Election bannerElection banner
Published:Updated:

தொகுதிப் பங்கீடு: ம.தி.மு.க., வி.சி.க இழுபறிக்கு என்ன காரணம்?

வைகோ, திருமாவளவன்
வைகோ, திருமாவளவன்

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க-வுடன் ம.தி.மு.க., வி.சி.க கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறிநிலை நீடிக்கிறது. என்ன காரணம்?

வேட்புமனுத் தாக்கலுக்கு பத்து நாள்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க தலைமைகளிலான கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்த வரை பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உறுதிசெய்யப்படவில்லை என்ற நிலை நீடித்துக்கொண்டிருந்தபோது, தங்களது கூட்டணி வலுவாக இருப்பதாக தி.மு.க தரப்பு கூறிவந்தது.

தி.மு.க - ஸ்டாலின்
தி.மு.க - ஸ்டாலின்

ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க - பா.ம.க இடையே சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டுவிட்டது. பா.ஜ.க சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அ.தி.மு.க தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். இந்தநிலையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

தொகுதிப் பங்கீடு குறித்து, கடந்த பல நாள்களாக திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. தற்போது, அதிகாரபூர்வமாகப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் என மொத்தம் ஐந்து தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

தி.மு.க - காங்கிரஸ் தலைவர்கள்
தி.மு.க - காங்கிரஸ் தலைவர்கள்

இந்த இரண்டு கட்சிகள் தவிர, ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. ஆனால், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் எந்த முரண்பாடுமின்றி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதைப்போல, ம.தி.மு.க மற்றும் வி.சி.க-வுடன் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதுபோல, காங்கிரஸ் கட்சியுடனும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுகிறது.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக தி.மு.க நினைக்கிறது என்றும், எனவே, அதிகமான தொகுதிகளில் தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தி.மு.க நினைக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேலும், கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., வி.சி.க கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரமும், ம.தி.மு.க., வி.சி.க உடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வி.சி.க-வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், விழுப்புரம் தொகுதியில் நின்ற வி.சி.க-வின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். ம.தி.மு.க-வைச் சேர்ந்த கணேசமூர்த்தியும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். அதேபோல, வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் வி.சி.க வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க தரப்பில் நிர்பந்தப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

'அதை மட்டும் செய்திடாதீங்க' ; வேண்டுகோள் விடுத்த சீமான்... மௌனம் காத்த சசிகலா!

உதயசூரியன் சின்னத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதை ம.தி.மு.க-வும் வி.சி.க-வும் விரும்பவில்லை. `சட்டமன்றத் தேர்தலில் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள். இந்தநிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது, ஏன் இழுபறி என்பது குறித்து வி.சி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``தொகுதிப் பங்கீடு என்பது ஒரேகட்டப் பேச்சுவார்த்தையில் முடிந்து விடாது. அதற்குக் காலஅவகாசம் தேவைப்படும். இப்போது முதற்கட்டமாக தி.மு.க-விடம் எங்கள் கட்சியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எத்தனை தொகுதிகள் வேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தை தி.மு.க-விடம் தெரிவித்திருக்கிறோம். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்பதையும் பேசியிருக்கிறோம். தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை எங்கள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே பலமுறை சொல்லியிருக்கிறார். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.

வைகோ
வைகோ

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு ம.தி.மு.க சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆய்வு மையச் செயலாளர் செந்திலதிபன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சின்னப்பா, தேர்தல் பணிச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் சென்றனர். பேச்சுவார்த்தை குறித்து ம.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

``எத்தனை தொகுதிகள் வேண்டும், எந்தெந்தத் தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி தி.மு.க-விடம் நாங்கள் பேசவில்லை. தி.மு.க தலைவருக்கான ஒரு கடிதத்தை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எங்களிடம் கொடுத்து அனுப்பினார். அதைத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கான தி.மு.க குழுவிடம் கொண்டுபோய்க் கொடுத்தோம். அதை, தங்கள் தலைவரிடம் கொடுத்துவிட்டு, அவரது கருத்தைக் கேட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறினார்கள். மற்றபடி தொகுதிகள் பற்றியோ, தனிச்சின்னம் குறித்தோ நாங்கள் பேசவில்லை” என்று கூறினர்.

கே. பாலகிருஷ்ணன்
கே. பாலகிருஷ்ணன்

இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. ``இதற்கு முன்பு தங்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்டிருக்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். 170-180 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க நினைக்கிறது. இந்தநிலையில், இரட்டை இலக்கமே எங்கள் இலக்கு என்று கூறும் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை தி.மு.க கொடுக்கப்போகிறதோ?!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு