Published:Updated:

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 3: சமூக - அரசியல் நிலையில் நாம் வந்தடைந்திருக்கும் இடம் என்ன?

தாராளமயத்தால், குறைந்த வருமானமுள்ள வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில் இருந்து 2010-ல் இந்தியா வெளியேறியது. இப்போது நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''30 வருடங்களுக்குப் பிறகு நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் இன்னும் வெகுதூரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியர்கள் எல்லோருக்கும் கண்ணியமான வாழ்வைத் தருவதற்கு, நம் முன்னுரிமைகளை மாற்ற வேண்டும்.

கொரோனாத் தொற்றால் சமீப காலத்தில், நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும்போது, சுகாதாரம், கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்'' என்று வருந்தியிருக்கிறார் மன்மோகன் சிங்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

பொருளாதார தாராளமயமாக்கல் இந்தியாவுக்கு அறிமுகமானபோது மத்திய நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். ”அரசின் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்தால்தான் அதிக வளர்ச்சி சாத்தியமாகும்” என்று அப்போது அவர் சொன்னார்.

மன்மோகன் சிங் அப்போது நிதியமைச்சர் ஆனது, ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்தின் கட்டாயத்தால்! இந்தியாவுக்கு அப்போது தேவைப்பட்ட கடனை அவர்கள்தான் கொடுத்தார்கள், அதனால் இந்திய நிதியமைச்சர் யார் என்பதையும் தீர்மானித்தார்கள்.

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 1: நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் கூட்டணியும், பொருளாதார சுதந்திரமும்!

சுமார் 45 ஆண்டுகளாகத் தொடர்ந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவு வெறும் எட்டே மணி நேரத்தில் எடுக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. பொருளாதார ஆலோசகர் மான்டெக் சிங் அலுவாலியா, நிதியமைச்சர் மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கூடிப் பேசி ஒரு ஃபைல் தயாரித்து பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துப் போகிறார்கள். மன்மோகன் சிங்கிடம், ''நீங்கள் படித்துவிட்டீர்களா, உங்களுக்கு சம்மதம்தானே?'' என்று கேட்ட பிரதமர், மன்மோகன் சிங் தலையாட்டியதும் கையெழுத்து போட்டார். இறக்குமதிக் கொள்கை தலைகீழாக மாறியது.

நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்

அது நம் வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. 91-ம் ஆண்டில் இந்தியர் ஒருவரின் தனிநபர் வருமானம் 538 ரூபாயாக இருந்தது. இப்போது 12,140 ரூபாய். தாராளமயத்தால், குறைந்த வருமானமுள்ள வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில் இருந்து 2010-ல் இந்தியா வெளியேறியது. இப்போது நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் ஒன்றாகவே இந்தியா இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல பொருள்களின் விலைவாசிகளும் அதற்கு ஏற்றபடி உயர்ந்துவிட்டது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை அப்போது சுமார் 70 ரூபாய். இப்போது ஒரு சிலிண்டர் 850 ரூபாய். ஆனால், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை அந்த அளவுக்கு உயரவில்லை.

கடந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகளாவிய பொது முடக்கம் நிகழ்ந்தபோது எல்லா நாடுகளிலும் பொருளாதாரக் குறுக்கம் ஏற்பட்டிருக்கிறது; எனினும், இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலைக்கு கோவிட்-19 மட்டுமே காரணமல்ல என்பது வெளிப்படை. கொரோனா காலத்துக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் கீழ்நோக்கிதான் சென்றுகொண்டிருந்தது. எந்தத் திட்டமிடலுமின்றி நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி குழப்பங்கள் ஆகியவை அமைப்புசாரா தொழில்களையும், பணத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு, குறு தொழில்களையும் சிதைத்தன. கொரோனாப் பெருந்தொற்று அதை இன்னும் மோசமாக்கியது.

கொரோனா பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்று

“அரசுக் கட்டுப்பாடு இல்லாமல் பொருளாதாரம் தன்னிச்சையாக இயங்க அனுமதிப்பதையே ‘தாராளமயம்’ என்கிறார்கள். தாராளவாதம் என்பது தனியாக உருவாவதில்லை. உலகமயம், தனியார்மயம் ஆகியன அத்துடன் இணைந்தவை'' என்கிறார் அரசியல் விமர்சகர் அ.மார்க்ஸ்.

''கல்வி, மருத்துவம் முதலான அடிப்படைச் சேவைகள் உட்பட அனைத்தும் வணிகமயமாக்கப்படுவது உலகமயத்தின் விளைவுதான். ‘காட்’ ஒப்பந்தம் உலக அளவில் யாரும் உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் இன்றிச் சுதந்திரமாக வணிகம் செய்ய வழிவகுத்தது; அதன்பின் கல்வி, மருத்துவம் முதலான சேவைத் துறைக்கும் ஒரு ‘காட்’ ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது வாஜ்பாய் அரசு அதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்தது. அதற்கடுத்ததாக இப்போது புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இடஒதுக்கீடு பற்றிப் பேச்சே இல்லை. ‘நீட்’ முதலானவை எல்லாம் இந்தப் பின்னணியில் உருவானவைதான்.

வாழ்க்கைத் தரம் உயர்வு, தனிநபர் வருமானம் அதிகரிப்பு, ஆயுள் அதிகரிப்பு என்றெல்லாம் தாராளவாதத்தின் புகழ்பாடுதலில் எந்தப் பொருளும் இல்லை. 2008-ல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை உலகம் சந்தித்தது. கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்வதில் இன்று உலகம் சந்திக்கும் தோல்விகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் ஓரளவு அரசுக் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இயங்கும் சீனாதான் கோவிட் தாக்குதலை உலகம் வியக்கும் வகையில் சமாளித்தது.

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

வருமானத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதிலும் பொருளில்லை. ஏற்பட்டுள்ள கொஞ்சநஞ்ச வளர்ச்சியும் சமமாக இல்லை. நிரந்தர வேலை, இடஒதுக்கீடு முதலியன இன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. 2011-க்குப் பின் வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கின. கல்வித் தகுதிக்குக் குறைவான வேலைகளில், குறைவான ஊதியத்தில் வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொறியியல் பட்டதாரிகள் டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். சிறிய அளவிலான தொழில்கள் (micro industries) பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்மயமாவதற்கு முக்கியத்துவம் அளிப்பதன் இன்னொரு பக்கம் விவசாயம் பெரிய அளவில் புறக்கணிக்கப்படுகிறது'' என்கிறார் அவர்.

தாராளமய காலகட்டத்தில், வேளாண் துறையின் வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருந்தது; வேளாண்மை தவிர்த்த மற்ற துறைகளின் வளர்ச்சி, 31 மார்ச் 2020 உடன் முடிந்த 30 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 7.1 சதவிகிதம் என்ற அளவில் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில், 1991-ல் 63.3 சதவிகிதமாக இருந்த வேளாண் துறையின் பங்கு, 2019-ல் 42.6 சதவிகிதமாகக் குறைந்தது. “உலக வர்த்தக அமைப்பின் பிடியில் இந்தியா சிக்கிய பின், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு, அந்நிய வேளாண் பொருள்கள் அதிக அளவு இந்தியாவில் இறக்குமதியாகின. விளைபொருள்களின் விலை தொடர்ந்து சரியவே, விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் வீழ்ந்தனர்” என்கிறார் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

வெங்கடேஷ் ஆத்ரேயா
வெங்கடேஷ் ஆத்ரேயா

“இந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் தாராளமயம் சமூக-அரசியல் தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் கணிசமானது. 1980-களில் நான் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன்; 15 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்தக் கிராமங்களுக்குச் சென்றபோது, அன்றைக்கு இருந்ததைவிட சாலை, சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 1988-ல் நான் தருமபுரிக்குக் கள ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, அங்கு ஒரே ஒரு விடுதிதான் இருந்தது; அதுவும் பழங்காலத்து விடுதி. ஆனால், 2005-ல் அங்கு சென்றபோது நாலைந்து விடுதிகள், உணவகங்கள் என எனக்குத் தேர்வுகள் இருந்தன. 15-20 ஆண்டுகளில் தருமபுரியின் முகமே மாறிவிட்டது. 1980-களில் வெள்ளக்கோவிலுக்கு நான் செல்லும்போது மரத்தடிதான் பேருந்து நிறுத்தம்; ஆனால், சமீபத்தில் அங்கு சென்றபோது 6 ஏ.சி நகைக்கடைகளை எண்ணினேன். இப்படி தாராளமயத்தின் விளைவால் தருமபுரி மட்டுமல்ல, ஏராளமான ஊர்கள் சிறு நகரங்களாக இந்த 30 ஆண்டுகளில் பரிணமித்திருக்கின்றன'' என்கிறார், பேராசிரியர் எழுத்தாளர் ராஜன் குறை கிருஷ்ணன்.

''அதே சமயம், மற்றொரு புறம் திகைக்கச் செய்யும் அளவில் மூலதனக் குவிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஒட்டுமொத்தமாகக் குவியத் தொடங்கியிருக்கிறது; மூலதனம் திரும்பத் திரும்ப அவர்களின் கைகளுக்கே செல்கிறது என தாமஸ் பிக்கெட்டி போன்ற சர்வதேசப் பொருளியலாளர்கள் சுட்டுகின்றனர்.

ராஜன் குறை கிருஷ்ணன்
ராஜன் குறை கிருஷ்ணன்

தொழில் & வர்த்தகம் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாமல் சந்தைப் பொருளாதாரம், சுதந்திர மூலதனம் ஆகியவற்றின் ஊக்குவிப்புடன் இயங்குவதுதான் சரி என்பது தாராளவாதிகளின் வாதம். ஆனால், இந்தச் சுதந்திர மூலதனத்தின் ஓட்டம் கார்ப்பரேட்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிடும் கதைதான் இது. கொரோனாப் பரவலால் சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, அந்த மக்களின் வாழ்வாதாரமே பாதிப்புக்குள்ளானது; அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அறைகூவல்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் ஒருபோதும் காப்பாற்றப்பட மாட்டார்கள். விவசாயம், மீன்பிடித்தல் தொடங்கி அனைத்தும் சிறு-குறு தொழில்முனைவோர்களிடமிருந்து கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் செல்வதற்கான வழிதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களைக் காப்பதும்தான் இன்றைக்கு நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்.

தாராளமயத்தின் விளைவால் ஒருபக்கம் பொருளாதாரம் ஊக்கம், ஜி.டி.பி வளர்ச்சி இருக்கிறது; என்றாலும், அதன் எதிர்மறை விளைவுகளாக மறுபக்கம் நுகர்வு அதிகரிக்கிறது, சுற்றுச்சூழல் கெடுகிறது. நுகர்வின் ருசியைக் கண்டுவிட்ட மக்களுக்கு வளர்ச்சி தேவையாக இருக்கிறது; வெகுஜன அரசியலோ இந்த ‘வளர்ச்சி’ அரசியலிலிருந்து விலக முடியாத நிலையில் இருக்கிறது. இவையெல்லாம் எங்கு போய் நிற்கப்போகின்றன என்று தெரியவில்லை'' என்கிறார் அவர்.

''உலகமயமாக்கலினால் இந்தியாவில், உழைக்கும் வர்க்கம் மத்திய தர வர்க்கமாக மாறியிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 30 கோடி பேர் மத்திய தர வர்க்கத்தில் உருவாகியிருக்கிறார்கள். மற்றொரு புறம், வர்க்கமாக அணுகப்பட்ட சமூகத்தை உற்பத்தியாளன் X நுகர்வாளனாக மாற்றியது இந்த உலகமயமாக்கல். பண்டம் எப்படி உற்பத்தியாகிறது என்பதைவிட, அது எப்படி நுகரப்படுகிறது என்பது உலகமயமாக்கலின் பொருளாதாரமாகப் பரிணமித்தது. நுகர்வியம், வாழ்க்கைமுறை (lifestyle) என்பவை இந்திய வாழ்க்கையில் நுழைந்தது உலகமயமாக்கலினால்தான்; பணம், சொத்து ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டத்தை அது மாற்றியமைத்தது. மேலும், நம்முடைய இறுகிப்போன கலாச்சாரத்தை, பணம் எப்படி இலகுவாக்கியது என்பதை உலகமயமாக்கலின் விளைவாக இன்றைய நவீன வாழ்முறையில் பார்க்கலாம். எல்லாவற்றையும்விட, உலகமயமாக்கலின் விளைவால், இந்த 30 ஆண்டுகளில் கடுமையான சமத்துவமின்மை உருவாகியிருக்கிறது; ஒரு வீட்டிலிருக்கும் இரு சகோதரர்களுக்கிடையேகூட சமத்துவமின்மையை அது உருவாக்கிவிட்டது. இன்றைக்கு கவனத்துக்கு வந்துள்ள சுற்றுச்சூழல் சீரழிவைத் துரிதப்படுத்தியதில் முதன்மைப் பங்கு உலகமயமாக்கலுக்குத்தான்'' என்கிறார், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வந்தபிறகு சோஷலிசம் அடிபட்டுப்போனதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிப்பதும், அரசுகள் மானியங்கள் தருவதும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றன. 'இலவசங்கள் தந்து மக்களைச் சோம்பேறி ஆக்குவதாக' விமர்சனங்கள் எழுகின்றன.

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 2: பொருளாதார சீர்திருத்தத்தின் கனவு நனவானதா?

ஆனால், இதேபோன்ற இன்னொரு சோஷலிசம் வளர்ந்த நாடுகளிலும் இருக்கிறது. அது, நொடித்துப்போகும் நிறுவனங்களுக்கு அரசு நிதி கொடுத்துக் கைதூக்கி விடுவது. 2008-ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் தவித்தபோது பல துறை நிறுவனங்களை மீட்பதற்காக அரசு செலவிட்ட தொகை 498 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 37 லட்சம் கோடி ரூபாய்.

இந்தியாவிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏதேதோ காரணங்கள் சொல்லி வரித் தள்ளுபடி கேட்கின்றன. பல லட்சம் கோடிகளுக்கு வரித் தள்ளுபடியும் செய்கிறது அரசு.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்
பற்றாக்குறையில் தவித்த தேசத்தை இந்தப் பொருளாதார தாராளமயம் தன்னிறைவு அடையச் செய்திருப்பது உண்மை. ஆனால், 'இது யாருக்கான தன்னிறைவு' என்ற கேள்வி எழுகிறது. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் சுகாதாரம், சுற்றுச்சூழலைக் கெடுக்காத வளர்ச்சி என்ற இலக்குகளை எட்டினால்தான் அதுபற்றிப் பேசவே முடியும். பொருளாதார பிரமிடின் அடியில் இருப்பவர்களுக்கும் வளங்கள் கிடைத்தால்தான் நாம் ஒரு தேசமாக வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறோம் என்று கூறமுடியும்.

(நிறைந்தது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு