Published:Updated:

பெல், செயில், என்.எல்.சி இனி தனியாருக்கு... பி.ஜே.பியின் முடிவை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

திருச்சியில் உள்ள பெல் நிறுவனம்
திருச்சியில் உள்ள பெல் நிறுவனம்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியையே மிஞ்சிவருகிறது மத்திய பா.ஜ.க அரசு.

தமிழகத்தின் பெருமைமிகு தொழில் அடையாளங்களாகத் திகழ்ந்துவரும் ‘பெல்’ (BHEL) எனப்படும் பாரத மிகுமின் நிறுவனம், ‘செயில்’ (SAIL) எனப்படும் சேலம் உருக்காலை, என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயம் ஆக்குவதற்கு நீண்டகாலமாக முயற்சி நடந்துவருகிறது.

எப்போதெல்லாம் தனியார்மய முயற்சி நடக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும். அந்த எதிர்ப்பு, ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கும். ஆனால், இப்போது மத்தியில் அறுதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் தனியார்மய நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

என்.எல்.சி
என்.எல்.சி

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் ஜனவரி 8-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதே நாளில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, பெல் உட்பட ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாரிடம் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, தாதுப்பொருள்கள் சட்டத்தைத் திருத்தி அவசரச் சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காமராஜர் ஆட்சியில் திருச்சிக்குக் கொண்டுவரப்பட்ட கனரக மின் உற்பத்தி நிறுவனமான பெல் நிறுவனம், மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்தைப் பெற்றது. இதற்கு, தமிழகத்தில் சென்னை, திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை உருவாக்கத் தேவைப்படும் கொதிகலன்கள் (Boiler), சுழலிகள் (Turbine) மற்றும் பெருவகை மின்னுருவாக்கத்துக்குத் தேவைப்படும் துணைக்கருவிகள் ஆகியவை பெல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, சுமார் ரூ.23,000 கோடி. லாபத்தில் இயங்கிவரும் இந்தப் பொதுத்துறை நிறுவனம், பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது. இத்தகைய நிறுவனத்தைத் தனியார்மயம் ஆக்குவதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்

வழக்கமாக, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் கொடுப்பதாக ஆட்சியாளர்கள் சொல்வார்கள். ஆனால், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தூக்கிக்கொடுக்க இப்போது அரசு முடிவுசெய்துள்ளது. நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட் (NINL) என்பது ஒரு கூட்டு நிறுவனம். தமிழ்நாட்டில் உள்ள பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL), உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தகக் கழகம் (MMTC), தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC), உலோகவியல் மற்றும் பொறியியல் ஆலோசனைக் கழகம் (MECON) ஆகிய மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், ஒடிஷா சுரங்கக் கழகம் (OMC), ஒடிஷா முதலீட்டுக் கழகம் (IPICOL) ஆகிய மாநில அரசுப் பொதுத்துறை நிறுவனங்களும் நீலாச்சல் இஸ்பேட் நிகாம் லிமிடெட்டில் பங்குதாரர்களாக உள்ளன. இந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே, மத்திய அரசுக்குச் சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதென்று முடிவுசெய்திருப்பதாகக் கடந்த ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதன் மூலமாக, 2019-20 நிதியாண்டில் ரூ.1,05,000 திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, ஆறு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், "லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதும், பிறகு தேர்தல் பத்திரங்கள் என்கிற பெயரில் ஆதாயம் பெறுவது என்பதும் ஆட்சியாளர்களின் நோக்கம்.

கனகராஜ்
கனகராஜ்
`அவர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்களா?!’ - டெல்லி சீற்றமும் கூட்டு அறிக்கையின் பின்னணியும்

மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லை. மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்கிறார்கள். இதனால்தான், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்.

தனியார்மயத்தின் நோக்கத்தை நம்மிடம் விளக்கிய பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளரான சீனிவாசன், “எல்லாத் தொழில்களையும் அரசே நடத்த முடியாது. அது அவசியமும் அல்ல. உதாரணமாக, ஹோட்டல் அசோகா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலை மத்திய அரசு நடத்தியது. ஹோட்டல் நடத்துவது அரசின் வேலை அல்ல. எனவே, அதைத் தனியாரிடம் கொடுக்க முடிவெடுக்கிறது.

சீனிவாசன்
சீனிவாசன்

தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சில துறைகளைத் தவிர மற்றவற்றைத் தனியாரிடம் கொடுத்துவிடலாம். குறிப்பாக, சேவைத்துறைகளைத் தனியாரிடம் கொடுத்துவிடலாம். அதுதான் சிறந்த முடிவு. இந்தத் தனியார்மயத்தின் மூலம் கிடைக்கும் நிதியை சமூகநலத் திட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிட முடியும்" என்றார். ஆனால், பா.ஜ.க-வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த 'சுதேசி ஜாக்ரான் மன்ச்' என்ற அமைப்பு, மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு