Published:Updated:

ஒரே நாடு, ஒரே ரேஷன்...தொழிலாளர்களின் ஊதியத்தில் மட்டும் பாகுபாடு!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடை ஊழியர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டி, பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாழ்க்கை என்பது போராட்டங்கள் நிறைந்தது. அதுவும் சம கால தமிழக அரசியல் சூழல் அரசு ஊழியர்களைத் தொடர் போராட்டங்களில்தான் ஈடுபட வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது அந்தப் போராட்டங்கள் நியாயத்தின்வழியில் நடைபெறுகிறதா என்பதைத்தான். ஆம், நியாயம் என்ற ஒற்றைச் சரட்டின் வழியில் போராட்டங்கள் கட்டமைக்கப்படும் பட்சத்தில் அவை அனைவருக்கும் நன்மை பயப்பதாகவே அமையும்.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசைக் கட்டமைக்கிறார்கள். அத்தகைய அரசு மக்களுக்குக்கான திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தும்போது, அந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் இடத்தில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள்தான்.

தமிழகத்தின் சமூக நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் முக்கியப் பங்கு வகிப்பவை மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள்தான். தமிழகத்தின் கடந்த ஐம்பது ஆண்டு கால அரசியல்களத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுவனவற்றில் ஒன்று அரிசி. இந்த அரிசி அரசியல்தான் அறிஞர் அண்ணா காலந்தொட்டு இன்றளவும் நீடிக்கிறது. “ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்“ என்று சொல்லித்தான், 1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பிரசாரம் செய்தார். அவரின் தலைமையில் தி.மு.க, ஆட்சியையும் பிடித்தது. அந்தக் கூற்று பிரசார களத்தில் உதிர்க்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் அவற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை
விகடன்

ஆகவேதான், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “ஒரே நாடு; ஒரே ரேஷன்“ என்ற திட்டத்தை அறிவித்த உடனே அதற்கு எதிரான குரல்கள் தமிழகத்தின் கடைக்கோடிகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்கூட ரேஷன் ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும், கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்படும் பொதுவிநியோகத்திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிலாளர் சங்கத்தினர் சமீபத்தில் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சூழலில் ரேஷன் ஊழியர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி ரேஷன் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “ஒரே நாடு, ஒரே ரேஷன் என்கிறது அரசு. ஆனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் ஊழியர்களுக்கு சம வேலைக்குச் சம ஊதியத்தை வழங்க அரசு மறுக்கிறது. இதுதான் அரசின் கொள்கை முடிவுகளிலும், அவற்றைச் செயல்படுத்தும் முறையிலும் உள்ள முரண்பாடுகளுக்கு மிகச்சிறந்த உதாரணம்” என்று ஆதங்கப்பட்டனர். தொடர்ந்து பேசியவர்கள், “மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருந்தாலும், பொதுமக்களுக்கு முழுமையாக உணவு தானிங்கள் வழங்குவதில் சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கின்றன.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை
விகடன்

ரேஷன் கடைகளுக்கு அரிசியின் ஒதுக்கீடு கடை ஒன்றுக்கு தலா 80 சதவிகிதம் என்ற அளவாக குறைக்கப்பட்டே ஒதுக்கப்படுகின்றன. இதனால் 100 சதவிகிதம் ரேஷன் பொருள்களை பொதுமக்கள் வாங்க முடியவில்லை. மக்களுக்கு முழுமையாக ரேஷன் பொருட்கள் சென்றடைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரிசியை கள்ளச் சந்தைகளில் விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளை எடுக்காமல் ரேஷன் ஊழியர்கள் மீது பழி சுமத்துவதை மட்டும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முறையாகப் பொருள்கள் உண்மையான நுகர்வோரைச் சென்றடையும். ரேஷன் கடைகளுக்கு உணவு தானியப் பொருள்கள் அனுப்பப்படும் போதே உரிய எடை அளவுக்குச் சென்றடைவதில்லை. ஆனால் அதுகுறித்த எந்த கேள்விகளும் எழுப்பப்படுவதில்லை.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை
விகடன்

ரேஷனுக்கு பொருட்கள் வந்தபிறகு அவற்றின் அளவில் இழப்புகள் ஏற்படும்போது, ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை இறக்கி வைக்கும் வேலை உட்பட அனைத்தையும் ரேஷன் பணியாளர்களே இன்றுவரை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், இந்த வேலைகளை எல்லாம் செய்து முடித்தாலும் எங்களுக்கு கைகளில் கிடைக்க கூடியத் தொகை என்னவோ மாதத்திற்கு ஒன்பதாயிரம் ரூபாய்தான்.

இப்படி உள்ள சூழலில் நியாய விலைக் கடைகளில் நியாயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். அரசும் ஊழியர்களின் பிரச்னைகளை கேட்க மறுக்கின்றது” என்றனர்.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை
விகடன்

தமிழ்நாடு நியாய விலைக் கடை அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தினேஷ் குமார், "தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளின் ஊழியர்களுக்கு ஊதியமாக 12,000 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. அதில் பிடிப்பு போக 9,000 ரூபாய்தான் வருகின்றது. நாங்கள் செய்யும் அதே வேலையைத்தான், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு மாதத்திற்கு 30,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள எங்கள் கடைகளுக்கு ஆயிரம் குடும்ப அட்டைகளைக் கொண்ட ஒரு கடைக்கு 80,000 ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் ஊதியம் மட்டும் குறைந்த அளவுதான் வழங்கப்படுகின்றது. அதேபோல் உணவுப் பொருள்களின் எடையில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க, பாக்கெட் செய்யப்பட்ட பொருள்களை அளிக்க வேண்டியும்தான் பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் சம வேலைக்குச் சம ஊதியம் மட்டும் கிடைத்தபாடில்லை. அரசும் எங்கள் குரல்களைக் கேட்டப்பாடில்லை” என்றார்.

'ஒரே நாடு, ஒரே ரேஷன்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு, சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சமூக நலன் சார்ந்த அவசியமாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு