Published:Updated:

கட்டுக்குள் வராத கொரோனா - தொடரும் தொற்று அபாயம்… சென்னைக்கு நீடிக்கும் ஊரடங்கு! #WhatAfterMay3

ஊரடங்கு
ஊரடங்கு

மத்திய சுகாதார துறை சென்னை, சூரத், அகமதாபாத், தானே உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று, கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாவது கட்டத்துக்கு சென்றுவிட்ட சென்னைக்கு இப்போது ஊரடங்கு தளர்வு என்பது எதிர்பார்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

``மே 3-க்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்குமா?" இந்த ஒற்றைக் கேள்விதான் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்குமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு நான்கு நாள்கள் முழு ஊரடங்கு என்பதை அறிவித்தது அரசு. தமிழக நிர்வாகம் கொரோனா விஷயத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்கிற விசாரணையில் இறங்கினோம்.

தமிழக அரசு
தமிழக அரசு

இந்தியாவிலே அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,068 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 26-ம் தேதி மாலை தமிழகத்தில் புதியதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டிவிட்டது. இதனால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்கிற குழப்பம் தமிழக அரசிடம் உள்ளது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று கடந்தவாரம் வரை நம்பியிருந்த சுகாதாரத் துறையும் இப்போது யோசிக்க ஆரம்பித்துவிட்டது

``ஒரு கோடி மக்கள் தொகையைக் கொண்ட சென்னை மாநகரில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக உள்ளது” என்கிற உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரும் கொரோனா யுத்தத்துக்குப் பலியாகிவருகிறது. இந்த நிலையில், வரும் மே 3-ம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வர இருப்பதால் அதற்குப் பிறகு என்ன நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மட்டும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று நினைக்கிறது. காரணம் முதலில் அறிவித்த 21 நாள் ஊரடங்கு குறித்து மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் பிரதமரே அறிவித்ததற்கு பல மாநில முதல்வர்களும் அதிருப்தி தெரிவித்தனர். இதற்குப் பிறகு இரண்டாவது ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், மே 3-க்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி பிரதமர் சற்றுமுன் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் உரையாற்றினார்.

முதல்வர்கள் கூட்டத்தில் ரெட் ஜோன் பகுதியில் ஊரடங்கு நீடிக்க முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. சென்னை உள்ளிட்ட பகுதிகள் இதில் வரும். இன்னும் இரண்டு நாள்களில் பிரதமர் இது குறித்து உரையாற்ற இருக்கிறார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு வழங்க 1,321 கோடி, மருத்துவ உபகரணங்கள் வாங்க 1000 கோடி, மின்வாரிய இழப்புக்கு ஈடு கட்ட நிதி போன்ற நிதிகளை மத்திய அரசு வழங்கவும், சிறு குறு தொழிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது குறித்தும் முதல்வர், பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது பதிமூன்று மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் ஒடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, அந்த மாநில முதல்வர்கள் ஊரடங்கைத் தளர்த்திவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே நேரம் தமிழகத்தில் ரெட் அலர்ட் மாவட்டங்களாக பல மாவட்டங்கள் இருக்கின்றன. இருந்தபோதும், கடந்த 10 தினங்களாக அதில் பல மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பில் எந்த நோயாளிகளும் இல்லை என்கிற மகிழ்ச்சியான செய்தியும் உள்ளது. அதே நேரம் சென்னையில் தினமும் இதன் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுதான் இப்போது அரசை கவலை கொள்ள செய்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசின் சார்பில் பன்னிரண்டு ஐ.ஏ.எஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. அதில் ஒரு குழு கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் பணியைச் செய்துவருகிறது. அந்தக் குழுவினர் முதல்வரிடம்

``சென்னையில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் அவர்களுக்கு எந்த வகையில் இந்தத் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்றாவது கட்டத்துக்குச் சென்றுள்ளது சென்னை. அதேபோன்ற ஒரு நிலையை கோவையும் விரைவில் எட்டும். இதற்கு இப்போது உள்ள ஊரடங்கு முறையை இன்னும் கடுமைப்படுத்த வேண்டும்” என்று அறிவுறித்தியது. இதற்குப் பிறகுதான் நான்கு நாள்கள் முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்தார்.

ரெட் அலார்ட் மாவட்டங்கள் ஏப்ரல் 11-ம் தேதி நிலவரம்
ரெட் அலார்ட் மாவட்டங்கள் ஏப்ரல் 11-ம் தேதி நிலவரம்

இந்த நாள்களில் புதியதாக தொற்று ஏற்படுபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு எந்த வகையில் இது வந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். அது சாத்தியப்பட்டால் மட்டுமே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த ஊரடங்கு தளர்வு என்பதைப் பற்றி யோசிக்கமுடியும் என்கிறார் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், பெருநகரங்களில் இதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, மே 3-ம் தேதிக்குப் பிறகும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளைத் தொடரும் நிலையே இருக்கும் என்கிற தகவலையும் கூடுதலாகச் சொல்கிறார்.

இன்னொரு புறம் மத்திய அரசு முழு ஊரடங்கு என்பதை இனியும் நீட்டிக்க முடியாது என்கிற யோசனையில் இருக்கிறது. ஏற்கெனவே தொழில்துறை நிறுவனங்கள் இதுகுறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. எனவே, அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை மட்டும் தனியாகப் பிரித்து அவைகளுக்கு மட்டும் ஊரடங்கை தொடரலாம், பிற இடங்களில் வணிக நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், தினக்கூலிகள் உள்ளிட்டவர்களுக்கு தளர்வு கொடுத்து இயங்க வைக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறார்கள்.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

தமிழகத்தில் சென்னையில் ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கலாம். சில வணிக கடைகளுக்கு நேரக்கட்டுபாடு விதித்து அவர்களுக்கு அனுமதியளிக்கலாம். அதே நேரம், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கை கடுமையாக இன்னும் பதினான்கு நாள்களாவது அமல்படுத்தும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டுக்குள் கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட சில பெரு நகரங்களையும் கொண்டுவர உள்ளார்கள். அதேபோல் பிற மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு கொண்டு வந்தாலும், அந்த மாவட்டத்துக்குள் பயணம் செய்வது மட்டும் அனுமதியளிக்கப்படும் என்றும், அரசு தரப்பில் வாகனங்களை எப்படி இயக்குவது என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மே 3-க்குப் பிறகு மேலும் பதினான்கு நாள்கள் மாவட்ட எல்லைகளை சீல் வைத்து அதற்குப் பிறகு பெரு நகரங்களில் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு படிப்படியாக இந்த நிலையை மாற்றிக்கொள்ளலாம் என்று முதல்வருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
எம். விஜயகுமார்

சென்னையிலிருந்து பலரும் தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியிருக்கிறார்கள். ஊரடங்கு அவர்களது மாவட்டங்களில் தளர்வு செய்தாலும் அவர்கள் சென்னைக்கு வருவதைத் தடை செய்ய உள்ளார்கள். சென்னையில் ஊரடங்கு என்பது மே 3-க்கு பிறகும் நீடிக்க உள்ளது. அரசுக் கட்டுபாடுகளை மக்கள் காற்றில் பறக்க விட்டு சமூக விலகலை, பல நேரங்களில் தவறவிடுகிறார்கள். இதுதான் இப்போது புதிய தொற்றுகளுக்கு காரணமாக இருப்பதாக சுகாதாரத் துறை கருதுகிறது. மேலும் மத்திய சுகாதார துறை சென்னை, சூரத், அகமதாபாத், தானே உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. கிட்டத்தட்ட மூன்றாவது கட்டத்துக்கு சென்றுவிட்ட சென்னைக்கு இப்போது ஊரடங்கு தளர்வு என்பது எதிர்பார்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு