்டத் திருத்தம் உதவுவதாகவும், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கை மீதான தாக்குதல் இந்தச் சட்டத் திருத்தம் எனவும் கூறுகின்றனர்.

டெல்லி போராட்டம் - ஜாமியா
டெல்லி போராட்டம் - ஜாமியா
"காவல்துறை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் நுழைந்துள்ளது. டெல்லி காவல்துறை மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்."
நஜ்மா அக்தர், ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு? - மாணவர்கள் குற்றச்சாட்டும் காவல்துறை விளக்கமும்!

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவதாக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 15 அன்று பல்கலைக்கழகத்திலிருந்து பேரணி தொடங்கியது. ஜாமியா பல்கலைக்கழகம், டெல்லி ஓக்லா சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. இது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி. பேரணி நடத்தும் மாணவர்களோடு அந்தப் பகுதி மக்களும் இணைந்துகொண்டனர். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பேரணி நடத்திய மாணவர்கள் மீது திடீரென டெல்லி காவல்துறை தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை எனவும், கண்மூடித்தனமாக நடத்தப்பட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். போராட்டத்தில் பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் கல் வீசியதாகவும் டெல்லி காவல்துறை கூறியது.

காவல்துறை, ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது. ஏற்கெனவே தயாராக வைக்கப்பட்டிருந்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மாணவர்களை நோக்கி வீசப்பட்டன. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி, காவல்துறையினரால் தாக்கப்பட்டது. ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நஜ்மா அக்தர், "காவல்துறை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் நுழைந்துள்ளது. டெல்லி காவல்துறை மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஷஹீன் அப்துல்லாவைக் காப்பாற்றும் ஆயிஷா ரென்னா
ஷஹீன் அப்துல்லாவைக் காப்பாற்றும் ஆயிஷா ரென்னா
Twitter
`கூட்டணி தர்மத்துக்காகக் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு' எனச் சொல்லும் ராமதாஸுக்கு 20 கேள்விகள்!

ஜாமியா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயிலும் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஷஹீன் அப்துல்லா, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருபவர். அதற்காகவே அவர் தாக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர், ஷஹீன் அப்துல்லா கல்வீச்சில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஷஹீன் அப்துல்லாவைக் காப்பாற்ற, அவரது தோழி ஆயிஷா ரென்னா எதிர்க்கும் காட்சி, ஜாமியா போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

பிபிசி ஊடகத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் புஷ்ரா ஷேக், டெல்லி காவல்துறை தனது செல்போனை அபகரித்ததாகவும், ஆண் காவலர் ஒருவர் தன் தலைமுடியை இழுத்ததாகவும், லத்தியால் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், காவலர்கள் பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்றதாகவும், கழிவறைகளில் நுழைந்து பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக, உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.
"போராட்டம் நடத்துபவர்கள் யாரென்று அவர்களின் உடையைப் பார்த்தாலே தெரிகிறது."
பிரதமர் மோடி
மோடி
மோடி
ANI

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி, "போராட்டம் நடத்துபவர்கள் யாரென்று அவர்களின் உடையைப் பார்த்தாலே தெரிகிறது" எனக் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராடுபவர்களுக்கு மதச்சாயம் பூசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 50 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். டெல்லி கல்காஜி காவல் நிலையத்தில் 35 மாணவர்கள் சிறைவைக்கப்பட்டதால், ஜே.என்.யூ மாணவர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, பீம் ராணுவத்தின் தலைவர் சந்திரசேகர் ராவண் முதலானோர் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலையில், மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள்மீது வன்முறையில் ஈடுபட்டது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது முதலான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறைமீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா மாணவர்கள் போராட்டம்
சென்னை லயோலா மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. சென்னை, புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்திவருகின்றன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாப்டே, "குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வன்முறைகளும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதும் நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, விசாரணை நடத்தும் எனவும் கூறியுள்ளார்.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து, தற்போது மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வரலாற்றில் மாபெரும் போராட்டமாக குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்புப் போராட்டம் மாறிவருகிறது.