Published:Updated:

`பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ அறிவிப்பும், அதையொட்டிய ஐந்து திட்டங்களும்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் ( ஜார்ஜ் அந்தோணி )

ஒரு முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவை பெண்களின் நலனுக்கான திட்டங்கள்.

1992-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், அவரது மறைவுக்குப் பின்னர், அவர் பிறந்த தினமான பிப்.24 இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்.

சமகாலத்தின் ஒரு சகாப்தம் ஜெயலலிதா. ஆயிரம் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், லட்சக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்டவர். ஒரு முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவை பெண்களின் நலனுக்கான திட்டங்கள்.

Jayalalitha
Jayalalitha

பெண் சிசுக் கொலையைப் பெருமளவு குறைத்ததில் பெரும் பங்கு வகித்தது 1992 ஆம் ஆண்டின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் தொட்டில் குழந்தை திட்டம். முதல் திட்டம், பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி வழங்கியது, இரண்டாவது பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது. இதன்மூலமாக பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் என்ற எண்ணத்தினால் இன்னலைச் சந்திக்கும் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.

இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் மனதிற்கு நெருக்கமான ஒரு நற்காரியத்தை யொட்டி, அவரது பிறந்த தினத்தை மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்திருக்கிறது `அம்மாவின் ஆட்சியை' நடத்தும் அ.தி.மு.க அரசு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப் பின்னர் இந்த அறிவிப்பு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க! - மூன்று ஆண்டுகளில் நடந்தது என்ன? #Timeline

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பிப் 24 அன்று கொண்டாடப்பட்டது. கடந்த தேர்தல் ஆண்டில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறைவான கொண்டாட்டங்கள் என்றாலும், இந்த ஒரு அறிவிப்பில் ஹிட்டடித்திருக்கிறது எடப்பாடி அரசு.

குறிப்பாக, மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டன. மேலும், அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

 பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் தினம்
`இந்தியக் குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றித் தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்’ என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுமட்டுமன்றி, இந்த தினத்தை யொட்டி ஐந்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்த விவரங்கள் பின்வருமாறு:

* அரசு காப்பகங்களிலிருந்து வெளியேறும், 21 வயது நிறைவடைந்த ஆதரவற்ற பெண்களுக்கு, அவர்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்ள உதவும் வகையில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* 18 வயதுக்குப் பிறகு அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியேறும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மேற்படிப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயதொழில் ஆகியவை செய்வதற்கான உதவியும், உதவித்தொகையும் வழங்கப்படும், இந்த உதவி அவர்களின் 50 வயது வரை தொடரும்.

* ஆதரவற்ற குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* பெண் சிசுக் கொலையைக் குறைக்கச் சிறப்பாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகங்களுக்குப் பாராட்டு தெரிவித்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும்.

* குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஆதரவற்ற, குழந்தைகளுக்கு, TNPSC-இன் கீழ் வராத, சமூக நலத்துறையின் சி மற்றும் டி பிரிவு அரசு வேலைவாய்ப்பிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பிலும், அங்கன்வாடி, மத்திய உணவுத் திட்டத்திலும் முன்னுரிமை வழங்கப்படும்.

EPS - OPS
EPS - OPS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலான இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் எனில் மகிழ்ச்சியே.

அடுத்த கட்டுரைக்கு