Published:Updated:

முழு ஊரடங்கில் அதிகரிக்கும் ஆபாச வெப்சைட் பயன்பாடு! - அதிரவைக்கும் உண்மைகள்!

இணையவழி ஆபாசப் படங்கள்
இணையவழி ஆபாசப் படங்கள்

குழந்தை ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது மற்றும் பரப்புவது உள்ளிட்ட குற்றச் செயல்கள் சென்னையில் 100 மடங்கு அதிகரித்துள்ளதாக, 'குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு' கடந்த ஆண்டே செய்தி வெளியிட்டது.

கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில், 'ஆபாச இணையதளங்களில் நேரம் செலவிடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது' என்ற செய்தி அதிரவைத்திருக்கிறது. கொரோனா தொற்றுக்கு பயந்து உலகமே முழு ஊரடங்கில் முடங்கி ஒன்றரை வருடம் கடந்தாகிவிட்டது. பரபரவென்று ஓடித்திரிந்த மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பது பல்வேறு சமுதாயச் சிக்கல்களை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக பொழுதுபோக்குக்காக இணையத்துக்குள் இணைந்தவர்களில் பெரும்பாலானோர், ஆபாசப் படங்கள் மற்றும் அது குறித்த தேடல்களில் ஈடுபடுவது அண்மைக்கால புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆபாச இணையதளங்களிலும், அது குறித்த செயலிகளிலும் நேரத்தைச் செலவிட்டுள்ளனர் என்ற தகவலை 'மீடியா ரெகுலேட்டர் அப்காம்' அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தியச் சூழலில் இது போன்ற அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், ஊரடங்கு அமலில் இருந்துவரும் இந்தக் காலகட்டத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையம்வழி ஆபாசங்கள்
இணையம்வழி ஆபாசங்கள்

அண்மையில், மும்பையில் ஊரடங்கைப் பயன்படுத்தி 87 ஆபாச படங்களைத் தயாரித்த மாடல் அழகியும், நடிகையுமான கெஹானா வசிஸ்த் கைதுசெய்யப்பட்டார். மேலும் சமூக ஊடகங்கள் வழியிலாகவும் பாலியல் தொழில் மற்றும் குற்றங்கள் அதிகரித்துவருவதை செய்திகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே, சென்னை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களில் ஆபாச இணையதளங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இதில் கூடுதல் அதிர்ச்சியாக, குழந்தை ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது மற்றும் பரப்புவது உள்ளிட்ட குற்றச் செயல்கள் சென்னையில் 100 மடங்கு அதிகரித்திருப்பதாக, 'குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு' கடந்த ஆண்டே செய்தி வெளியிட்டது. இதையடுத்து, இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தோர் மீது மாவட்டவாரியாக கைது நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டது.

கொரோனா 2-வது அலை உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், மறுபடியும் குழந்தைப் பாலியல் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரங்கேறிவரும் அநாகரிகங்கள் என தமிழ்நாடு முழுக்கப் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பெருகிவருகின்றன.

இந்தநிலையில், சைபர் சட்ட வழக்கறிஞரான கார்த்திகேயன் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசியபோது, ''இந்தியாவைப் பொறுத்தவரையில், குழந்தைப் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களைப் பார்ப்பது குற்றம். எனவே, இந்தியாவில் சைல்டு போர்னோகிராபி பார்ப்பவர்களின் ஐ.பி முகவரியை எஃப்.பி.ஐ (Federal Bureau of Investigation) துணையுடன் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மற்றபடி இது குறித்த சர்வே எதுவும் இங்கே எடுக்கப்படுவது இல்லை.

அதேசமயம், இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியா முழுக்கவே அனைத்துவிதமான இணையதளப் பயன்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன. இவற்றில், ஆபாச இணையதளங்களைப் பார்ப்போரின் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரித்திருக்கும்தான். இது சமுதாயரீதியில் பல்வேறு உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

உதாரணமாக இன்றைய சூழலில், ஆண்-பெண் நட்பில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால்கூட சம்பந்தப்பட்ட பெண்ணைத் தாக்குவதற்கு ஆண் எடுக்கக்கூடிய முதல் ஆயுதமாக இணையதளம்தான் இருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து சமூக ஊடகம் வழியே பரப்பிவிடுவதாக மிரட்டல் விடுக்கும் வழக்குகள்தான் நிறைய பதிவாகின்றன. சில சமயங்களில் ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை இதுபோல் ஆபாசமாகச் சித்திரித்து பழிதீர்த்துக்கொள்ளும் வழக்குகளும் பதிவாகின்றன.

கலாசாரம், நம்பிக்கைகள் எனப் பல்வேறு கற்பிதங்கள் நிரம்பிய இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற சைபர் குற்றங்கள் அதிகம். ஏனெனில், இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களேகூட, குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். குடும்ப மானம் போய்விடும் என்ற பயம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம்; போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது!

வெளிநாடுகளில் சைபர் குற்றங்கள் என்றால், கார் அல்லது விமானத்தை ஹேக் செய்துவிட்டார்கள் என்றோ, மிகப்பெரிய கம்பெனியின் ஷேர்வரை ஹேக் செய்துவிட்டார்கள் என்றோதான் பிரச்னைகள் இருக்கும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான், சைபர் குற்றங்கள் வரிசையில் பதிவாகிற 50%-க்கும் அதிகமான வழக்குகள் 'சோஷியல் நெட்வொர்க்கிங் க்ரைம்' சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்புகூட, தாம்பரம் அருகே ஒரு பெண்ணின் புகைப்படத்தை இதுபோல் யாரோ ஒருவர் மார்ஃபிங் செய்து இணையத்தில் வெளியிட்டுவிட, சம்பந்தப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்ட நபர்களே அறியாமையால், தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக்கொள்வதால், தவறு செய்பவர்களுக்கு அது கூடுதல் உற்சாகத்தைத் தந்துவிவிடுகிறது. எனவே, பிரச்னையைத் தெளிவான புரிதலோடு அணுக வேண்டியது முக்கியம். சமூக ஊடகத்தில் நமது புகைப்படத்தைப் பதிவிடுகிறோம் என்றாலே, அது மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்ற புரிதல் முதலில் எல்லோருக்கும் வர வேண்டும்.

ஆபாச மிரட்டல்கள்
ஆபாச மிரட்டல்கள்

அடுத்து, புகைப்படம், வீடியோ வழியே தன்னை அவமானப்படுத்திவிடுவதாக ஒருவர் மிரட்டினால், பெண்கள் பயந்து நடுங்கி ஒடுங்கத் தேவையில்லை. ஏனெனில், இப்படி ஒருவர் நம்மை மிரட்டினால், இந்தப் பிரச்னையில் அவர்தான் குற்றவாளி. நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்ற தெளிவு முதலில் நமக்கு வர வேண்டும். எனவே, பெண்கள் முதலில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, தவறு செய்த நபரை சட்டபூர்வமாக தண்டிக்கும் வழிமுறைகளைத்தான் கையாள வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை, இன்றைக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. எனவே, குழந்தைகள் கையில் நாமே செல்போன், லேப்டாப் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. இந்தச் சூழலில், ஆசிரியர்களே குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்ளும் சம்பவங்களையும் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பள்ளிகள் அளவில் நடைபெறும் இது போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு, பெற்றோர் - குழந்தைகள் இடையில் நல்லதோர் ஆரோக்கியமான உறவு இருத்தல் வேண்டும். ஆசிரியரே ஆனாலும் தவறு செய்தவரை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்குத் தயங்குதல் கூடாது.

`வா கோயிலுக்குப் போயிட்டு வரலாம்!' - 17 வயது மகளுக்கு தாயே அரங்கேற்றிய கொடூரம்

அடுத்ததாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள் நாளடைவில், டிஜிட்டல் உலகுக்குள் முழுநேர அடிமைகளாக மாறிவிடுவதும் அல்லது இணையத்திலேயே தவறான திசைகளுக்கு வழிதவறிப் போய்விடுவதுமான பிரச்னைகளும் எழுகின்றன.

ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு வழிமுறையைக் கையாள்கிறார்கள். அதாவது ஐந்து நாள்கள் வகுப்புகள் என்றால், மூன்று நால்கள் மட்டுமே ஆன்லைன் வழியாகப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள இரண்டு நாள்களில் டிஜிட்டல் அல்லாத வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கான அசைன்மென்ட்கள் தரப்படுகின்றன. இந்த இரண்டு நாள்களில் எந்தக் காரணத்தைக்கொண்டும் டிஜிட்டல் பக்கம் குழந்தைகளின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்று திட்டமிட்டு யதார்த்த வாழ்க்கைக்கு அவர்களைப் பழக்குகிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு டிஜிட்டல் வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்குமான வித்தியாசம் புரிகிறது.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு

அடுத்து, ஆன்லைன் விளையாட்டுகள் அல்லது தவறான வெப்சைட்டுகளின் பக்கம் குழந்தைகளின் கவனம் செல்லாமலிருக்க, பெற்றோரின் கண்காணிப்பு அவசியம். உதாரணமாக, கம்ப்யூட்டரில் பதிவாகியுள்ள ஹிஸ்டரி, குக்கீஸ்களை தினம்தோறும் பெற்றோர் கண்காணித்துவந்தால், ஆன்லைனில் குழந்தைகள் எந்தெந்தப் பக்கங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியவரும்.

பெரும்பாலான வீடுகளில், செல்போன், கம்ப்யூட்டருக்கு 'லாக்' சிஸ்டத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளை கன்ட்ரோல் செய்ய முயல்கிறார்கள். ஆனால், நடைமுறையில் பெற்றோரைவிடவும் புத்திசாலியாக இருக்கும் குழந்தைகள் அதே டெக்னாலஜி உதவியுடன் 'அன் லாக்' செய்து பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.

எனவே, ஆன்லைன் வகுப்புகள் தவிர மற்ற நேரங்களில், குழந்தைகளின் கைகளில் செல்போன் கொடுக்கக் கூடாது. கம்ப்யூட்டர் என்றால், வீட்டின் வரவேற்பறை மாதிரியான இடங்களில் வைத்திருப்பது நல்லது. மேலும், வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களிலும்கூட இடையிடையே குழந்தைகளைக் கண்காணிப்பதும் குழந்தைகளுக்கு எச்சரிக்கை உணர்வைத் தரும்'' என்கிறார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு