Published:Updated:

அணைப் பாதுகாப்பு மசோதா: மாநில உரிமையைப் பறிக்கிறதா மத்திய அரசு?!

அணைப் பாதுகாப்புச் சட்டம்
News
அணைப் பாதுகாப்புச் சட்டம்

அணைப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் கேரளாவிலிருக்கும் முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நான்கு அணைகள் மீதான உரிமை பறிபோகும்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என மத்திய அரசு கூறினாலும், இந்தச் சட்டம் மாநில உரிமைகளைப் பறிக்கிற திட்டம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் நேரெதிரான சட்டம் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்புகின்றன. குறிப்பாக, தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும், அணைப் பாதுகாப்பு மசோதாவால் தமிழ்நாட்டுக்கு ஆபத்துதான் என ஓரணியில் நின்று குரலெழுப்பியிருக்கின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அணைப் பாதுகாப்பு மசோதா:

கடந்த 2019, ஜூலை 29-ம் தேதி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போதே, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் எம்.பி-க்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், பா.ஜ.க-வின் அறுதிப் பெரும்பான்மையால், 2019, ஆகஸ்ட் 2-ம் தேதி அணைப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து, தற்போது 2021, டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையிலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியும்வைக்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அணைப் பாதுகாப்பு மசோதாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்தியாவின் அணைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இந்தியாவில் அணைகள்:

உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மிக அதிகப்படியான அணைகள் இருக்கின்றன. இங்கு சுமார் 5,745 பெரிய அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய அணைகளும் உள்ளன. இவற்றில் 160-க்கும் மேற்பட்ட அணைகள் நூறு ஆண்டுகளைக் கடந்தும், 450-க்கும் மேற்பட்ட அணைகள் புதிதாகக் கட்டப்பட்டும்வருகின்றன. இந்தியாவிலிருக்கும் பெரும்பான்மையான அணைகளை அந்தந்த மாநில அரசுகளே கட்டின.

தவளேஸ்வரம் அணை
தவளேஸ்வரம் அணை

இந்த நிலையில்தான், மத்திய அரசாங்கம், `அணைப் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, இந்தியாவில் 1979-ம் ஆண்டு முதல் தற்போதுவரை சிறியதும் பெரியதுமாக 42 அணை உடைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மேலும், 92% அணைகள், இரு மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆறுகளின்மீது கட்டப்பட்டிருப்பதால், மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதற்காக இந்தியாவிலிருக்கும் ஒட்டுமொத்த அணைகளையும் ஒரே குடையின்கீழ் பாதுகாப்பதற்காக, அணைப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருகிறோம். இதனால் பழைமையான அணைகள் பாதுகாக்கப்படுவதோடு, மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகளும் தீர்த்துவைக்கப்படும்' என்கிறது. ஆனால், மத்திய அரசின் கருத்தை அடியோடு மறுக்கின்றனர் தமிழக எம்.பி-க்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக-அதிமுக ஓரணியில்:

`அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது'- திமுக:


தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நம்மிடையே பேசும்போது, ``அணை என்பது மாநிலங்களின் அதிகாரப்பட்டியலில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7, பிரிவு 17-ல் குறிப்பிட்டுள்ளபடி, நீர், நீர்ப்பாசனம், கால்வாய், வடிகால், அணைகள், நீர் சேமிப்பு மற்றும் நீர் மின்சாரம் போன்ற நீர் சார்ந்த உரிமைகள் அனைத்தும் மாநிலப் பட்டியல் அதிகாரத்தின்கீழ் வருகின்றன. ஆனால், இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தால், இவை ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும்" என்றார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

தொடர்ந்து பேசியவர், ``அணைப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் தேசியக்குழு, தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்று இரண்டு அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அதேபோல மாநில அணைப் பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்படும் என்கிறார்கள். இதில் 10 பேர் ஒன்றிய அரசின் சார்பிலும், 7 பேர் மாநில அரசுகள் சார்பிலும் சுழற்சி முறையில் பிரதிநிதிகளாக வருவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், மாநில அரசுகளின் பிரதிநிதிகளை, துறைசார்ந்த நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. அதேபோல, அணை விவகாரங்கள் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் உரிமையும் தேசிய ஆணையத்துக்கே இருக்கிறது. எனவே, மாநில அரசைப் பொறுத்தவரையில், இந்தக் குழுவில் இருந்தும் இல்லாதது போன்ற நிலைதான்! ஆகவேதான் சொல்கிறோம், இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது!" என தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார்.

`கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது'- அதிமுக

அதேபோல, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், ``கேரளாவிலிருக்கும் முல்லைப்பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை. இந்த அணைகளை இயக்கி, பராமரிக்கும் அதிகாரமும் தமிழ்நாட்டுக்கே இருக்கிறது. இப்போது இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்த நான்கு அணைகள் தொடர்பான முழுத் தகவலையும் கேரளாவிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அணைகள்மீதான தமிழ்நாட்டின் உரிமையும் கேள்விக்குறியாகும்!" என்றார்.

நவநீதகிருஷ்ணன்
நவநீதகிருஷ்ணன்

மேலும்,``இந்த மசோதாவில், அணைகட்டிய உரிமையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. ஆணையத்தின் உத்தரவுகள்தான் அணைகள் தொடர்பான விவகாரத்தில் இறுதியானதாக இருக்கும். இது எந்தவகையில் நியாயம்? இந்த ஒற்றை மசோதா மூலம், அணைகளின் முழு உரிமையையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுவரைக்கும் நமக்கிருந்த உரிமைகள்தான் பறிக்கப்படுமே ஒழிய, இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை! இது முற்றிலும் நம் கூட்டாட்சித் தத்துவத்துக்கே விரோதமானது!" என்றார்.

இதேபோல, மாநிலங்களவை எம்.பி-க்கள், வைகோ, சு.வெங்கடேசன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் `அணைப் பாதுகாப்பு மசோதா அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 252-ஐ மீறுவதாக இருக்கிறது என எதிர்ப்புக்குரல் எழுப்பியிருகின்றனர்.

முக்கியமாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ``ஜனநாயக, நாடாளுமன்ற மரபுகளுக்கோ, அரசியல் சட்டத்துக்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையைக்கொண்டு, மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவரும் பா.ஜ.க அரசு மக்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை!" எனக் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தேசத்தின் நலனுக்காக...

மசோதா தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``தமிழகத்துக்கு பன்னெடுங்காலமாக தண்ணீர் தந்துகொண்டிருக்கும் காவிரி, முல்லைப்பெரியாறு அணைகளில் நாம் தொடர்ச்சியாக பிரச்னைகளைச் சந்தித்துவருகிறோம். நாம் கேரள அரசாங்கத்தையோ, கர்நாடக அரசாங்கத்தையோ தட்டிக்கேட்டு சரியான முறையில் தண்ணீர் தரவைக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம், அந்தந்த மாநிலங்களுக்கான அதிகாரம் என்று கூறி, அவர்களின் கடமையிலிருந்து தவறியதுதான்.

பொன். ராதாகிருஷ்ணன்
பொன். ராதாகிருஷ்ணன்

எனவே, இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தலையிட்டு அதிக கவனம் கொடுத்து, மாநிலங்களுக்கிடையே பிரச்னைகள் ஏற்படாதவண்ணம் தடுக்கவேண்டிய தேவை இருக்கிறது. இன்றைய காலத்துக்கு இந்த மசோதா ஒரு கட்டாயத் தேவை. ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு நலனுக்காக கொண்டுவரக்கூடிய சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்துக்கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்!" எனக் காட்டமாக பதிலளித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அதேபோல, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,``சட்டம் குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் செய்வதற்காகவே தி.மு.க., ம.தி.மு.க போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன" என குற்றம் சுமத்தியிருக்கிறார்.

அணைப் பாதுகாப்பு மசோதாவா இல்லை மாநில உரிமைகளைப் பறிக்கும் மசோதாவா என்பதை காலம்தான் தெளிவுபடுத்தும்!