Published:Updated:

`மே மாதம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!´ - அமைச்சர் அன்பில் மகேஷ்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
News
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( தே.சிலம்பரசன் )

"எவ்வளவு முதலீடு செய்தாலும் இந்த நாட்டுக்கான நல்ல வட்டியை தருகின்ற துறை, பள்ளிக் கல்வித்துறை தான்."

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் நலன் குறித்த மண்டல அளவிலான பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசாங்க சம்பளத்தை மாதம் மாதம் வாங்குகிறோம். ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறோம் என பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை நினைக்கவே முடியாது.

கூட்ட அரங்கம்
கூட்ட அரங்கம்

ஏனென்றால், அரசுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தருகின்ற துறை, நமது துறை கிடையாது. இன்றை நாள்களில் நிதிச்சுமை இருக்கும்போதும் 32,599 கோடி நிதியை தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கியிருக்கிறார் எனும்போது மனசை நல்லா வச்சுக்கோங்க. எவ்வளவு முதலீடு செய்தாலும் இந்த நாட்டுக்கான நல்ல வட்டியை தருகின்ற துறை பள்ளிக் கல்வித்துறை தான். உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னதுபோல, பள்ளி கல்வித்துறை கொடுக்கின்ற ப்ராடக்ட் தான் அவர்களுக்கு இன்புட். அதை அவர்கள் சரியான முறையில் தயாரித்து, இந்த நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற மிகப்பெரிய பணியை செய்து கொண்டுள்ளனர். அதற்கு ஏற்றார் போல நமது உழைப்பு இருந்தாக வேண்டும். இன்று இரண்டு விஷயங்கள் முக்கியமாக பேசப்படுகிறது. ஒன்று பாலியல் தொல்லை, மற்றொன்று பழுதடைந்த கட்டடங்கள் இடிக்க வேண்டும் எனும் பிரச்சனை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் பழுதடைந்ததாக கண்டறியப்பட்ட 539 கட்டடங்களில் 501 பழுதடைந்த கட்டடங்களை ஏற்கெனவே இடித்துவிட்டோம். இப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பழுதடைந்த கட்டடங்களை கண்டறிந்து இடித்து வருகிறோம் . இடிக்கப்பட வேண்டிய பழுதடைந்த கட்டட விஷயத்தில் அதிகாரிகள் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஏனெனில், திருநெல்வேலி சம்பவத்தை நேரடியாக சென்று பார்க்கும்போது, புதியதாகத் தான் இருந்தது. ஆனால் பேஸ்மெண்ட் இல்லாமல் கட்டி வைத்திருந்தார்கள். அந்த குழந்தைகள் இறந்தது மிகப்பெரிய ஒரு பாடம். எனவே சி.இ.ஓ., டி.இ.ஓ. என அனைவரும் கவனமாக இருந்து இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடம் தொடர்பாக ரிப்போர்ட் கொடுங்கள். இன்னும் ஓரிரு வருடங்களுக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கவனக்குறைவாக இருக்க வேண்டாம்" என்றார்.

கு.பிச்சாண்டி - மஸ்தான் - பொன்முடி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கு.பிச்சாண்டி - மஸ்தான் - பொன்முடி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அதற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மிகவும் ஆபத்தாக உள்ள பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்கக்கூடாது என ஏற்கெனவே நாம் சொல்லி இருக்கிறோம். அதேபோல ஒவ்வொரு வகுப்பறையிலும் உள்ள எலக்ட்ரிக் பலகையில் இருக்கும் பொத்தான்களை பயன்படுத்துவது என்றாலும் அதை முறையாக ஆய்வு செய்த பின்னர் தான் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். எந்த விதத்திலும், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னதான் எத்தனை ஆய்வுகள், நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றாலும்... இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமானதாக அமைந்துவிடுகிறது. இனிமேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என பல பொருளை விவாதிக்கும்போது இதையும் ஒரு முக்கிய பொருளாக தான் விவாதிக்கிறோம். மாணவர்கள் பேருந்துகளில் படியில் தொங்கி செல்லும் தகவல்கள் உங்களை போல பத்திரிகையாளர்கள் மூலம் எங்கள் கவனத்திற்கு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை ஏறத்தாழ 48,000 பள்ளிகள் இருக்கின்றன. எனவே அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு பேருந்து வழித்தடத்திலும் எந்த நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, பள்ளிகள் எத்தனை உள்ளன போன்ற அனைத்தையும் போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மேலும் சட்டமன்றம் கூடும் போது இது ஒரு விவாதமாக எடுத்துக் கொள்ளப்படும்.

அரசு அதிகாரிகள்
அரசு அதிகாரிகள்

பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக 30% முதல் 55% வரை பாடத்திட்டங்களை ஏற்கெனவே குறைத்துள்ளோம். அதற்கு மேல் குறைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. 15 முதல் 18 வயது இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே மாதம் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும். இல்லம் தேடி கல்வித் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாக செயல்பட்டு கொண்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அதற்காக பதிவு செய்த தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 10-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் குறித்து பெற்றோர்களுக்கு அச்சம் இருக்கத்தான் செய்கிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் இல்லம் தேடி கல்வி மூலம் இருபது.. இருபது மாணவர்களாக அமர்த்தி பாடம் நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் பாலியல் தொடர்பான பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணர்வினை 2, 3 பக்கங்களில் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும்" என்றார்.