Published:Updated:

``தோல்வியுற்றது கர்நாடக மக்கள்தான்!”- நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ராகுல் காந்தி

விஷ்ணுராஜ் சௌ

குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன்காரணமாக, 6 உறுப்பினர்கள் இல்லாததால், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. பி.ஜே.பி, காங்கிரஸ், ம.ஜ.த என மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த ஆட்சி அமைக்க முழு ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ்.

கர்நாடகா சட்டப்பேரவை
கர்நாடகா சட்டப்பேரவை

கர்நாடகாவில் கிட்டத்தட்ட ஓராண்டுகளாக ம.ஜ.த மற்றும் காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ், ம.ஜ.த கட்சியைச் சார்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்தனர். இந்த நிகழ்வு கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 12-ம் தேதி முதல் கர்நாடக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பி.ஜே.பி-யினர் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பானது நேற்று நடைபெற்றது. அதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன்காரணமாக, 6 உறுப்பினர்கள் இல்லாததால், குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ``கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி உருவாகிய முதல் நாளில் இருந்தே, இந்தக் கூட்டணியைத் தங்களின் அதிகாரத்துக்கான பாதையின் தடையாகவே பார்த்தார்கள். அவர்களின் பேராசை வென்றது. ஜனநாயகம், நேர்மை மற்றும் கர்நாடக மக்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர் “ எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ``எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்க முடியாது. அனைவரையும் கொடுமைப்படுத்த முடியாது. ஒவ்வொரு பொய்யும் இறுதியில் அம்பலப்படுத்தப்படுவதை ஒருநாள் பி.ஜே.பி கண்டுபிடிக்கும்” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.