Published:Updated:

``எங்களுக்கு நீங்கள் உயிரோடு வேண்டும்!" - ராகுல், சோனியா குறித்து சுப்பிரமணியன் சுவாமி

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, பிரதமரான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே எஸ்.பி.ஜி அமைப்பு உருவாக்கப்பட்டது.

சுப்பிரமணியன் சுவாமி - அமித் ஷா
சுப்பிரமணியன் சுவாமி - அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் சிறப்புப் பாதுகாப்புப் படைத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

எஸ்.பி.ஜி என்றழைக்கப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த மசோதா கடந்த சில வாரங்களாகப் பேசுபொருளாகி வருகிறது. யாருக்கு `சிறப்புப் பாதுகாப்புப் படை' பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதங்கள் பரவலாக எழுந்தன. தற்போதைய மசோதா, இந்தியாவின் பிரதமருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும், முன்னாள் பிரதமர்கள் யாரேனும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்தால், அவர்களுக்குப் பாதுகாப்பு தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறுகிறது இந்தச் சட்டத்திருத்தம்.

அமித் ஷா
அமித் ஷா

1981-ம் ஆண்டு வரை, பிரதமர்களின் பாதுகாப்பு என்பது டெல்லி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன்பிறகு, சிறப்புக் காவல் படையினர் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். 1984-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்குப் பிறகு, பீர்பால் நாத் கமிட்டி உருவாக்கப்பட்டது. பீர்பால் நாத் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு என்ற புதிய அமைப்பை உருவாக்கியது. பிற்காலத்தில், இந்த அமைப்பின் பெயர், எஸ்.பி.ஜி - சிறப்புப் பாதுகாப்புப் படை என்று மாற்றப்பட்டது.

`அதெல்லாம் ஒன்னும் ஆகாது!’ - சிவசுப்ரமணியத்தின் அலட்சிய பதிலால் பறிபோன 17 உயிர்கள் #Mettupalayam

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, பிரதமரான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே எஸ்.பி.ஜி அமைப்பு உருவாக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் குறித்தும் அவற்றிலிருந்து அவரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் எஸ்.பி.ஜி தெளிவான வரையறையை வகுத்து வைத்திருந்தது. எனினும், ராஜீவ் காந்தி பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடன், அவருக்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பும் நீக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

பின்பு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, எஸ்.பி.ஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பிரதமர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்படும் என மாற்றப்பட்டது. 1999-ம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், எஸ்.பி.ஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டது. மேலும், முன்னாள் பிரதமர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் மாற்றப்பட்டது.

எஸ்.பி.ஜி சட்டத்திருத்தம் மேற்கொண்ட போதும், வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு மரணமடையும் வரை, எஸ்.பி.ஜி பாதுகாப்போடு இருந்தார். காங்கிரஸ் ஆட்சியிலும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை, இந்தியாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்சரண் கௌர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மட்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள்கள் இருவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை நிராகரித்துவிட்டனர்.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்
ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்
Photo: AP
நாளை நீங்கள் எதிர்க்கட்சியாக அமரும் போது, அச்சுறுத்தல் என்பதை வெறும் 5 ஆண்டுகள் என எப்படி வரையறை செய்வீர்கள்?
வில்சன், நாடாளுமன்ற உறுப்பினர்.

எஸ்.பி.ஜி படையினருக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஏறத்தாழ 3 ஆயிரம் வீரர்கள் பணியாற்றும் எஸ்.பி.ஜிக்கு இந்த நிதியாண்டு 535 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் பிரதமருக்கு மட்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் மற்ற தலைவர்களுக்கு `இஸட் ப்ளஸ்' பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இதைப் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர்.

மக்களவையில் இந்தச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த டிசம்பர் 3 அன்று, மாநிலங்களைவில் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் பேசினார். ``இந்தச் சட்டதிருத்த மசோதா ஒரு கட்சியை மட்டும் குறி வைக்கிறது. ராஜீவ் காந்தியின் எஸ்.பி.ஜி படை நீக்கப்பட்ட பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் 3 மாதங்கள் முன்பு வரை, எஸ்.பி.ஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டதன் காரணம், அவர்களின் உயிருக்கு இருந்த அச்சுறுத்தல்தான். சில லட்சங்களைச் சேமிக்க, உயிர்களின் பாதுகாப்பில் விளையாடப் போகிறோமா? நாளை நீங்கள் எதிர்க்கட்சியாக அமரும் போது, அச்சுறுத்தல் என்பதை வெறும் 5 ஆண்டுகள் என எப்படி வரையறை செய்வீர்கள்?" என அமித் ஷாவை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு நீங்கள் உயிரோடு வேண்டும்; ஏனென்றால் ஊழல் வழக்குகளில் நீங்கள் சிறை செல்வதை நாங்கள் காணவேண்டும்
சுப்பிரமணியன் சுவாமி, நாடாளுமன்ற உறுப்பினர்.
சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா?'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்!

பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ``சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் காட்ட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ``எங்களுக்கு நீங்கள் உயிரோடு வேண்டும்; ஏனென்றால் ஊழல் வழக்குகளில் நீங்கள் சிறை செல்வதை நாங்கள் காண வேண்டும்" என்றார்.

இறுதியாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``பாதுகாப்பு என்பது காந்தி குடும்பத்திற்கு மட்டுமான தனிப்பட்ட பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமான பிரச்னை. இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும், பிரதமர் மோடியை விட அதிகமான அச்சுறுத்தல் இருக்கலாம். ஆனால் எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும்" என்றார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலளித்த அமித் ஷா, ``எஸ்.பி.ஜி சட்டத்தில் இது ஐந்தாவது சட்ட திருத்தம். இது காந்தி குடும்பத்தைக் குறிவைத்துக்கொண்டு வரப்படவில்லை. ஆனால், இதற்கு முன்பு நடந்த சட்ட திருத்தங்கள், ஒரு குடும்பத்திற்காக மட்டுமே நடந்தன" என்றார்.

அமித் ஷா
அமித் ஷா

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்த பின், சிறப்புப் பாதுகாப்புப் படை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.