Election bannerElection banner
Published:Updated:

சுதீஷ்-க்கு ராஜ்யசபா சீட்... முடிந்ததா தே.மு.தி.க - அ.தி.மு.க தொகுதிப் பங்கீடு டீல்?

தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா
தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா

நேற்று தே.மு.தி.க-வுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் என்ன இறுதி செய்யப்பட்டது என்பது குறித்து தே.மு.தி.க வட்டாரத்தில் பேசினோம்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதுவரை கூட்டணி குறித்து மட்டும் பேசிவந்த அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் கூட்டணியில் உள்ளவர்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிசெய்யும் முனைப்பில் உள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுடனும், தி.மு.க கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. அதேநேரத்தில் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகியவையும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துவிட்டன என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அ.தி.மு.க-வுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல் தே.மு.தி.க-வுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதுதான்.

பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி

``பா.ம.க-வைவிட ஒரு தொகுதி கூடுதலாக வாங்க வேண்டும் என்பதில் தே.மு.தி.க தரப்பில் உறுதியாக இருந்தோம். ஆனால், அவர்கள் மீண்டும் ஒற்றை இலக்கத்திலான தொகுதி எண்ணிக்கைக்கே எங்களைச் சம்மதிக்கவைக்க முயன்றனர். ஆனால், ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்திலேயே எதிர்க்கட்சியாக இருந்த கட்சி தே.மு.தி.க., அதுமட்டுமல்ல பா.ம.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளைப்போல எங்களுக்கு நெகட்டிவ் வாக்குகள் என்று எப்போதும் இல்லை. இப்போதும் குறைந்தது 50 தொகுதிகளாவது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் தே.மு.தி.க-வுக்கான வாக்கு விகிதம் இருக்கிறது.

கேப்டன் பிரசாரத்தில் ஈடுபட்டால் வாக்கு விகிதம் இன்னும் அதிகரிக்கும். நிச்சயம் பிரசாரத்தில் பங்கெடுக்கும் எண்ணத்தில்தான் கேப்டனும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது ஒற்றை இலக்கத்திலான தொகுதிப் பங்கீடுக்கு ஒப்புக்கொண்டால் அது எங்கள் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் குறைத்து, தேர்தல் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், குறைந்தது 10 முதல் 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.

சுதீஷ் - எடப்பாடி பழனிசாமி
சுதீஷ் - எடப்பாடி பழனிசாமி

அதுமட்டுமல்ல, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சுதீஷ்-க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கையில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்ட அ.தி.மு.க தலைமை, நாங்கள் கேட்டதைத் தருவதாக ஒப்புக்கொண்டனர். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றனர் தே.மு.தி.க-வினர் உற்சாகமாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு