Election bannerElection banner
Published:Updated:

``பணம் வாங்கிக்கொண்டு என் மீது பழி சுமத்துகிறார்கள்!'' - வெடிக்கும் ஜோதிமணி

ஜோதிமணி
ஜோதிமணி

அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு கிடைத்தது. ஆனால், பழிவாங்கும் கோபத்திலிருந்த ஜோதிமணி, 'பேங்க் சுப்பிரமணியத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது' என்று கட்சித் தலைவர்களோடு சண்டையிட்டு, எனக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார் என்கிறார் பேங்க் சுப்பிரமணியன்

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் வெளிவருகிற இந்த நேரத்திலும், காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு குறித்தான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை! கரூர் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி தொகுதி, உள்கட்சி தகராறுகளால் கடைசி நேரத்தில் கைவிட்டுப் போய்விட்டதாக, சர்ச்சை கிளம்பியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

ஏற்கெனவே, தொகுதி வேட்பாளர் தேர்வின்போது, `காங்கிரஸ் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பணம் கொடுப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்குகிறது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கொதித்திருந்தார் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான ஜோதிமணி. இந்த நிலையில், கரூர் மாவட்ட காங்கிரஸில் ஜோதிமணியைக் குறிவைத்தே புகார்கள் கிளம்பிவருகின்றன.

சத்திய மூர்த்தி பவன்
சத்திய மூர்த்தி பவன்

குறிப்பாக கரூர் மாவட்டக் காங்கிரஸின் முன்னாள் தலைவரான பேங்க் சுப்பிரமணியன் இதுகுறித்து நமக்கு எழுதியிருந்த கடிதத்தில், `2016 சட்டமன்றத் தேர்தலில், சொற்ப எண்ணிக்கையில் வெற்றியைத் தவற விட்டுவிட்ட எனக்கு இந்த முறை வாய்ப்பு அளிப்பதற்காக தி.மு.க கூட்டணியில் `அரவக்குறிச்சி தொகுதி'யைக் கேட்டு வாங்கியிருந்தது காங்கிரஸ் கட்சி.

ஆனால், கரூர் எம்.பி-யான ஜோதிமணி, நான் எம்.எல்.ஏ ஆவதை விரும்பவில்லை. எனவே,` என்னுடைய எம்.பி தொகுதியில் எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதை என்னைக் கேட்காமல் நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்? அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸுக்கு வேண்டாம். அதை தி.மு.க-வுக்கே திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று பிடிவாதமாக சண்டையிட்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்' என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விரிவாகப் பேசுவதற்காக கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஏ.ஐ.சி.சி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியனிடம் நாம் பேசியபோது, ``நடந்துமுடிந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியதாகவும், முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, கட்சித் தலைமையை சாடினார் ஜோதிமணி. இதன்மூலம் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையுமே களங்கப்படுத்திவிட்டார் .

சொந்த மாவட்டத்திலேயே எந்த செல்வாக்கும் இல்லாதவர் ஜோதிமணி. 2011 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தவர், 2014 மக்களவைத் தேர்தலில், டெபாசிட்டையே பறிகொடுத்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, ஜோதிமணிக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக எனக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதனால் கோபமான ஜோதிமணி, `பணத்திற்கு விலை போனார், மணல் கொள்ளையர் ' என்றெல்லாம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கடுமையாகத் திட்டிப் பேட்டி கொடுத்தார்.

பேங்க் சுப்பிரமணியன்
பேங்க் சுப்பிரமணியன்

அப்போது, கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நான் இருந்தேன். எனவே, அவருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு நான்தான் காரணம் என நினைத்தவர், கட்சிப் பணி எதிலும் ஒத்துழைப்பு கொடுக்காமல் கட்சியையே முடக்கினார். அதன்பிறகு 2019 தேர்தலில், அகில இந்திய கட்சித் தலைமையின் தயவினால், எம்.பி ஆனவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கரூர் மாவட்ட கமிட்டி தலைவராக தனக்கு ஜால்ரா போடுகிற ஒருவரை நியமித்திருக்கிறார்.

2016 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நான் கரூர் சட்டமன்ற தொகுதியில், 441 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த எனக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவதற்காக காங்கிரஸ் கட்சி மிகவும் போராடியது. அதன் விளைவாக, அரவக்குறிச்சி தொகுதியும் காங்கிரஸுக்கு கிடைத்தது. ஆனால், பழிவாங்கும் கோபத்திலிருந்த ஜோதிமணி, 'பேங்க் சுப்பிரமணியத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது' என்று கட்சித் தலைவர்களோடு சண்டையிட்டு, எனக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார்.

கட்சிக்கு வெளியே பெண்ணியம் பேசிக்கொண்டு வேஷம் போட்டுவரும் ஜோதிமணி, கட்சிக்குள் செய்துவரும் அராஜக அரசியலால் அதிருப்தி அடைந்த கரூர் மாவட்ட தொண்டர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இனியும் ஜோதிமணியின் வரம்புமீறிய செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழக காங்கிரஸ் கட்சித் தவறினால், கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.

ஜோதிமணி மீது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதாரண விளக்கம் கூட கேட்கவில்லை. இதுவே வேறு யாராவது கூறியிருந்தால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா?'' என்றார் கோபத்துடன்.

ஜோதிமணி
ஜோதிமணி

இதையடுத்து, 'அரவக்குறிச்சி தொகுதியில் பேங்க் சுப்பிரமணியம், போட்டியிடக்கூடாது என்ற நோக்கில் நீங்கள் செயல்பட்டது உண்மையா...' என்ற நமது கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ஜோதிமணி, ``2016 சட்டமன்றத் தேர்தலில், நான் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடத்தான் கேட்டிருந்தேன். கரூர் தொகுதியை நான் கேட்கவேயில்லை. ஆனாலும் கரூர் தொகுதியில் நீங்கள் நிற்கமுடியுமா என்று கட்சி கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன். இதுதான் நடந்தது. மற்றபடி எனக்கும் பேங்க் சுப்பிரமணியனுக்கும் இடையே நேரடியாக எந்த மோதலும் கிடையாது.

தற்போது நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி வேட்பாளர் தேர்வின்போதும், அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டிருந்ததில் எனக்கு சில அதிருப்திகள் இருந்தன. அதாவது, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவெடுக்கிறது. எங்களின் எதிர்க்கட்சியான பா.ஜ.க., அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த, ஐ.பி.எஸ் படித்த அண்ணாமலை என்ற இளைஞரை ஏற்கெனவே களத்தில் நிறுத்தியிருக்கிறது. ஆனால், அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட நினைக்கிற காங்கிரஸ் கட்சியோ, அரவக்குறிச்சி தொகுதியிலிருந்தே ஒரு நபரைத் தேர்ந்தெடுக்காமல், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத கரூரிலிருந்து ஒரு நபரைக் கொண்டுவந்து நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும் எதிர்க்கட்சியினர் படித்த, இளைஞர் ஒருவரை நிறுத்தியிருக்கும்போது அவரை எதிர்த்து 73 வயதான நபர் ஒருவரை காங்கிரஸ் கட்சி களம் இறக்கினால், எப்படி வெற்றிபெற முடியும்? அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் தோற்றுப்போனால், அந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பும் எம்.பி என்ற அடிப்படையில் என்னைத்தானே வந்து சேரும். ஆக, தொகுதி எம்.பி என்ற அடிப்படையில், அடிப்படையான இந்த நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் எனது கருத்தாக தேர்தல் குழுவிடம் எடுத்துச் சொன்னேன். இதுமட்டுமல்ல... 'அரவக்குறிச்சி தொகுதி வேண்டாம்' என்று தேர்தல் குழுவிடம் கூறிய நானே, அதற்குப் பதிலாக வேறு ஒரு தொகுதியைத் குறிப்பிட்டும் கேட்டிருந்தேன். ஆனாலும் நான் கேட்ட அந்தத் தொகுதி கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள் அனைவருக்குமே அவர்கள் கேட்ட ஒரு தொகுதி கிடைத்திருக்கிறது. ஆனால், எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. இதற்காக நானும் கோபித்துக்கொள்ள முடியுமா?

பூங்கோதை ஆலடி அருணா: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

ஆக, என்னுடைய கருத்துகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்த தேர்தல் குழு 'அரவக்குறிச்சியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டாம்' என்ற கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பின்வாங்கிவிட்டனர். மாறாக, நான் கூறியிருந்த கருத்தில், தேர்தல் குழுவுக்கு உடன்பாடு இல்லை என்றால், என் கருத்து ஏற்கப்பட்டிருக்காதுதானே... எனவே, 'அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டாம்' என கட்சி அமைத்திருந்த தேர்தல் குழுதான் முடிவெடுத்ததே தவிர... நான் அல்ல. அப்படி முடிவெடுக்கும் அதிகாரமும் என்னிடம் இல்லை. ஏனெனில், இந்தத் தேர்தல் குழுவில் நான் உறுப்பினர் கிடையாது, பிசிசி தலைவர் அல்லது பொதுச்செயலாளர் பொறுப்பிலும் இல்லை என்கிறபோது என் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும்?

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

கரூர் தொகுதியின் எம்.பி என்ற வகையில், தேர்தல் குழுவிடம் எனது கருத்தை முன்வைத்தேன். இதேபோல், பேங்க் சுப்பிரமணியனும் அவரது கருத்தை தேர்தல் குழுவிடம் முன்வைத்திருக்கலாம்தானே... அதைவிடுத்து, என் மீது தனிப்பட்ட வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதென்பது மலிவான அரசியல். எதிர்க்கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை இவர்கள் கூறிவருகிறார்கள். இதே குற்றச்சாட்டுகளைத்தான் கோபண்ணாவும்கூட என் மீது சுமத்துகிறார். ஆக இவர்களெல்லாம் வேறு யாருக்கோ கடன் பட்டிருக்கிறார்கள். எனவே, நேர்மையான அரசியல்வாதியான என் மீது உள்நோக்கத்தோடு குற்றம் சுமத்துகிறார்கள். ஆக இவர்களுக்கெல்லாம் வேறு ஏதோ அஜெண்டா இருக்கிறது'' என்றார் குமுறலாக.

நெல்லை: கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!

காங்கிரஸ் கட்சிக்குள் நடந்துவரும் இந்த கலாட்டக்கள் குறித்து கட்சியின் விளக்கத்தைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம்... ``நான் எப்போதுமே கட்சி விஷயங்களை பொதுவெளியில் விமர்சிப்பது கிடையாது. ஐயா மூப்பனாரிடமும், ப.சிதம்பரத்திடமும் கற்றுக்கொண்ட பாடம் இது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நான் பொறுப்பேற்ற இந்த 2 வருட காலங்களிலும்கூட, கொள்கை ரீதியாகத்தான் பேசிவருகிறேனே தவிர... உட்கட்சி விவகாரங்கள் குறித்து வெளியில் எங்கேயும் பேசியதில்லை!'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு