Election bannerElection banner
Published:Updated:

அமைப்புசாரா தொழில்களில் தமிழர்களுக்கு வேலையில்லையா... ஆர்வமில்லையா?!- பெ.மணியரசன் vs நிலோஃபர் கபில்

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

`அமைப்புசாரா தொழில்களில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன்...' என்ற கேள்விக்கு, ``தமிழர்கள் அமைப்புசாரா தொழில்களில் ஆர்வம் காட்டுவதில்லை'' என்று பதிலளித்துள்ளார் அமைச்சர் நிலோஃபர் கபில்.

`வேலைவாய்ப்பில், மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்ற வழக்கமான கோரிக்கை இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது! சின்னதொரு மாற்றம்.... `அமைப்புசாரா தொழிலில், தமிழர்களுக்கான முன்னுரிமை' பற்றி இப்போது அழுத்தமாகப் பேசப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தமிழார்வலர்கள் `மண்ணுரிமை' பற்றிய கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகின்றனர். ஆனாலும் இவ்விஷயத்தில் அரசியல் ரீதியான பெரியதொரு மாற்றம் எதுவும் இதுவரையில் வரவில்லை என்பதே யதார்த்த நிலை!

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் அவரவர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் தொழிற்துறையில் `அமைப்புசாரா தொழிலாளர்'களுக்கான தேவை அதிகரித்து வருவதாக செய்திகள் அலையடிக்கின்றன. இதையடுத்து, `அமைப்பு சாரா தொழில்களில், மண்ணின் மைந்தர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றன தமிழ் அமைப்புகள்!

இதுகுறித்துப் பேசும் `தமிழ் தேசிய பேரியக்க'த் தலைவர் பெ.மணியரசன், ``வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த கூலி வாங்கிக்கொண்டு அதிக நேரம் உழைக்கிறார்கள்; எனவேதான் அமைப்புசாரா தொழில்களில் அவர்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று பெருமுதலாளிகள் கூறுகின்றனர். இது நியாயம்தானா...?

8 மணி நேர வேலை - உழைப்புக்கேற்ற கூலி என்பதுதானே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்! தாங்கள் செய்கிற தவற்றுக்கு நியாயம் கற்பிக்க நினைக்கும் பெருநிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள்தான் இதுபோன்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி சாதாரண நிலையிலுள்ள மக்கள் இந்தத் தவற்றைச் செய்வதில்லை.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

உதாரணமாக, வீடு கட்டும் பணியை எடுத்துக்கொண்டால், சாதாரண மக்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களைக் கொண்டுதான் கட்டுமானப் பணிகளைச் செய்துமுடிக்கின்றனர். இந்தவகையில், பணியில் ஈடுபட்டுள்ள தமிழர்களுக்கு கூலியும் பணி நேரமும் நியாயமான முறையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிற பெருநிறுவனங்களும் பாலம் கட்டுதல், நெடுஞ்சாலைத்துறை வேலைகள் என அரசு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களும் வெளிமாநிலத் தொழிலாளர்களைத்தான் அதிகளவில் பயன்படுத்திக்கொள்கின்றனர். காரணம்.... இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த கூலியில் 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக பணிபுரியத் தயாராக உள்ளனர். தொழிலாளர்கள் மீதான இந்தச் சுரண்டல்கள் சட்ட விரோதம் இல்லையா?

`100 எலிகளைக் கொன்றுவிட்டு பாவமன்னிப்பு கேட்கும் பூனை!’- காங்கிரஸை விமர்சித்த யோகி ஆதித்யநாத்

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் (அரசு பல்நோக்கு மருத்துவமனை) ஆரம்பித்து இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற அ.தி.மு.க கட்டிவரும் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் வரை அத்தனையிலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுவருகிறார்கள். வேலை இல்லாமல், லட்சக்கணக்கான தமிழர்கள் வறுமையில் உழன்றுகொண்டிருக்கும் சூழலில், அரசே இப்படி பொறுப்பற்று நடந்துகொண்டால், தனியார் நிறுவனங்களை எப்படி கேள்வி கேட்க முடியும்?

ஜெ.நினைவிட கட்டுமானப் பணிகள்
ஜெ.நினைவிட கட்டுமானப் பணிகள்

தமிழ்நாட்டில், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது 10 விழுக்காட்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா என இந்தி பேசுகிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகளவில், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் இந்தியப் பிரதமர், நிதி மந்திரி என அனைவருக்கும் இந்த மக்களின் வேலைவாய்ப்பு பற்றி எந்தவித அக்கறையோ, கடமையோ இல்லையா?

அமைப்புசாரா தொழிலில், தமிழர்களுக்கான உரிமை பற்றி இங்குள்ள ஆளும்கட்சியும் சரி; எதிர்க்கட்சியான தி.மு.க-வும் சரி.... இனியாவது அக்கறை கொள்ள வேண்டும். கொரோனா பிரச்னையை முன்னிறுத்தி தினம்தோறும் குற்றச்சாட்டு அறிக்கை வெளியிடும் தி.மு.க., இதற்காகவும் ஓர் அறிக்கை வெளியிட வேண்டியதுதானே?'' என்றார்.

`மண்ணின் மைந்தர்களுக்கான முன்னுரிமை'கள் பற்றித் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் `தமிழக வாழ்வுரிமை கட்சி'யின் தலைவர் தி.வேல்முருகன், ``புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்கள் தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், இங்கே ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகளை இங்குள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்களை தமிழக அரசு செய்ய வேண்டும். இதைவிடுத்து, `யார் வந்தால் என்ன, போனால் என்ன... நாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து கல்லா கட்டினால் மட்டும் போதும்' என்ற மனப்பான்மையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியான தி.மு.க-வும்கூட இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, குரல் கொடுக்க வேண்டும்.

தி.வேல்முருகன்
தி.வேல்முருகன்
நடைபயணம்; சைக்கிள்!- கும்மிடிப்பூண்டியில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்

`மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்பு' கோரிக்கையை நாங்கள் முன்னிறுத்துகிறபோதெல்லாம், `வெளிமாநிலங்களில் வேலைசெய்துவரும் நம் தமிழ் மக்களுக்கு இதனால் ஆபத்து ஏற்படும்' என்று எதிர்வாதம் வைக்கின்றனர். வெளிமாநிலங்களில் அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கை என்பது, 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்தான் இந்தக் கணக்கை நாங்கள் சொல்கிறோம். அதேசமயம், நம் தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது, 90 விழுக்காட்டுக்கும் கூடுதலாக வெளிமாநிலத்தவர்கள்தான் இங்கே அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர்.

அந்தந்த மாநிலங்களே இதுகுறித்து உரிய கவனம் செலுத்திவந்தால், வேலைக்காக இப்படி ஆயிரக்கணக்கிலான கிலோமீட்டர்களைக் கடந்துவந்து மக்கள் இப்படி அகதிகளாக சிக்கித் தவிக்கவேண்டிய நிலை ஏற்படாது. தமிழ்நாட்டில், பசியால் வாடிக்கிடக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு நாங்களும் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை செய்துவருகிறோம். எனவே, `மண்ணின் மைந்தர்கள்' என்ற எங்களது கோரிக்கை என்பது, சுயநல கோரிக்கை இல்லை. ஒட்டுமொத்த மனிதநேயத்துடன்கூடிய கோரிக்கை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்றார் விளக்கமாக.

தமிழ்நாட்டில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றிவரும் நகரங்களில் சென்னை, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் முதன்மையானவை. இந்த நிலையில், பின்னலாடை உற்பத்தியில் முதன்மையான திருப்பூர் நகரம் இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேசும் `ரிதம் நிட்' ஆடை உற்பத்தி நிறுவன இயக்குநரான சாமிநாதன், ``திருப்பூரில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவருமே சொந்த ஊர் திரும்பிப் போகவில்லை. திருமணமாகாத இளைஞர்கள்தான், தத்தமது குடும்பத்தினரைப் பார்த்துவருவதற்காகச் சென்றிருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மையானவர்கள் குடும்பத்துடன் திருப்பூரிலேயேதான் தங்கியிருக்கின்றனர். மேலும் உள்நாட்டுத் தேவைக்கான ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்கள் இன்னும் தங்கள் உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பதால், எங்களைப்போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில், இதுவரை தட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்றார்.

சாமிநாதன், ராஜா சண்முகம்
சாமிநாதன், ராஜா சண்முகம்

'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரான ராஜா சண்முகம், ``ஹோலி பண்டிகை மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். இவர்கள் எல்லோருமே இன்னும் 2 மாதங்களில், ரயில் போக்குவரத்து சகஜமானதும் மறுபடியும் திருப்பூர் திரும்பிவிடுவார்கள். எனவே, இது தற்காலிகமானதுதான்.

கொரோனா உலகளாவிய பிரச்னை. திருப்பூர் துணி உற்பத்தித் தொழிலின் ஏற்றுமதி என்பது ஐரோப்பிய நாடுகளை நம்பித்தான் உள்ளது. ஆனால், இந்த ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், ஏற்கெனவே ஏற்றுமதியான பொருள்களையே அங்கே விற்க முடியாத சூழல். நிலைமை சீராக இன்னும் குறைந்தது 6 மாதங்கள் ஆகலாம். அதுவரையில் திருப்பூர் தொழிற்சாலைகளும் 100 சதவிகித உற்பத்தியை தொடங்க முடியாது. எனவே, இப்போதும் திருப்பூரிலேயே குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்தே குறைந்தளவிலாக உற்பத்தி செய்து, நிலைமையை சமாளித்துவிட முடியும்; பெரிய அளவில் பாதிப்பு இருக்காது!'' என்கிறார் நம்பிக்கையாக.

அமைப்புசாரா தொழில்களுக்கான வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கான முன்னுரிமை குறித்து `தொழிலாளர் நலத்துறை' அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் பேசினோம்... ``தமிழ்நாட்டில், தமிழர்களுக்குத்தான் முன்னுரிமை என்ற உரிமைக்குரல் எழுப்புவதில் நியாயம் உள்ளது. எங்களுக்கும் இந்தக் கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. ஏற்கெனவே உள்ள `அமைப்புசாரா தொழிலாளர் வாரியம்' மூலமாகவும் தமிழர்களுக்குத்தான் முன்னுரிமை அளித்துவருகிறோம். கட்டுமானத் துறை வேலைகளில் ஈடுபட்டுவரும் - பதிவு செய்துகொண்ட வெளிமாநிலத்தவர்கள் எண்ணிக்கை என்பது சுமார் 4,000 ஆக உள்ளது.

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

பொதுவாக அமைப்புசாராத வேலைவாய்ப்புகளில் நம் மாநிலத்தவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. `முழு அர்ப்பணிப்புடன் பணி செய்யத் தயார்' என்று தானே முன்வந்த தமிழர்கள் யாரையேனும் நிறுவனங்கள் ஒதுக்கிவிட்டதாக புகார் ஏதேனும் வந்திருக்கிறதா... இல்லையே! நம் மாநிலத்தவர்கள் இதுபோன்ற பணிகளுக்கு வராத சூழலில்தான் தேவையைக் கருத்திற்கொண்டு வெளிமாநில தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றபடி குறைந்த சம்பளம், அதிக நேர வேலை என்ற புகாரெல்லாம் உண்மையில்லை!'' என்று மறுக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு