Election bannerElection banner
Published:Updated:

`மே 7-ம் தேதி டாஸ்மாக் திறக்கப்படுமா?' - ஒலிக்கும் 'மதுவிலக்கு' கோஷம் அரசுக்கு எட்டுமா? #BanTasmac

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

'மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்' என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் 'பூரண மதுவிலக்கு' பற்றி அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பிவருகின்றன. எனவே, 'மே 7-ல் கடைகள் திறக்கப்படுமா...' என்ற கேள்வி எழுந்திருப்பது குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் படைத்து சிறப்பு பூஜை நடத்தி, 'பயபக்தி'யோடு மதுக்கடையைத் திறந்து கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள், கர்நாடக மாநில 'உற்சாக' பானப் பிரியர்கள். 40 நாள்களைக் கடந்தும் திறக்கப்படாத டாஸ்மாக் கடை வாசலில் காத்துக்கிடக்கும் தமிழகக் 'குடி'மகன்களின் காதில் புகை வரவைத்தது இந்தச் செய்தி. குறிப்புணர்ந்து செயல்படும் தமிழக அரசு, உடனடியாக 'மே 7-ம் தேதி டாஸ்மாக் திறக்கப்படும்' என்று அறிவித்து, குடிமக்களின் வயிற்றில் 'ஜில்' பீர் வார்த்திருக்கிறது.

நாடு முழுக்க கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவரும் நிலையில், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மதுக்கடைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இம்மாநிலங்களில் உள்ள மதுப் பிரியர்கள், கடை திறக்கும் முன்னரே நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து, பெட்டி பெட்டியாக சரக்குகளை அள்ளிக்கொண்டு சென்றார்கள்.

மதுபான கடை திறப்பு
மதுபான கடை திறப்பு

தமிழ்நாட்டிலோ, 'அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் திறக்க அனுமதி' அளித்த அரசு, டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்தது, மதுப் பிரியர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், 'ஊரடங்கில் மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' எனக்கோரி, தனசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், 'பூரண மதுவிலக்கு என்பது தமிழக அரசின் கொள்கை முடிவைச் சார்ந்தது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது' எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர். டாஸ்மாக் வாசலில் தவமாய் தவம் கிடந்தவர்களுக்கெல்லாம் சின்னதொரு நம்பிக்கைக் கீற்றை அளித்தது, நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைதான்.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யனாக, தமிழக அரசியல் கட்சியினர், 'டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை அரசு கைவிட்டு, நிரந்தரமாக மூடுவதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். ஊரடங்கு என்ற இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், 'மது விலக்கு'க்கான போராட்டக் களத்தில் தொடர்ச்சியான முன்னெடுப்புகளைச் செய்துவரும் பா.ம.க செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலு, இவ்விஷயம் குறித்துப் பேசும்போது,

''இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், மது இல்லாத் தமிழகமாக 45 நாள்களைத் தொட்டுவிட்டோம். 'முழு மதுவிலக்கு' கோரிக்கையை நாம் எழுப்பியபோதெல்லாம், 'அது சாத்தியமே இல்லை; திடீரென மதுவை நிறுத்திவிட்டால், மது குடிப்போர் உடல் நலன் பாதிக்கப்படுவார்கள்; கள்ளச் சாராயம் பெருகிவிடும்' என்றெல்லாம் இதுவரையில் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்தக் காரணங்கள் எல்லாமே நொண்டிச் சாக்குகள்தான் என்பதை கொரோனா ஊரடங்கு நிரூபித்துவிட்டது.

பாலு
பாலு

கெட்டதில் ஒரு நல்லது என்பார்களே... அதுபோல், கொடிய உயிர்க்கொல்லி கிருமியான 'கொரோனா வைரஸ்' நமக்கு செய்திருக்கும் மாபெரும் நன்மை, டாஸ்மாக் கடைகளை தொடர்ச்சியாக மூட வைத்திருப்பதுதான். எனவே, காலம் அளித்திருக்கக்கூடிய இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, மறுபடியும் மதுக் கடைகளைத் திறக்கும் அரசின் முடிவு, மரணப் பாதைக்கே இட்டுச்செல்லும்.

ஏனெனில், கொரோனாவை விடவும் கொடிய நோய் மது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிடவும் மதுப் பழக்கத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீரழிவுகள் கணக்கிலடங்காதவை. எனவே, மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்து யோசிப்பதுகூட நல்லதில்லை. அப்படித் திறந்துதான் ஆகவேண்டும் என்ற தேவையோ அவசியமோ கிடையாது என்பதையும் நாம் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் அனுபவ ரீதியாக உணர்ந்துவிட்டோம்.

சில மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்திருக்கிறார்கள். இது தவறான முன்னுதாரணம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், மதுக் கடைகளைத் திறந்தால், குடிகாரர்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குத்தான் வருவார்கள். எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிக்கத்தான் இது வழிவகுக்கும். எனவே, ஏற்கெனவே மதுக்கடைகளைத் திறந்துள்ள அரசுகளும்கூட, இந்த விபரீதத்தை தடுக்கும்விதமாக கடைகளை உடனடியாக மூடவேண்டும்.

'அரசின் நிதி ஆதாரமாக, பெருவாரியான வருவாயைக் கொண்டுள்ள மதுக் கடைகளை மூடுவது சாத்தியம் இல்லை' என்று சிலர் பொருளாதாரம் பேசுகிறார்கள். மேலும், மது வருவாயினால்தான் அரசின் கஜானாவே நிரம்புகிறது; இதன் வழியாகத்தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கிறோம்; மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் சிலர் சொல்லிவருகிறார்கள்.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தவேண்டிய ஓர் அரசு, 'மதுவினால்தான் வருமானமே வருகிறது' என்று சொல்வது பெருத்த அவமானம்! மக்கள் நலன், சட்டம் - ஒழுங்கு, சமூக முன்னேற்றம் பற்றி அக்கறைகொள்ளாத, அரசியல் சாசனத்துக்கு கட்டுப்படாத அரசுகள்தான், மீண்டும் மதுக் கடைகளைத் திறக்கும்.

'தனி மனித இடைவெளியைப் பின்பற்றாமல், விழிப்புணர்வின்றி மக்கள் சுற்றித்திரிவதனால்தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது' என்று சில நாள்களுக்கு முன்னர்தான் நம் முதல்வர் அக்கறையோடு கவலைப்பட்டிருந்தார். மது இல்லாத நாள்களிலேயே மக்கள், அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் சுற்றித்திரிகிறார்கள் என்றால், மது குடித்து மயங்கிய நிலையில், கொரோனா விழிப்புணர்வை எந்தளவு கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

`ஊரடங்கு தளர்வை நீக்காவிட்டால் விபரீதமாகிவிடும்!'- புதுவை முதல்வருக்கு அலர்ட் கொடுத்த அமைச்சர்கள்
பெட்டிகளில் மதுபானம்
பெட்டிகளில் மதுபானம்

'மதுக்கடைகளைத் திறக்க வேண்டும்' என்று இப்போது யார் கேட்டார்கள்? மது, அத்தியாவசிய உணவுப் பொருளா? சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற மண்டலங்களை மட்டுமே கொண்டுள்ள தமிழகத்தில், தற்போது மதுக் கடைகளைத் திறப்பதென்பது மிக மிகத் தவறானது; ஆபத்தானதும்கூட.

கோயம்பேடு மார்க்கெட், கொரோனா 'ஹாட் ஸ்பாட்'டாக மாறிவிட்டது என்று இப்போது சொல்லிவருவது மாறி, டாஸ்மாக் கடைகள் கொரோனா கிருமித் தொற்றின் பிறப்பிடமாக மாறிவிட்டதென்று சொல்லுகின்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற முடிவை தமிழக அரசு, மறுபரிசீலனை செய்து, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், நம் முதல்வரின் பெயர் காலத்துக்கும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். எனவே, இந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

இந்நிலையில், டாஸ்மாக் கடை திறப்பு செய்தியைக் கேட்டு, இப்போதே உற்சாகத்தில் மிதந்துவரும் 'மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க'த்தின் தலைவர் செல்லப்பாண்டியன், 'பூரண மதுவிலக்கு என்பது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமற்றது' என்கிறார். இதற்கான காரணங்களை உதாரணங்களோடு முன்வைத்துப் பேசுகிறார்...

''கடை திறக்கப்படும் என்ற செய்தியைக் கேட்டு மதுப்பிரியர்கள் அனைவரும் கலகலப்பாக இருக்கிறார்கள். ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்கள். விரைவிலேயே கேரளா, புதுச்சேரியிலும் திறந்துவிடுவார்கள். இந்தநிலையில், நாம் மட்டும் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்தால், 1971-ல் கருணாநிதி சொன்னதுபோல், நெருப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்ட கற்பூரமாக மாறிவிடும் தமிழ்நாடு.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று பல தலைவர்களும் இங்கே வலியுறுத்திவருகின்றனர். இன்றைய சூழலில், அது சாத்தியம் இல்லை. ஏனெனில், தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடிகளைத் தாண்டிய வருவாயை டாஸ்மாக்தான் கொடுத்துவருகிறது. இந்த வருவாயைக் கொண்டுதான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. எனவே, டாஸ்மாக் கடைகளைத் திறக்காவிட்டால், தமிழக அரசே தள்ளாடிவிடும்!

ஊரடங்கு காலகட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடிவிட்டதால், ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்து நிற்கிறது தமிழக அரசு. இந்தச் சூழலில், ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகும் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல், முழு மதுவிலக்கை அரசு கடைப்பிடிக்கும் என்பது சாத்தியமே இல்லை.

ஜூ.வி பைட்ஸ்: மருத்துவமனைகள் 'உஷார்', கைகோத்த அஜித் - விஜய் ரசிகர்கள்!

ஏனெனில், தமிழகத்தில் மதுப் பழக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ளது. இதில், 35 லட்சம் பேர் தீவிர மதுப் பிரியர்களாக உள்ளனர். எனவேதான், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும், விநியோகம் செய்வதற்கென்றே குடோன்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்போடு தயார் நிலையில் மதுபானங்கள் வைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான சரக்குகளைத் தயாரிக்கும் 10 மிகப்பெரிய மதுபானத் தொழிற்சாலைகளும் உற்பத்தியைத் தொடங்க தயார் நிலையில் உள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்களையெல்லாம் சொல்வதனாலேயே, நாங்கள் 'பூரண மதுவிலக்கை எதிர்க்கிறோம்' என்று நினைத்துவிடாதீர்கள். இன்றைய சூழலில், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை என்ற எதார்த்த நிலையைத்தான் எடுத்துச் சொல்கிறோம். அதாவது, தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களில் எல்லாம் மது அமலில் இருக்கும்போது, நாம் மட்டும் எப்படி 'மது விலக்கை' கொண்டுவர முடியும்? ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதுமே மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே இது சாத்தியப்படும். அதற்கு மத்திய அரசுதான் துணைபுரிய வேண்டும். மற்றபடி, தமிழக அரசு தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவென்பது மிக மிகச் சரியான, வரவேற்கத்தக்க முடிவு.

டாஸ்மாக் மதுபானங்கள்
டாஸ்மாக் மதுபானங்கள்

அதேசமயம்... 'மது, நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்பதையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மதுப் பிரியர்களின் ஆரோக்கியம் பேண, மறுவாழ்வு மையங்களை உருவாக்கி அவர்களது உடல் நலனைப் பேணிக்காத்திட வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவருகிறோம்'' என்கிறார்.

இந்நிலையில், 'தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா...' என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணியைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்து நாம் அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.

இதையடுத்து, கொரோனா தடுப்புப் பணிக்குழுவிலுள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஸ் குமாரின் செல்பேசியைத் தொடர்புகொண்டோம். அவரும் நம் அழைப்பை ஏற்காததையடுத்து, அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்.

''மதுவினால் ஏற்படும் தீமைகளை நன்கு அறிந்திருந்ததனால்தான் எம்.ஜி.ஆர், தீவிர மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். 'கொலைகாரனுக்குக்கூட ஜாமீன் உண்டு; ஆனால் குடிகாரனுக்கு ஜாமீன் இல்லை' என்ற அளவில் கறாராகவும் நடந்துகொண்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும்கூட, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் நோக்கத்தில்தான், 500 டாஸ்மாக் கடைகளை முதற்கட்டமாக மூடினார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 500 மதுக்கடைகளை மூடியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரிலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இன்றைய சூழ்நிலையில், மதுப்பழக்கம் என்பது சமூகப் பிரச்னையாக மாறிவிட்டது. ஒரேயடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால், நாட்டில் கள்ளச் சாராயம் பெருகும். இதைக்கூட அரசு, தீவிர கண்காணிப்போடு தடுத்து நிறுத்திவிட முடிகிறது. ஆனால், மெத்தனால், எத்தனால், டர்பன்டைன், வார்னிஷ் என விதவிதமான பொருள்களையும் போதைக்கு மாற்றாகப் பயன்படுத்தி மரணமடைவோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, குடிகாரர்களே குடியின் தீமையை உணர்ந்து திருந்த வேண்டும்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால், இதுகுறித்து நமது முதல்வர்தான் அமைச்சரவையைக் கூட்டி முடிவுசெய்து அறிவிக்க முடியும்'' என்கிறார் தீர்க்கமாக.

இந்நிலையில், சற்று முன் அரசு வெளியிட்ட அறிக்கையில்... சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது எனவும், சென்னையில் மதுக்கடைகள் திறக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு