Published:Updated:

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: அரசியலா... பொறுப்பின்மையா? - ஓர் அலசல்

``பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மாண்பைப் பற்றி யோசிக்காமல் இது போன்ற புகைப்படங்களைப் பொதுவெளியில் பரப்புவதென்பது மிகப்பெரிய வன்முறை என்கிறது சட்டம். இதுவே, நம் வீட்டுக் குழந்தைகள் என்றால், அந்தக் குழந்தைகளின் படங்களை யாராவது பொதுவெளியில் பரப்புவோமா சொல்லுங்கள்?'' என்கிறார் தேவநேயன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நாடாளுமன்றத்தை முடக்கிப்போட்ட காங்கிரஸ் கட்சிக்கு, 'ட்விட்டர் முடக்க'த்தை பதிலடியாக்கியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு” என்று கதறுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்!

அண்மையில், டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்கப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி!

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி

இந்தப் புகைப்படங்களை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட, 'பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட்டிருப்பது, போக்சோ சட்டத்தின்படி குற்றம்' எனக் கூறி 'தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம்' புகார் தெரிவித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ட்விட்டர் பக்கங்களை முடக்கியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம்!

இந்த நிலையில், 'போக்சோ சட்ட விதிமுறைகள்' குறித்துப் பேசுகிற, குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர், 'தோழமை தேவநேயன், ``ஏற்கெனவே காஷ்மீரில் இதே போன்று ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அது குறித்த செய்திகளை பெயர், படத்துடன் ஊடகங்கள் வெளியிட்டன. அப்படி படத்தை வெளியிட்ட ஊடகம் ஒவ்வொன்றுக்கும் 10 லட்சம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டது. ஏனெனில், இது பாதிக்கப்பட்ட குழந்தையின் மாண்பு சம்பந்தப்பட்ட விஷயம்.

பெண் குழந்தை
பெண் குழந்தை

தற்போது டெல்லி சிறுமி சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், போக்சோ மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் `ட்விட்டர் கணக்கு முடக்கம்' என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், இறந்துபோன சிறுமியின் சகோதரியின் படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வன்முறை. தேசத்தின் மாபெரும் தலைவர்களாக இருப்பவர்களேகூட, `பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மாண்பைப் பற்றி சிறிதும் யோசிக்காது இதுபோன்ற புகைப்படங்களை பொதுவெளியில் பரப்புவதென்பது மிகப்பெரிய வன்முறை' என்கிறது சட்டம். ஏனெனில், நம் வீட்டுக் குழந்தைகளே இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிட்டால், அந்தக் குழந்தைகளின் படங்களை யாராவது பொதுவெளியில் பரப்புவோமா... சொல்லுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது குழந்தைக்கு உதவுகிற நோக்கில், அந்தக் குழந்தையை தனது அலுவலகத்துக்கே அழைத்து ஒரு லட்சம் ரூபாய் தந்தார் போலீஸ் உயரதிகாரியொருவர். இந்த நிகழ்ச்சியைப் புகைப்படமாக எடுத்து ஊடகத்திடமும் கொடுக்கிறார் அந்த அதிகாரி. இது எவ்வளவு பெரிய வன்முறை! ஏற்கெனவே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தக் குழந்தை, நாளை பொதுவெளியில் வரும்போது, `இதுதான் அந்தக் குழந்தை' என்று மற்றவர்களால் அடையாளம் காட்டப்படும்தானே... தினம் தினம் இப்படியொரு வன்முறையை அந்தக் குழந்தையால் எதிர்கொள்ள முடியுமா... எனவே, இது போன்ற தவற்றை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அல்லது மிகப்பெரும் நிறுவனங்களோ... இப்படி யார் செய்திருந்தாலும் அது குற்றம்தான்!

தேவநேயன்
தேவநேயன்

எனவே 'நீ, நான்' என்று அரசியல் கட்சிகள் மேலும் மேலும் அரசியல் செய்துகொண்டிராமல், தவறுகளை ஏற்று திருத்திக்கொண்டு, புதிய மாற்றத்தை நோக்கிப் பயணப்பட வேண்டும். 18 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலேயே, குழந்தைகளுக்கு உண்டான மாண்பபையும் மரியாதையையும் நாங்கள் கண்டுகொள்ளவே மாட்டோம் என்ற போக்கை அரசியல் கட்சிகள் மாற்றிக்கொண்டாக வேண்டும்!'' என்கிறார் அழுத்தமாக.

ஆனால், இந்த விவகாரத்தின் பின்னணியில், 'மத்திய பா.ஜ.க அரசின் சூழ்ச்சி உள்ளது' எனக் குமுறுகிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான மாணிக் தாகூர். இது குறித்து அவர் பேசும்போது, ``ட்விட்டர் நிறுவனம் நடுநிலையோடு செயல்பட்டிருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அப்படிச் செயல்படவில்லையே! கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியே 'தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய'த்தின் ட்விட்டர் பக்கத்திலும் இதே படங்களை பதிவேற்றியிருக்கிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவரும் இதே படத்தை பதிவேற்றியிருக்கிறார்.

பெட்ரோல் விலைக் குறைப்பு முதல் புதிய டைடல் பூங்காக்கள் வரை; தமிழக பட்ஜெட்டின் டாப் 10 ஹைலைட்ஸ்!

ராகுல் காந்தியோ ஆகஸ்ட் 6-ம் தேதிதான் இந்தப் படத்தை ட்விட்டரில் பதிவேற்றினார். ஆனால், ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தை முடக்குகிற அளவுக்கு பாய்ந்து வந்து நடவடிக்கை எடுத்த ட்விட்டர் நிறுவனம், ஆணையத்தின் மீதோ அல்லது பா.ஜ.க-வினர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்? ஆக, இதன் பின்னணியில் மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தம் உள்ளது.

ஏனெனில், பாலியல் வன்கொடுமையால் பாதிப்புக்குள்ளாகி இறந்துபோன சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. டெல்லி காவல்துறை பொறுப்பைக் கையில் வைத்திருப்பவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. எனவே, டெல்லி காவல்துறை மூலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து இதைச் செய்ய வைத்திருக்கிறார்கள்.

மாணிக் தாகூர்
மாணிக் தாகூர்

மத்திய அரசு கொண்டுவந்த `புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறை'களுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் குரல்கொடுத்தபோது, அதன் நியாயத்தைப் புரிந்துகொண்டு காங்கிரஸ் கட்சியும் ட்விட்டர் நிறுவனத்துக்காக வக்காலத்து வாங்கியது. ஆனால், இன்றைக்கு அதே ட்விட்டர் நிறுவனத்தைக்கொண்டே, காங்கிரஸ் கட்சியினரின் கணக்குகளை முடக்குகிறார்கள் என்றால், அந்த நிறுவனத்தையே பா.ஜ.க-வினர் மிரட்டியிருக்கிறார்கள்.

ஒரு மாதத்துக்கு முன்புதான் டெல்லி காவல்துறை ஆணையராக குஜராத்தைச் சேர்ந்த ராகேஷ் அஸ்தானா என்பவரை நியமித்திருக்கிறார் அமித் ஷா. இந்த ஆணையர் பொறுப்பேற்ற பிறகுதான், ட்விட்டர் நிறுவனத்தின் மேல் இருக்கக்கூடிய அழுத்தம் இன்னும் கூடியிருக்கிறது. எனவே, வேறு வழியில்லாமல் இப்படியொரு நடவடிக்கையை அந்த நிறுவனமும் எடுத்திருக்கிறது. எங்கள்மீது நடவடிக்கை எடுத்த ட்விட்டர் நிறுவனம், ஏன் பா.ஜ.க-வினர் மீதோ அல்லது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மீதோ நடவடிக்கை எடுக்கவில்லை?'' என்கிறார் காத்திரமாக.

தமிழ்நாடு பட்ஜெட் 2021: Live Updates: ``பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு!"

தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவுத் தலைவர் பிரசாத்திடம், 'இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க செயல்படுவதான' குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டோம்....

``டெல்லி சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்பட்டிருப்பது மிகப்பெரிய கொடூரச் செயல். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி அரசியல் செய்தார் என்பதுதான் இங்கே மிகப்பெரிய குற்றச்சாட்டு.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் புகைப்படத்தை ராகுல் காந்தி பொதுவெளியில் பயன்படுத்திவிட்டார் என்று குழந்தைகள் நல ஆணையம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையிலேயே ட்விட்டர் நிறுவனமும் காங்கிரஸ் கட்சியினரின் அக்கவுன்ட்களை முடக்கிவைத்துள்ளது. இதில் பா.ஜ.க அரசு எங்கிருந்து வந்தது?

பிரசாத்
பிரசாத்

இதேமாதிரியான புகைப்படத்தை 'தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய'மும் வெளியிட்டுள்ளது என்றால், அதன் நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இது போன்ற கொடூரச் செயல்களை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில்தான் ஆணையம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. எனவே இது எச்சரிக்கையின் அடைப்படையிலும், அறிவுறுத்தலின் அடிப்படையிலுமானது என்று புரிந்துகொள்ள வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியையும் ஆணையத்தையும் ஒன்றாக சேர்த்துப் பார்க்கக் கூடாது!

ஏனெனில், ஒரு நீதிமன்றத்தின் உள்ளே நீதிக்காக பல விஷயங்கள் பேசப்படலாம். ஆனால், அதே பேச்சுகள் நீதிமன்றத்தின் வெளியே பேசப்படக் கூடாது. எனவே, ஆணையம் புகைப்படத்தை வெளியிட்டது என்றால், அது 'நீதி கிடைக்கவேண்டும்' என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தைக் கையாண்டிருப்பதென்பது வெறும் அரசியல் ஆதாயத்துக்காக...!'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு