Published:Updated:

வைரலான கேள்வி; நீண்டுகொண்டே போன விசாரணை - 141 நாள்களுக்குப் பிறகு கிடைத்த விடை!#Mugilan

`முகிலன் எங்கே?’ என்ற கேள்விக்கும், முகிலனைப் பற்றிய பல விதமான சந்தேகங்களுக்கும் 141 நாள்களுக்குப் பிறகு விடை கிடைத்திருக்கிறது.

முகிலன்
முகிலன்

`கொளுத்தியது யார்? - ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள்தான் காரணம் என கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பகிரங்கமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார் சூழலியியல் போராளி முகிலன். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து அன்றிரவு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குத் திரும்பவிருந்த முகிலன் திடீரென மாயமானார்.

முகிலன்
முகிலன்

பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதே, `இந்த ஆதாரங்களை எல்லாம் வெளியிடுவதால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என முகிலன் சொல்லியிருந்ததால், முகிலன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகிலன் மாயமானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஓரிரு நாளில் முகிலனைப் பற்றிய தகவல் கிடைத்துவிடும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஸ்டெர்லைட் நிறுவனமோ, தமிழக போலீஸோதான் முகிலனைக் கடத்தி ரகசிய இடத்தில் வைத்திருக்க வேண்டும் எனப் பலரும் கோபக் குரல் எழுப்பினர். சமூக வலைதளங்களில் பலரும் `முகிலன் எங்கே?’ எனக் கேள்வியெழுப்ப, சூழலியல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி தமிழகம் முழுக்க போராட்டங்களை நடத்தினர்.

`இந்த ஆதாரங்களை எல்லாம் வெளியிடுவதால் என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’
முகிலன்

முகிலன் வழக்கை கையில் எடுத்து விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் துப்புக் கிடைக்காமல் திணறினர். கிட்டத்தட்ட 160 பேருக்கும் மேலாக முகிலனைப் பற்றி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டபோதிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் `முகிலனை நெருங்கிவிட்டோம். கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது’ என்பதை மட்டுமே சொல்லி வந்தனர். 100 நாள்களுக்கும் மேலாகியும் முகிலனைப் பற்றிய எந்தவிதமான தகவலும் கிடைக்காதபோது, ஒருவேளை மணல் மாஃபியா கும்பல் முகிலனை எதாவது செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக எழும்பியது.

இதற்கிடையே குளித்தலை காவல் நிலையத்தில் முகிலன் மீது பாலியல் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால்தான் முகிலன் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. முகிலன் விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யவே போலீஸார் திட்டமிட்டு இப்படியான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர் என்றும் சொல்லப்பட்டது. முகிலன் விவகாரம் இப்படி சென்றுகொண்டிருக்க, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில், `முகிலனை நெருங்கிவிட்டோம். முகிலன் வட மாநிலத்தில் இருக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.

முகிலன்
முகிலன்

இந்தச் சூழ்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனில் முகிலன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முகிலனின் சொந்த ஊரான சென்னிமலையைச் சேர்ந்த சண்முகம் என்பவர், இந்த விவகாரத்தை போனில் முகிலனின் மனைவிக்குத் தெரிவித்திருக்கிறார். முகிலனைக் கைது செய்த திருப்பதி ரயில்வே போலீஸார், அவரை ரயில் மூலமாக காட்பாடிக்கு அழைத்துச் சென்று தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

காட்பாடியிலிருந்து நள்ளிரவு முகிலனை அழைத்துக்கொண்டு கிளம்பிய தமிழக போலீஸார், விடியற்காலை 4.30 மணிக்கு சென்னைக்கு வந்திருக்கின்றனர். தற்போது சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் முகிலனை வைத்திருப்பதாகவும், இன்று மாலைக்குள் முகிலனை நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வாய்ப்பிருப்பதாகவும் முகிலனுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இந்த 141 நாள்களில் முகிலன் எங்கே இருந்தார், அவரை யாராவது கடத்தி வைத்திருந்தார்களா போன்ற கேள்விகளுக்கு முகிலன் வாய் திறந்து சொல்லும்போது மட்டுமே பதில் கிடைக்கும்.

`முகிலன் எங்கே?’ என்ற கேள்விக்கும், முகிலனைப் பற்றிய பல விதமான சந்தேகங்களுக்கும் 141 நாள்களுக்குப் பிறகு விடை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த 141 நாள்களில் முகிலன் எங்கே இருந்தார், அவரை யாராவது கடத்தி வைத்திருந்தார்களா போன்ற கேள்விகளுக்கு முகிலன் வாய் திறந்து சொல்லும்போது மட்டுமே பதில் கிடைக்கும்...!