Published:Updated:

``சுஜித்தின் பெற்றோர், ஆழ்துளைக் கிணற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டது இதனால்தான்!” - மீட்புப்பணி அதிகாரி

திருமணத்துக்கு முன்னரே அந்த ஆழ்துளைக் கிணறு போடப்பட்டிருந்ததால், அதுபற்றிய விவரம் ஏதும் சுஜித்தின் தாய் கலாமேரிக்குத் தெரியாது.

சுஜித்
சுஜித்

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன், கடந்த அக்.25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, 80 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வருவாய், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புப் பணி எனப் பல தரப்பினரும், உயரிய தொழில்நுட்பங்களைக்கொண்டு போராடிப்பார்த்தும், சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. இச்சம்பவத்தில், நேரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு சென்னை திரும்பியுள்ள தேசிய பேரிடர் மீட்புப் பணி உயரதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். ``இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியாக நான் பேசவில்லை. அதனால் என் பெயர் தேவையில்லை. ஒரு சக மனிதனாகக் கூறவேண்டிய சில விஷயங்களைக் கூறுகிறேன்” என்று அவர் கூறிய விஷயங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

சுஜித்தின் குடும்பம்
சுஜித்தின் குடும்பம்
மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?

``சுஜித் இறந்த பிறகு, சமூக ஊடகங்களில் பலரும் அவன் பெற்றோரைத் திட்டுகிறார்கள். `சின்னப் பிள்ளைய இப்படியா ஆழ்துளைக் கிணற்றுப் பக்கத்துல விளையாட விடுவாங்க? எல்லாம் சுஜித் அம்மா பண்ணின தப்பு' என்று சுஜித்தின் தாய் கலாமேரி மீதும், `ஆழ்துளைக் கிணற்றுக்கு போர் போட்டுட்டு மூடாம விட்டது சுஜித் அப்பா தப்பு. சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கணும்’ என சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் மீதும் சிலர் கொந்தளிக்கிறார்கள்.

வக்கிரபுத்திகொண்ட ஒருசிலர், `பிள்ளைய கிணத்துக்குள்ள தள்ளிவிட்டா அரசாங்கம் லட்சம் லட்சமா பணம் கொடுக்குது’ என கீழ்த்தரமான பதிவுகளையும் செய்கிறார்கள். உண்மை என்னவென்பதே தெரியாமல், சுஜித்தின் பெற்றோர்மீது இதுபோன்ற விமர்சனங்களை வைப்பது தவறு.

சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ், தன் திருமணத்துக்கு முன்னர் அண்ணன், தம்பி எனக் கூட்டுக் குடும்பமாகத்தான் வாழ்ந்துள்ளார். அச்சமயத்தில், வீட்டின் அருகே 850 அடி ஆழத்தில் போர் போட்டுள்ளனர். பாறைகள் மிகுதியாக இருந்ததால், தண்ணீர் ஊறுவது சில மாதங்களிலேயே நின்று போயுள்ளது. பின்னர், அந்த ஆழ்துளையை மண் கொட்டி மூடிவிட்டார்கள். இது நடந்து ஏழு வருடங்களாகிவிட்டது. இதற்குப் பின்னர்தான், பிரிட்டோவுக்கும் கலாமேரிக்கும் திருமணம் நடைபெற்று புனித் ரோஷன், சுஜித் என இருபிள்ளைகள் பிறந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, தன் தந்தை வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டில் தன் குடும்பத்துடன் குடியேறிவிட்டார்.

சுஜித் மீட்புப்பணிகள்
சுஜித் மீட்புப்பணிகள்
``நாங்க பட்ட நரக வேதனையை சுஜித் நினைவுபடுத்திட்டான்!’’ -  கிருஷ்ணகிரி குணாவின் பெற்றோர் வேதனை

சுஜித்தைப் பலிவாங்கிய அந்த ஆழ்துளைக் கிணறு, அவனது வீட்டுக்கும் அவன் தாத்தா வீட்டுக்கும் இடையே உள்ளது. பல வருடங்களாக அதில்தான் அக்குடும்பம் நடக்கிறது. அதன் அருகிலேதான் பிள்ளைகளும் விளையாடியுள்ளனர். `கிணற்றைத்தான் மண்ணைக் கொட்டி மூடிவிட்டோமே’ என்கிற எண்ணத்தில் ஆழ்துளை போர் போட்ட எண்ணத்தையே பிரிட்டோ குடும்பம் மறந்துவிட்டது. திருமணத்துக்கு முன்னர் ஆழ்துளை போட்டதால், அதுபற்றிய விவரம் ஏதும் சுஜித்தின் தாய் கலாமேரிக்குத் தெரியாது.

பூமியில் துளையிட்டு அதில் மண்ணைப் போட்டு மூடினால், அருகிலிருக்கும் மண்ணுடன் அது கலந்து இறுகிவிடும். ஆனால், பிரிட்டோ குடும்பத்தினர் போட்ட ஆழ்துளைக் கிணறு, பாறைகள் மீது போடப்பட்டதால், அதில் மண்ணைக் கொட்டி மூடிய பிறகும், மண் பாறையோடு `செட்’ ஆகவில்லை. பல வருடங்களாக ஆழ்துளையில் இருந்த மண், மெள்ள மெள்ளச் சரிந்து கீழே தங்கிவிட்டது. துளையின் மேல் பகுதியில் மட்டும் சிறிதளவு மண் ஒட்டிக்கொண்டு புற்கள் முளைத்துள்ளன. மேற்பரப்புக்கும் அடிப்பகுதிக்கும் இடையேயான இடைவெளியில் மண் இல்லை.

ஆழ்துளை கிணறு
ஆழ்துளை கிணறு
``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

சமீபத்தில் பெய்த மழையில், ஆழ்துளையின் மேல்பகுதியில் இருந்த மண் இலகுவாகியுள்ளது. கடந்த அக்.25-ம் தேதி, வீட்டின் அருகே தன் அண்ணன் புனித் ரோஷனுடன் விளையாடிக் கொண்டிருந்த சுஜித், ஆழ்துளையின் மேற்பரப்பில் கால்வைத்தவுடன், மண் சரிந்து சுஜித்தை ஆழ்துளைக்குள் இழுத்துக்கொண்டது. பதறித்துடித்த கலாமேரிக்கு, இங்கு ஆழ்துளைக் கிணறு இருந்தது பிறகுதான் தெரியும். பாறைகளில் போடப்படும் ஆழ்துளையில் மண்ணைக் கொட்டி மூடினாலும், அது இலகுவாகிவிடும் என்கிற புவியியல் உண்மை அந்த சாதாரணக் குடும்பத்துக்கு எப்படித் தெரியும்?

ஆழ்துளைக் கிணறுகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி கூழாங்கற்கள், சிமென்ட் கொண்டு மூட வேண்டும். அதன்படிச் செய்யாதது சுஜித்தின் தந்தை குடும்பம் செய்த தவறுதான். ஆனால், ஆழ்துளை போடப்பட்டவுடன் அதைக் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது ஏன்? சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுபவர்கள், உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

சுஜித் விழுந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும்  சிறுமிகள்
சுஜித் விழுந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் சிறுமிகள்

உண்மை எதுவும் தெரியாமல் உளறிக்கொட்டும் மக்கள் இனியேனும் அவற்றை நிறுத்தட்டும். சுஜித்தை இழந்து வாடும் அவன் பெற்றோருக்கு இயற்கை பலத்தை அளிக்கட்டும்.