Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: தொகுதிப் பங்கீடு நிறைவு - என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க எத்தனை இடங்களில் போட்டி?

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க கூட்டணி விவகாரத்தில் இழுபறி நீடித்துவந்த நிலையில், இன்று கூட்டணி முடிவு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டையும் அறிவித்திருக்கிறார் ரங்கசாமி.

கடந்த 2016 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியுடன் சந்தித்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம்வகித்த நமச்சிவாயம், எம்.எல்.ஏ-க்கள் தீப்பாய்ந்தான் மற்றும் ஜான்குமார் போன்றவர்களை அமலாக்கத்துறை அஸ்திரத்தின் மூலம் தங்கள் அணிக்கு இழுத்து காங்கிரஸ் அரசை கவிழ்த்த மத்திய பா.ஜ.க அரசு, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என்று முதலில் கணக்கு போட்டது.

தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்து போடும் ரங்கசாமி
தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்து போடும் ரங்கசாமி

ஆனால், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு தங்களின் பலம் கூடிவிட்டதாக நினைத்த பா.ஜ.க., மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸை டம்மியாக்கிவிட்டு தனது தலைமையில் ஆட்சி அமைக்க வியூகம் அமைப்பதாகத் தகவல் கசிந்தது. ’புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று காரைக்காலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சும் அந்தப் போக்கிலேயே இருந்தது.

ஏற்கெனவே `முதல்வர் பதவி’ என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜ.க-வில் தங்கள் அணிக்கு வளைத்துப் போட்ட விவகாரம் ரங்கசாமியை முகம்சுளிக்கவைத்தது. அதேபோல `நம் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வராக்குவதுதான் நமக்கு நல்லது’ என்ற பா.ஜ.க தலைமை விவாதித்துக்கொண்டதும் அவர் காதுகளுக்குச் சென்றது. அதேபோல என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆள் மாறாட்ட, முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரத்தை பா.ஜ.க வளைத்துப்போட்டதையும் ரங்கசாமியை யோசிக்கவைத்தது.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி உடன்பாடு

அதுவரை, `18 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்’ என்று பா.ஜ.க தரப்பிடம் பேசிவந்த ரங்கசாமி, அதன் பிறகு அவர்களுக்குப் பிடிகொடுக்காமல் விலக ஆரம்பித்தார். தொடர்ந்து `என்.ஆர்.காங்கிரஸ் இல்லாமல் அ.தி.மு.க-வுடன் தேர்தலைச் சந்தித்தால் புதுச்சேரியில் நாம் போணியாக மாட்டோம்’ என்று உள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் அட்வைஸ் செய்ததையடுத்து, `நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். 17 இடங்களில் போட்டியிடுங்கள்’ என்று இறங்கிவந்தது அக்கட்சியின் தலைமை. ஆனால், அதன் பிறகும் பிடிகொடுக்காமல் இருந்தார் ரங்கசாமி.

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் ரங்கசாமியிடம் பலமுறை பேசியும் தனது மௌனத்தை கலைத்துக்கொள்ளாமல் வலம்வந்தார் ரங்கசாமி. ``காளை மாட்டிலிருந்துகூட பால் கறந்துவிடலாம், கூட்டணி குறித்து ரங்கசாமியிடமிருந்து வார்த்தைகளைப் பெற முடியவில்லை” என்று பாஜ.க தலைமையிடம் புலம்பினார்கள் உள்ளூர் நிர்வாகிகள். ’சின்னப் பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று முடிவெடுத்த பா.ஜ.க மேலிடம், நேரடியாகக் களத்தில் இறங்கியது.

ரங்கசாமி
ரங்கசாமி

தமிழ் மற்றும்இந்தி இரண்டு மொழிகளையும் பேசும் ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகளைக்கொண்டு ரங்கசாமியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது பா.ஜ.க தலைமை. மார்ச் 9-ம் தேதி ஸ்ரீஅப்பா பைத்தியம் கோயிலுக்குச் சென்ற ரங்கசாமியை வளைத்த அந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள், தங்களது செல்போன் மூலமாக அமித் ஷாவுக்கு வீடியோ கால் போட்டு கொடுத்தனர். அப்போது ரங்கசாமியும், அமித் ஷாவும் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரமே பேசியிருக்கிறார்கள். அதையடுத்து தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் ஆலோசனை நடத்தினார் ரங்கசாமி.

அப்போது பா.ஜ.க-வுடன் கைகோத்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது. அதனால் பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்றும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால்தான் நமக்கு நல்லது, அதனால் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்றும் தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். அதையடுத்து நேற்றிரவு தனியார் நட்சத்திர விடுதியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுச்சேரி: `நாராயணசாமி அரசு பதவி விலகாவிட்டால்..!’ - அதிரடி காட்டும் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி

அதையடுத்து இன்று மதியம் 1 மணிக்கு அண்ணாமலை நட்சதிர விடுதியில் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ரங்கசாமி. அப்போது பேசிய நிர்மல்குமார் சுரானா, ``தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ரங்கசாமி தலைமையேற்பார். அவரது தலைமையில்தான் 2021 புதுச்சேரி சட்டபேரவைத் தேர்தலை சந்திப்போம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ரங்கசாமி, ``2020 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க 14 இடங்களில் போட்டியிடும். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என்றார். `முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்துவீர்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மல்குமார் சுரானா, ``முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது பேச்சில்லை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் முன்னிலையிலேயே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு