Published:Updated:

சென்னை நீர்நிலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி… செலவழிக்கப்பட்டது யாருக்கு?

தண்ணீர்ப் பற்றாக்குறைக்கான அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் அரசு போதிய கவனம் செலுத்தாததேயாகும். ஆனால், அதேவேளையில் தமிழக அரசு நீர்நிலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை ஒதுக்கி வருகிறது.

சென்னை நீர் நிலைகள்
சென்னை நீர் நிலைகள் ( விகடன் )

இந்தியாவின் குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் நதிநீர்ப் பராமரிப்பு குறித்தான ஆலோசனைக் கூட்டமானது கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் கூடியது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கஜேந்திர சிங் ஷெகாவத், "பி.ஜே.பி-யின் தேர்தல் வாக்குறுதிபடி வரும் 2024-ம் நிதியாண்டுக்குள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்குவதே மத்திய அரசின் இலக்கு. இந்தியாவில் இன்னும் 14 கோடி குடும்பங்கள் தூய்மையான குடிநீர் கிடைக்கப் பெறாமல் இருக்கின்றன" என்றார். தூய்மையான குடிநீர் கிடைக்கப் பெறுவதில் ஒருபுறம் சில சிக்கல்கள் இருக்க, மறுபுறம்... சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறையானது, தமிழகத்தின் நீர் மேலாண்மையைக் கேள்விக்குறியாக்கியது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
விகடன்

தமிழகத்தின் இந்தத் தண்ணீர்ப் பஞ்சத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னைப் பெருநகரமும் ஒன்று. இந்தத் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கான அடிப்படைக் காரணமாகப் பார்க்கப்படுவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் அரசு போதிய கவனம் செலுத்தாததேயாகும். ஆனால், அதேவேளையில் தமிழக அரசு நீர்நிலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை ஒதுக்கிவருகிறது.

பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாத நிலையில், இதற்காக ஒதுக்கப்படும் நிதி என்னவாகிறது என்பதுதான் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. இந்நிலையில் சென்னையின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சில முக்கியமான நீர்நிலைகளைப் பராமரிப்பதற்குக் கடந்த சில ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றியும், மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றியும் இங்கே காண்போம்...

சென்னை ஏரி
சென்னை ஏரி
விகடன்

அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி மற்றும் ரெட்டேரி ஆகியவை சென்னையில் உள்ள முக்கியமான மூன்று ஏரிகளாகும். இந்த மூன்று ஏரிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக, 2014-2015-ம் நிதியாண்டிலிருந்து 2017-2018-ம் நிதியாண்டுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இந்த மூன்று ஏரிகளுக்கும் மொத்தம் 59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Vikatan

அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரி ஆகிய மூன்று ஏரிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக, கடந்த 2012-2013-ம் நிதியாண்டிலிருந்து 2018-2019-ம் நிதியாண்டு வரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 350 லட்சம் ரூபாயும், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு 75 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
விகடன்

சென்னைப் பெருநகரத்தின் குடிநீர்த் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டுமுதல் போரூர் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்தை அறிவித்தது அரசு. ஆனால், போரூர் ஏரியில் தண்ணீர் இல்லா நாள்களில் செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகள் மோசமான நிலையில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம், போரூர் ஏரியைத் தூர்வார கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது, என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன' எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 2012-13-ம் ஆண்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரியைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், ஏரியின் கொள்ளளவு 63 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டது எனவும் அரசின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

ஆனால், மேற்சொன்ன ஏரிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளும், மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இருக்கிறது என்கின்றனர், நீராதாரங்களின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர்கள்.

ஏரி
ஏரி

இதுகுறித்து அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரிஸ் சுல்தான், “சென்னை மாநகரத்தின் கொரட்டூர், அம்பத்தூர், ரெட்டேரி ஆகிய மூன்று ஏரிகளுக்கும் மொத்தம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு செலவு செய்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், அந்தத் தொகையானது எந்த அளவுக்குச் சென்னை மாநகரத்தின் நீராதாரத்தைப் பெருக்குவதற்காகப் பயன்பட்டுள்ளது என்பதைத்தான் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. காரணம், அரசு ஒதுக்கிய தொகையானது முழுமையான அளவில் செலவிடப்படவில்லை. நீராதாரங்களைப் பராமரிப்பதற்காக எந்த வேலையும் நடைபெறாமல் ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 15 குளங்களைத் தூர்வாருவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணிகளைக் கடந்த அக்டோபருக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். அதாவது, கடந்த ஆண்டு மழைக் காலத்திற்கு முன்னதாகவே இந்த 15 குளங்களையும் தூர்வாரி மழைநீரைச் சேகரிப்பதற்கான தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆனால், இந்தப் பணிகளின் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை.

ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
விகடன்

குறிப்பாக, இந்த ஆண்டு எந்தெந்த ஏரிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற தகவலைக் குடிமராமத்துப் பணிகள் மூலம் அரசு வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னால் ஒதுக்கப்பட்ட 100 கோடி மற்றும் 330 கோடி ரூபாய் தொகை எந்தெந்த ஏரிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்பதற்கான தகவல் எதுவுமில்லை.

தமிழகத்தில் மொத்தம் 1,519 ஏரிகள் உள்ளன. 800 ஏக்கர் பரப்பளவுகொண்ட மணிமங்கலம் ஏரியைத் தூர்வார, அரசு 9.5 லட்சத்தைத்தான் ஒதுக்கியுள்ளது. இது, போதுமான தொகை கிடையாது. குடிமராமத்துப் பணிகளைப் பொறுத்தவரை, ஓர் ஏரியை முழுமையாக எடுத்து அனைத்தையும் சிறப்பாகச் செய்யவேண்டும். அப்படியிருந்தால்தான், அதனால் நமக்குப் பயன் உண்டாகும். ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு செயல்படுவதில்லை.

ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
ஏரிகளுக்கு ஒதுக்கிய நிதி
விகடன்

குறிப்பாக, குடிமராமத்துப் பணிகளுக்கு முதலில் டெண்டர் என்பதே விடக்கூடாது. பாசனச் சங்கங்களோ, விவசாயச் சங்கங்களோ எடுத்துத்தான் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்கான நிதியை, அரசாங்கம் 90 சதவிகிதமும், மீதமுள்ள 10 சதவிகிதத்தை விவசாயச் சங்கங்களும் வழங்கவேண்டும். அந்த 10 சதவிகிதத்தைக்கூட விவசாயிகள் பணமாகவோ அல்லது அவர்களது உழைப்பாகவோ கொடுக்கலாம். ஆனால், தற்போது இது அங்குள்ள ஆளும்கட்சியினருக்குக் கொடுக்கப்பட்டு, அவர்கள் தனியாருக்கு டெண்டர்விட்டு இந்தப் பணிகளை மேற்கொள்கின்றன. ஆனால் இந்த நடைமுறையால் பாதிக்கப்படுபவர்களாக மக்கள்தான் உள்ளனர். உதாரணமாக, இந்தக் குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்பட்சத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்களின் நீர்ப்பாசனத்தின் தேவையறிந்து செயல்படுவார்கள். அதைச் சாதாரணமாக டெண்டர் எடுக்கும் ஒருவர் உணர மறுப்பார்கள். குடிமராமத்துப் பணிகளுக்கு 2016-17 மற்றும் 2017-18-ம் நிதியாண்டுகளில் இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், அதற்கான பலன்கள் என்ன என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது“ என்றார், வேதனையோடு.

`நீரின்றி அமையாது உலகு' என்பதை அரசும் அதிகாரிகளும் உணர்தல் வேண்டும்...