Published:Updated:

ஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா நிராகரிக்க என்ன காரணம்?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், இந்தப் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இணைய பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.

Regional Comprehensive Economic Partnership (RCEP) எனப்படும், உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தக் குழுவான இதில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், இந்தப் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இணைய பிரதமர் மோடி மறுத்துவிட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இந்த கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட,  தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஜப்பான் உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்த 16 நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை எளிமையாக்கும் வகையில் ஆர்.சி.இ.பி ஒப்பந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மோடி - ஆர்.சி.இ.பி
மோடி - ஆர்.சி.இ.பி

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், ``ஆர்.சி.இ.பி புதிய ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்க அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உள்ளது. எல்லா தரப்பு இந்தியர்களின் விருப்பம் சார்ந்து இந்த ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் குறித்து அளவிடும்போது, எனக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. காந்தியின் வழிகாட்டுலிலோ அல்லது என்னுடைய மனசாட்சியோ இந்த ஒப்பந்தத்தில் இணைவதைத் தடுக்கிறது.

`படேலின் ஆசையை நிறைவேற்றிய மோடி!' - யூனியன் பிரதேசங்களாக மாறிய ஜம்மு காஷ்மீர், லடாக்

இந்த ஒப்பந்தம் அதன் அசல் நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை, இதன் விளைவு நியாயமானதாகவோ அல்லது சீரானதாகவோ இல்லை. இதில் இறக்குமதி உயர்வுக்கு எதிரான போதிய பாதுகாப்பு, சீனாவுடனான போதிய வேறுபாடு, அடிப்படை விதிகளை மீறுதல், சந்தை அணுகுதல் மற்றும் கட்டணமில்லா தடைகள் குறித்து நம்பகமான உத்தரவாதங்கள் இல்லாதது போன்ற முக்கிய பிரச்னைகள் உள்ளதாகவும் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``ஆர்.சி.இ.பி., ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது எனவும், இந்திய மக்களின் நலன் கருதியே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்" தெரிவித்திருக்கிறார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ``இந்திய நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள், உற்பத்தித் துறை, பார்மா, ஸ்டீல் மற்றும் கெமிக்கல் துறை சார்ந்தவர்கள் ஆகியோரின் நலன் கருதியே இந்த ஒப்பந்தத்தில் மோடி கையொப்பமிடவில்லை" என்பதைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆசிய நாடுகளுக்கிடையேயான பரஸ்பர வர்த்தக உறவு, புதிய முதலீடுகள், பொருளாதார ஒப்பந்தங்கள், தொழில் சேவை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு (ஆர்.சி.இ.பி) 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.

இதற்கான முதல் கூட்டம் கம்போடியாவின் தலைநகரான பெனொம் பென்னில் (Phnom Penh) நடத்தப்பட்டது. 30-வது முறையாக நடக்கும் இந்த ஒப்பந்தக் கூட்டத்தில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து என இதில் `ஆசியான்' குழுவில் உள்ள 10 நாடுகள் மற்றும் ஆசியான் `ப்ளஸ் த்ரீ ' குழுவில் உள்ள 3 நாடுகள் மற்றும் `ப்ளஸ் சிக்ஸ்' குழுவில் உள்ள மூன்று நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இணைய இருந்தன.

ஆர்.சி.இ.பி., குழுவில் இந்தியாவும், சீனாவும் இருந்தால், உலகின் 39% ஜி.டி.பி-யை இந்த 16 நாடுகளும் கொண்டிருக்கும் என்பதால், உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தக் குழுவாக இது இருக்கும்.

மேலும், உலகப் பொருளாதாரத்தில் 49.5 டிரில்லியன் டாலர் இந்த 16 நாடுகளிடம் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுவாக ஆர்.சி.இ.பி. உருவாகும். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் இதில் இணைந்தால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்ற நிலையில், இதில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல