Published:Updated:

`அடுப்படியிலிருந்து முதன்முறையா போராட்டத்துக்கு வந்திருக்கோம்!' - கொதிக்கும் ஷாஹீன் பாக் பெண்கள்

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

``இன்று கல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கியவர்கள் நாளை எங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்" என்கிறார்கள்.

தெற்கு டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடத்திய அறப் போராட்டத்தில் அனுமதியின்றி கல்லூரிக்குள் புகுந்து சூறையாடியது போலீஸ்.

அமைதியுற்று இருக்க வேண்டிய நூலகத்தில் மாணவர்களின் மீதான போலீஸின் தடியடிகளுக்கு எதிராக முதன்முதலில் நியாயம் கேட்டது அதே தெற்கு டெல்லி பகுதியின் ஷாஹீன் பாக் பெண்கள்தான். டிசம்பர் 15 கலவரத்தை அடுத்து தங்களது வீதிக்கு வந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கிய பெண்கள் இன்றுவரை அதே வீதியில் அமர்ந்திருக்கிறார்கள்.

கூடியிருக்கும் 1,500 பேரில் பிறந்த 20 நாள்களேயான குழந்தையும் இருக்கிறாள். தன் அக்கா மற்றும் அண்ணனுக்காகச் சேர்த்து அவள் போராட வந்திருப்பதாக அவளின் தாய் ரெஹானா கூறுகிறார்.

ஷாஹீன் பாக் பெண்கள்
ஷாஹீன் பாக் பெண்கள்

சூழல் மாசடைந்து மேகம் பனி சூழக் கிடக்கும் தெற்கு டெல்லியின் நிரந்தரக் குளிருக்கு இடையே கதகதப்பான துணியால் போர்த்தப்பட்டு தன் தாயின் மார்போடு அணைத்துக் கிடக்கிறது அந்தக் குழந்தை. `மதத்தின் பெயரால் இனி குடியுரிமை' என்ற நிலை, 20 நாள் குழந்தையைக்கூட வீதிக்கு அழைத்து வந்திருக்கிறது.

டெல்லி தேசிய நெடுஞ்சாலை அதன் புறநகரோடு சேரும் இடத்தில் 1 கி.மீ தொலைவில்தான் ஷாஹீன் பாக் இருக்கிறது. உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த பகுதி. ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எனக் கூட்டமாக அமர்ந்திருக்கும் மக்களுக்கு நடுவே தேசியக் கொடி பரப்பப்பட்டிருக்கிறது.

ஷாஹீன் பாக் பெண்கள்
ஷாஹீன் பாக் பெண்கள்

அருகிலேயே சிசிடிவி கேமரா மற்றும் மைக் செட் பொருத்தப்பட்டிருக்கிறது. போலீஸுடன் ஏதும் பிரச்னை ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமரா வைத்துக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ``நாங்கள் முதலில் இந்தியர்கள். பிறகுதான் இஸ்லாமியர்கள்" என்கிறார்கள் அந்த மக்கள். அவர்கள் கைகளில் காந்தி, அம்பேத்கர் புகைப்படங்கள்.

உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியதிலிருந்து சுமார் 100 தன்னார்வலர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்காக உதவிவருகிறார்கள். அங்கேயே அமர்ந்திருக்கும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் இயற்கைத் தேவைகளுக்கு உதவவும் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவர்களுடன் தங்கியிருக்கிறார். ``பெண்களை இரவு 10 மணிக்கு மேல் தங்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் இங்கேயேதான் இருக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்படாமல் நாங்கள் போராட்டக் களத்திலிருந்து நகர்வதற்கில்லை என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்" என்கிறார் அந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி.

ஷாஹீன் பாக் பெண்கள்
ஷாஹீன் பாக் பெண்கள்
ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன... 3 நாட்களின் ஸ்பாட் ரிப்போர்ட்! #JamiaProtests

அவரே தொடர்கிறார், ``இங்கு இருக்கும் பல பெண்களுக்கு இது முதல் போராட்டக்களம். தங்களது சமையலறையை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். ஏன் போராட வந்தீர்கள் என்று அவர்களிடம் கேட்டதற்கு அவர்களது பதில் உறைய வைப்பதாக இருந்தது. இன்று கல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்கியவர்கள் நாளை எங்கள் பிள்ளைகளின் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து தாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்கிறார்கள்."

இஸ்லாமியப் பெண்களின் குரல் முதன்முதலாக ஷாஹீன் பாக் பெண்கள் வழியாக அரசியல் சாசனத்துக்கான கேள்வியை எழுப்பியுள்ளது. தலையில் புர்கா அணிந்தபடி அமர்ந்திருக்கும் பெண்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது தலித் செயற்பாட்டாளர் டாக்டர் எம்.எம்.விநோதினியின் கவிதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு நினைவுக்கு வருகிறது.

``கூட்டுரோட்டின் நடுவில்

முழுமையான நம்பிக்கை

போல நிற்கும்

அம்பேத்கரின் நிழலில்

அடையாளமற்ற

பெண் உருவமாக

நின்று விடுவேன்"

- எம்.எம்.விநோதினி

(தமிழில் : கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்)

அம்பேத்கரின் நிழல் இவர்களுடன் இருக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு