Published:Updated:

`தமிழ்நாடு' என்று அழைப்பதே நமது அடையாளம் - விளக்கும் ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

''மொழிவழி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.க-வினருக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரில் உள்ள 'நாடு' எனும் வார்த்தை இன்னும் கடுப்பேற்றுகிறது. 'நாடு' என்று சொன்னால், தனி நாடாகிவிடும் என்ற பயம்தான் இதற்குக் காரணம்'' என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலின், தொடங்கிவைத்த `ஒன்றிய அரசு' என்ற வார்த்தைப் பிரயோகம், அடுத்தடுத்த விவாதங்களைக் கடந்து தற்போது `தமிழ்நாடா, தமிழகமா...' என்ற அர்த்தம் பொதிந்த கேள்வியில் வந்து நிற்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில், தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது தி.மு.க. இதையடுத்து, முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, `மக்கள் நலனில் மாநில அரசுகள், மத்திய அரசோடு தோளோடு தோள் நிற்கும் என்று நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான `ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துவரும் தி.மு.க., மக்கள் நலனுக்கான திட்டங்களில் மத்திய பா.ஜ.க அரசோடு முரண்படாமல் ஒத்துழைப்பு நல்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார் அமித்ஷா.

மு.க.ஸ்டாலின் ட்வீட்
மு.க.ஸ்டாலின் ட்வீட்

ஏற்கெனவே மாநில அரசுகளின் உரிமைகளை கருத்திற்கொள்ளாமல், மத்திய பா.ஜ.க அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டுவருவதாக தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்வீட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், `கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழக அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படும்' என்று அரசியல் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் ட்வீட்டியிருந்தார். அதாவது, `மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா' என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 'மாநில கூட்டாட்சி தத்துவத்தை மதித்து, செயல்படுவதுதான் ஒன்றிய அரசின் கடமை' என்பதை சூசகமாக சுட்டிக்காட்டியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

'ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்' என்ற இலக்கை நோக்கி செயல்பட்டுவரும் பா.ஜ.க-வுக்கு, மு.க.ஸ்டாலினின் இந்தப் பதில், மாநில சுயாட்சி குறித்து அதிரடியாக பாடம் புகட்டியது. அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ``மாநிலங்கள் இல்லாமல், ஒன்றிய அரசு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், ஒன்றிய அரசுக்கு என தனியே வாக்காளர்கள் எவரும் இல்லை. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு மாநிலத்தின் வாக்காளர்களால்தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்” என்று காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.

மு.க.ஸ்டாலின் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
மு.க.ஸ்டாலின் - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

'ஒரே தேசம்' நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க-வுக்கு எதிராக தமிழ்நாட்டிலிருந்து தொடர்ச்சியாக எழுந்துவரும் 'மாநில சுயாட்சி உரிமைக் குரல் கடும் எரிச்சலைக் கொடுத்துவருகிறது. இதையடுத்து, பா.ஜ.க ஆதரவாளர்களும் 'ஒன்றிய அரசு' சொல்லாடலுக்குப் பதிலடி கொடுக்கும்வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில், '1967-ம் ஆண்டு,'சென்னை மாகாணம் இனி தமிழ்நாடு என்றழைக்கப்படும்' என அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

1956-ல் விடுதலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான தியாகி சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தன் இன்னுயிரைத் துறந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் உலுக்கியது. ஆனாலும்கூட அன்றைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த காங்கிரஸ் கட்சி சங்கரலிங்கனார் கோரிக்கையை கடைசிவரை நிறைவேற்றவேயில்லை. இந்த நிலையில்தான் 1967-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க அரசு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது.

அண்ணா - சங்கரலிங்கனார்
அண்ணா - சங்கரலிங்கனார்

'தமிழ்நாடு' என்ற பெயருக்குப் பின்னேயுள்ள இந்த வரலாற்றுப் பின்னணியை விமர்சிக்கும்வகையில், 'தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்' என்றுகூறி அதற்கான ஆதாரங்களாக தமிழ் மரபு மற்றும் இலக்கியக் குறிப்புகளை முன்வைத்து வாதாடி வருகின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். இதற்கிடையே, தி.மு.க அரசு பயன்படுத்தி வரும் 'ஒன்றிய அரசு' வார்த்தை குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ``இறையாண்மைமிக்க இந்திய அரசை மிகவும் எளிதாக 'ஒன்றிய அரசு' என்று கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துகிறீர்கள். இந்திய தேசம் 'ஒன்றியமெனில்' தமிழ்நாடு என்ன 'ஊராட்சியா'?'' என்று காரசார கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், 'தமிழ்நாடு - தமிழகம்' என்ற சொல்லாடல்களுக்குப் பின்னேயுள்ள அரசியல்கள் குறித்து நம்மிடையே பேசிய சமூக செயற்பாட்டாளரும் மொழியுரிமைக் களப் போராளியுமான ஆழி செந்தில்நாதன்,

``சாதாரணமாக நாம் பேச்சுவழக்கில் பயன்படுத்திவருகிற வெகுஜன சொல்தான் 'மத்திய அரசு' என்பது. மாறாக, 'ஒன்றிய அரசு' என்று சொல்வதுதான் அரசியல் சாசன ரீதியாக சரியான சொல். ஆனால், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் இந்த 'ஒன்றிய அரசு' என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்கள். ஏனெனில், இந்தியா என்பது 'யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' ஆக இல்லாமல், 'ஒற்றை அரசாக' இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள்.

ஆழி செந்தில்நாதன்
ஆழி செந்தில்நாதன்

அதாவது ஒன்றிய அரசு, மாநில அரசு என்றெல்லாம் இல்லாமல், இந்தியா முழுக்கவே ஒரே அரசு இருக்கவேண்டும்; மற்றவர்கள் அனைவரும் அந்த ஒற்றை அரசின் கீழேயே இருக்கவேண்டும் என்ற ஆதிக்க மனநிலையில் இருந்துகொண்டு இப்படி சொல்லிவருகிறார்கள். மாநில அரசுகளுக்கான உரிமை குறித்து ஏற்கெனவே நாம் உரக்கக் குரல் எழுப்பிவருகிறோம். ஆனால், 'மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை' என்பதுதான் அவர்களுடைய கருத்தாக இருக்கிறது. மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஆளுகிற அரசு என்ற உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக 'ஒன்றிய அரசு' வார்த்தை இருப்பதால், அவர்களுக்கு இது பிடிக்கவில்லை.

`கருணாநிதி வந்தார்; ஸ்டாலினும் வருவாரா?' - தூர்வாரும் பணிகளைப் பார்வையிட விவசாயிகள் கோரிக்கை

ஆக, மொழிவழி மாநிலங்களையே ஏற்றுக்கொள்ளாத இவர்களுக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரில் உள்ள 'நாடு' எனும் வார்த்தை இன்னும் கடுப்பேற்றுகிறது. 'நாடு' என்று சொன்னால், தனி நாடாகிவிடும் என்ற பயம்தான் இதற்குக் காரணம். அப்படியென்றால், ராஜஸ்தான் என்ற பெயரில் உள்ள 'ஸ்தான்', மகாராஷ்டிரா என்ற பெயரில் உள்ள 'ராஷ்டிரா', நாகாலாந்து என்பதில் உள்ள 'லாந்து' போன்ற வார்த்தைகள் ஏற்கெனவே மற்ற நாடுகளின் பெயர்களிலும் இருக்கிறதுதானே...! ஏன் இந்த மாநிலங்களின் பெயர் குறித்தெல்லாம் இவர்களுக்குப் பயம் வரமாட்டேன் என்கிறது?

அமித்ஷா - நரேந்திர மோடி
அமித்ஷா - நரேந்திர மோடி

கர்நாடகம் என்ற பெயரில் உள்ள 'நாடகம்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லே 'நாடு'தான். சங்க இலக்கிய காலத்திலிருந்தே 'தமிழ்நாடு' என்ற பெயர் புழக்கத்தில் இருந்துவருகிறது. இதற்கான ஆதாரங்களை நாமும் தொடர்ச்சியாக காட்டிவருகிறோம். தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதிக்குள் சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றெல்லாம் வெவ்வேறு அரசுகளின் பெயர்களும் இருந்துவந்தன. ஆனால், இந்தப் பெயர்களில் உள்ள 'நாடு' என்ற வார்த்தை வெவ்வேறு அரசுகளைக் குறிப்பதானது மட்டுமே. அதனால்தான் அந்தக் காலங்களிலேயே 'தமிழ்நாடு' என்று அழைக்கப்பட வேண்டும் என நம் புலவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

`நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா?’ - மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவைப் பரப்பிய மாமியார்

இன்றைய சூழலில், தமிழ் பேசக்கூடிய மக்கள் வாழ்ந்து வருகிற பகுதியை 'தமிழகம்' என்று அழைப்பதென்பது பொதுவான வார்த்தையாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மாறாக, அரசியல் மற்றும் வரலாற்று ரீதியாகக் குறிப்பிடும்போது, 'தமிழ்நாடு' என்று அழைப்பதுதான் மிகச்சரியான வார்த்தையாக இருக்கும். எனவே, 'தமிழ்நாடு' என்று அழைப்பதுதான் நமது அடையாளம்!'' என்கிறார் அழுத்தமாக.

அடுத்த கட்டுரைக்கு