Published:Updated:

``இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது”- உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பு, இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.

`இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது' என உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள தீர்ப்பு நாடாளுமன்றம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம்சாட்ட, அரசு இதில் சம்மந்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

உத்தராகண்ட் உயர்நீதிமன்றம்
உத்தராகண்ட் உயர்நீதிமன்றம்

உத்தராகண்ட் மாநிலத்தின் அரசுப் பணிகளில் பட்டியல் சமூகத்தினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத்தேவையில்லை என 2012-ம் ஆண்டு உத்தராகண்ட் அரசு முடிவெடுத்திருந்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தராகண்ட் அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அதில் 'இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல. எனவே, இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என்று உத்தரவிட்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மெட்ராஸ் போன்ற சில மாகாணங்களில் இடஒதுக்கீடு முறை அமலில் இருந்துவந்தது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்துவந்த இடஒதுக்கீடு முறையை எதிர்த்து 1950-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீடு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிசெய்தது. தமிழகத்தில் இதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு பிரிவு 15-ல் இடஒதுக்கீட்டுக்கான பிரிவு சேர்க்கப்பட்டது.

constitution
constitution

அதுவரை அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கான உத்தரவாதமோ, பாதுகாப்போ இல்லை என்கிறார் பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம். இந்தப் பிரிவு மூலம் சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய சமூகங்கள் அரசுப் பணிகளில் உரிய முறையில் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்று அரசு கருதினால், அதற்கான இடஒதுக்கீடு கொண்டு வர மற்ற எந்தப் பிரிவும் தடையாக இருக்கமுடியாது என்பது சேர்க்கப்பட்டது.

டெல்லியில் மூன்றாவது முறையாக அரியணையில் கெஜ்ரிவால்... ஆம் ஆத்மி மகுடம் சூடியது எப்படி?

இதுநாள் வரை இடஒதுக்கீடு விவகாரத்தை நீதிமன்றங்கள் சிக்கலாகவே கையாண்டுள்ளன என்கிற பார்வை சட்ட வல்லுநர்கள் மத்தியில் நிலவுகிறது. இடஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றங்கள் தலையிட்டு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

50% கட்டுப்பாடு:

இடஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 50% என்பதைத் தாண்டினால் நீதிமன்றங்கள் அதைச் செல்லாது என்று ரத்து செய்ய முடியும். இது அரசின் சட்டங்களால் அல்லாமல் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு விதி.

க்ரீமி லேயர்:

அதே போலதான் க்ரீமி லேயர் என்கிற விதியும். மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் அவர்களால் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. இதுவும் நீதிமன்ற உத்தரவின் மூலமே கொண்டு வரப்பட்ட விதியாகும்.

மராத்தா இடஒதுக்கீடு
மராத்தா இடஒதுக்கீடு

நீதிமன்றத்தின் முரண்பட்ட நிலைப்பாடு?

50% என்கிற உச்சவரம்பை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளதால் தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீடு தற்போது வரை நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்காமல் விசாரித்து வருகிறது. இதன்மூலம் 50% என்கிற உச்சவரம்பு மீறப்பட்டுவிட்டது.

அதே போல மகாராஷ்டிராவில் 'மராத்தா' பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை பம்பாய் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இங்கும் 50% என்கிற உச்சவரம்பு மீறப்பட்டிருக்கிறது.

இதுபற்றிப் பேசிய முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன்,

``இடஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் உள்ள விளக்கத்தைத்தான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி இடஒதுக்கீடு என்பது கருத்துரிமை போன்ற மற்ற உரிமைகளைப் போல அடிப்படை உரிமை கிடையாதுதான். பேச்சுரிமை அனைத்துக் குடிமக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு என்பது அரசு வேண்டும் என்று கருதினால் மட்டுமே, அதற்கான சட்டத்தை இயற்றி வழங்கலாம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்படுகிற இடஒதுக்கீடு தொடர்பான சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்று நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம். ஆனால், வழங்கப்படாத இடஒதுக்கீட்டை வழங்கு என உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.”

அரிபரந்தாமன்
அரிபரந்தாமன்

``ஆனால், குறிப்பிட்ட இந்த உத்தராகண்ட் விவகாரத்தைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் - பா.ஜ.க இருவருமே ஒரே பக்கத்தில்தான் உள்ளனர். 2012-ம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்கிற முடிவை உத்தராகண்ட் அரசுதான் எடுத்தது. அப்போது அங்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான். அவர்கள் எடுத்த அதே நிலைப்பாட்டைத்தான் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வும் கடைப்பிடிக்கிறது. ஆட்சியில் இருக்கையில் இடஒதுக்கீடு விவகாரத்தில் இருவருடைய நிலைப்பாடும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு 2012-ம் ஆண்டு அரசு எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். தங்களை இடஒதுக்கீட்டின் காவலர்களாக அனைத்துக் கட்சிகளும் காட்டிக்கொள்வார்களேயானால் இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக்கி அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு