Published:Updated:

தேசிய அளவில் 2-வது சிறந்த காவல் நிலையம்... சூரமங்கலம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சூரமங்கலம் காவல் நிலையம்
சூரமங்கலம் காவல் நிலையம் ( எம். விஜயகுமார் )

சேலம் மகளிர் காவல் நிலையம் தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு.

சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கும், சேலம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை அங்கீகரிக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஒவ்வோர் ஆண்டும் பல குழுக்கள் அமைக்கப்படுகிறது. அந்தக் குழுக்கள் இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையத்தின் பராமரிப்பு, சுற்றுப்புறச் சூழல், மனுதாரர்களிடம் காவலர்கள் நடந்துகொள்ளும் அணுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத் தரும் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம், வழக்கு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது ஆகியவற்றை ஆய்வுசெய்கின்றன. மேலும், அந்தக் காவல் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சிறந்த காவல் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கின்றன.

அதன்படி 2020 ஆண்டுக்காக இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்ததில், மணிப்பூர் காவல் நிலையம் தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருகிறது. இதனால் சேலம் காவல்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆய்வாளர் வளர்மதி
ஆய்வாளர் வளர்மதி

சேலம் ஜங்ஷன் அருகே உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றோம். காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருந்தது. காவல் நிலைய வளாகத்துக்குள் நடமாடும் முதலுதவி சிகிச்சை வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவல் நிலையத்துக்குள் மகளிர் காவலர்கள் உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி விருதைப் பெறுவதற்காக சென்னை கிளம்பிக் கொண்டிருந்த சூழலில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ''நாங்கள் சேலம் மாநகர ஆணையாளரின் வழிகாட்டுதல் படி எங்கள் காவல் நிலைய கடமைகளை விரைந்து முடித்து வருகிறோம். விருது பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றினோம். தற்போது இந்திய அளவில் எங்க காவல் நிலையம் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எங்கள் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் உமாராணி, ரெஜினா பீவி உட்பட 17 காவலர்களின் அர்ப்பணிப்பான பணியே காரணம். நாங்கள் அனைவரும் வாரம் ஒரு முறை கூடி காவல் நிலையத்தையும், சுற்றுப்புறச் சூழலையும் எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசிப்போம். மேலும், காவல் நிலையத்துக்கு வரும் மனுதாரர்களை எப்படி அணுக வேண்டும், வழக்கை எப்படி கையாள வேண்டும், குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பல வழக்குகளை உதாரணமாகக் கொண்டு கலந்துரையாடல் செய்வோம்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்களையும் குழந்தைகளையும் சந்தித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்வதோடு பொது இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் கலந்துரையாடல்கள் நடத்தினோம். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க முடிந்ததோடு, பல குற்றங்களை வெளியே கொண்டு வரவும் செய்தோம்.

சிறுமிகள் மீதான சிறார் வதைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைக்கச் செய்திருக்கிறோம். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ததும் அதை ஆன்லைனில் பதிவு செய்வதோடு அந்த வழக்கின் அப்டேட் தகவல்களையும் பதிவேற்றம் செய்து அனைவரும் அறிந்துகொள்ள வழி செய்கிறோம். கூட்டுழைப்புடன் இன்னும் பல முன்னெடுப்புகளைச் செய்வோம்'' என்றார்.

சிறப்பான பணிகள் தொடர வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு