Published:Updated:

நிர்வாகத்திறனில் தமிழகம் முதல் இடம்... என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிர்வாகத்திறனில் முதல் இடம்
நிர்வாகத்திறனில் முதல் இடம்

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ‘நிர்வாகத் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது;

பிரீமியம் ஸ்டோரி

‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ - மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் வரி இது. இன்றைய தமிழகத்துக்கு இது அப்படியே பொருந்தும். வீழ்ந்துவரும் தொழில்துறை, வேலையிழப்புகள், விவசாயப் பின்னடைவு, டாஸ்மாக் சீர்கேடுகள், ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள், மத்திய அரசின் மிரட்டல்கள்... இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ‘நிர்வாகத் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது; தரமான சுகாதார சேவையில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிக்கிறது’ என்று வந்துள்ள தகவல்கள், நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. என்ன சொல்கிறது அந்த ஆய்வு, அது சொல்வது நிஜம்தானா... பார்ப்போம்.

இந்தியாவில் டிசம்பர் 26-ம் தேதி, சர்வதேச நல்லாட்சி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் ஒவ்வோர் ஆண்டுக்குமான நல்லாட்சி அட்டவணையை (Good Governance Index), பணியாளர்கள், பொதுகுறைகள் மற்றும் ஓய்வூதியத்துக்கான மத்திய அமைச்சகம் வெளியிடுகிறது. 2019-ம் ஆண்டுக்கான பட்டியலில்தான் நிர்வாகத்திறனில் தமிழகம் முதல் இடம் பிடித்திருக்கிறது.

எப்படி எடுக்கப்பட்டது ஆய்வு?

ஆய்வுக்காக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களை, பெரிய மாநிலங்கள்-18, வட கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் - 11, யூனியன் பிரதேசங்கள் - 7 என மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை, வர்த்தகம் மற்றும் தொழில்கள், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார மேலாண்மை, சமூகநலன் மற்றும் மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையமாகக்கொண்ட நிர்வாகம் என 10 பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நாடு முழுவதிலும் இந்த 10 பிரிவுகளிலும் உள்ள புள்ளிவிவரங்களை 17 அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெற்று, அவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டிருக்கிறது.

 நல்லாட்சி அட்டவணை வெளியீட்டின்போது...
நல்லாட்சி அட்டவணை வெளியீட்டின்போது...

இதில் நிர்வாகத்திறனில் 18 பெரிய மாநிலங்களின் பிரிவில் 5.62 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு முதல் இடத்திலும், 5.4 மதிப்பெண்ணுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், கர்நாடகம் 5.1 மதிப்பெண்ணைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4.23 மதிப்பெண்ணைப் பெற்று ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடமான 18-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை

உணவு தானியங்கள் உற்பத்தி (0.1), தோட்டக்கலை உற்பத்தி (0.1), பால் உற்பத்தி (0.1), இறைச்சி உற்பத்தி (0.1), வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறையின் வளர்ச்சிவிகிதம் (0.4) மற்றும் பயிர்க்காப்பீடு (0.2) ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.45 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு 9-வது இடத்தில் இருக்கிறது.

வர்த்தகம் மற்றும் தொழில்கள்

எளிதில் தொழில் தொடங்கக்கூடிய கட்டமைப்பு (0.9), தொழில்களின் வளர்ச்சிவிகிதம் (0.05), சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி (0.05) ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 0.86 மதிப்பெண்ணுடன் 14-வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இது முன்பு இருந்ததைவிட பின்தங்கிய நிலை.

சத்யகுமார், குழந்தைசாமி, ஜனகராஜ்
சத்யகுமார், குழந்தைசாமி, ஜனகராஜ்

மனிதவள மேம்பாடு

கல்வித்தரம் (0.3), பாலினச் சமநிலைக் குறியீடு (0.2), தொடக்க நிலையில் பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைப்பு விகிதம் (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) (0.2), ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினரின் (ST) சேர்க்கை விகிதம் (0.1), திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல் (0.1), சுயதொழில்புரிவோர் உட்பட வேலைவாய்ப்பு விகிதம் (0.1) போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.64 மதிப்பெண்ணுடன் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொது சுகாதாரம்

குழந்தைகளின் இறப்பு விகிதம் (0.3), கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதம் (0.3), மொத்த கருவுறுதல் விகிதம் (0.1), நோய்த்தடுப்பு சாதனை (0.1), பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களின் இருப்பு (0.1) மற்றும் 24 X 7 நேரமும் செயல்படும் வசதி (0.1) ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.78 மதிப்பெண்ணுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.

ஜனகராஜ்
ஜனகராஜ்

பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்

குடிநீர் வசதி (0.25), கிராமம் மற்றும் நகரங்களில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாமை (0.20), புறநகர்ப் பகுதிகளை அணுகுவதற்கான வசதி (0.10), சுத்தமான சமையல் எரிபொருள் (0.10), 24 X 7 நேரமும் தடையில்லா மின்சார வசதி (0.10), தேவைக்கேற்ப ஆற்றல் கிடைக்கும் தன்மை (0.05) மற்றும் தனிநபர் மின் நுகர்வு வளர்ச்சி (0.20) ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.74 மதிப்பெண்ணுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு.

பொருளாதார மேலாண்மை

தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி (ஜி.எஸ்.டி.பி) (0.30), மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான நிதிப் பற்றாக்குறை (0.10), மாநிலத்தின் சொந்த வரி வருவாயிலிருந்து மொத்த வரி வருவாய் (0.30) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் (மொத்த நிலுவைகள்) (0.30) போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 0.58 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

சமூகநலன் மற்றும் மேம்பாடு

பிறப்பு பாலியல் விகிதம் (0.1), சுகாதாரக் காப்பீட்டுப் பாதுகாப்பு (0.1), கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் (0.2), வேலையின்மை விகிதம் (0.2), அனைவருக்கும் வீட்டுவசதி (0.1), பெண்களின் பொருளாதார மேம்பாடு (0.1), ஆதிதிராவிடர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு (0.1) மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாணுதல் (0.1) ஆகிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.49 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு ஏழாவது இடத்தில் இருக்கிறது.

நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு

குற்ற நிரூபண விகிதம் (0.30), காவலர்கள் இருப்பு (0.25), மகளிர் காவலர்களின் விகிதாசாரம் (0.15), நீதிமன்றம் மற்றும் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகளில் தீர்வுகாணுதல் (0.30) போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.56 மதிப்பெண்ணுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு.

சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றத்துக்கான மாநில அளவிலான செயல்திட்டத்தின் தன்மை (0.4) மற்றும் வனப்பகுதியில் மாற்றம் (0.6) போன்ற காரணிகளை அடிப்படையாகக்கொண்டு 1 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், 0.58 மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

குடிமக்களை மையமாகக்கொண்ட நிர்வாகம் குறித்த மதிப்பெண் விவரம் கொடுக்கப்படவில்லை.

முதல் இடம் காரணம் என்ன?

இதுகுறித்து பொருளாதார நிபுணரான சத்யகுமாரிடம் பேசினோம்.

“ஒட்டுமொத்த நிர்வாக நல்லாட்சிக் குறியீட்டில், 18 பெரிய மாநிலங்களின் பிரிவில் 5.62 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு முதல் இடம் பிடித்திருப் பதற்கான காரணம், கடந்த ஓர் ஆண்டு செயல்பாடு மட்டுமல்ல... அரசு நிர்வாகப் பணிகளில் கணினி மற்றும் இணைய பயன்பாட்டை தமிழகம் எப்போதோ முன்னெடுத்த தும்தான். மின் ஆளுமையில், நமது மாநிலம் வடமாநிலங்களைவிட பல மடங்கு முன்னணியில் உள்ளது. அதேசமயம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் பிரிவில் தமிழ்நாடு 14-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாலோ, வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தைகள் நடத்துவதாலோ இந்தச் சரிவைச் சரிசெய்ய முடியாது. தொழில்களை எளிமையாகத் தொடங்குவதற்கான கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.

சுகாதாரத் துறையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறித்து, சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.

“ஒட்டுமொத்த குறியீட்டு அடிப்படையில் நமக்கு 0.78 மதிப்பெண்; கேரளாவுக்கு 0.81 மதிப்பெண். வித்தியாசம் 0.3 மதிப்பெண்ணே. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு பிரசவங்கள் (65-68%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. ஆனால், கேரளத்தில் மூன்றில் ஒரு பங்கு பிரசவங்கள் (25%) மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. நோய்த்தடுப்பிலும் தமிழகமே சிறந்து விளங்குகிறது. ஆனால், இந்த இரு குறியீடுகளையும் மத்திய அமைச்சகம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. மருத்துவச் செலவும் குறைவு. விலையில்லா சிகிச்சையும் இங்கே அதிகம்” என்றார்.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைக்கு 9-வது இடம், சுற்றுச்சூழல் பிரிவில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம் பற்றி, பேராசிரியரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜனகராஜிடம் கேட்டோம்.

“சுற்றுச்சூழல் பிரிவில் இரண்டு காரணிகளை மட்டுமே மதிப்பீடு செய்துள்ளார்கள். அந்த இரு காரணிகளிலும் திட்டங்கள் மட்டுமே இவர்களிடம் உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை நிலத்தடிநீர் பாதிப்பு, ஆறுகள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு எனப் பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டால் நிலைமை இன்னும் மோசமாகும். தமிழகத்தில்... ஏன் இந்தியாவிலேயே சுத்தமான ஆறு என்பது இல்லை. ஆனாலும், சுற்றுச்சூழலில் நமக்கு மூன்றாவது இடம் என்பது தமிழகம் இன்னும் மோசமாகவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.

விவசாயத்தைப் பொறுத்தவரை இவ்வளவு இக்கட்டான நிலையிலும் தமிழகம் 9-வது இடத்தில் இருப்பதே ஆச்சர்யம்தான். போதுமான உற்பத்தி இல்லை. 70 சதவிகித விவசாயம் நிலத்தடிநீரை மட்டுமே நம்பியுள்ளது. நிலத்தடிநீரின் அளவும் குறைந்துவிட்டது. பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தில் விவசாயம் செய்கிறார்கள். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு