Published:Updated:

போராட்டங்களால் வளர்ந்த சந்திரசேகர் ராவ், இன்று போராட்டங்களை எதிர்க்கிறாரா?

போராட்டங்கள் நடத்தியே தெலங்கானா மாநில முதல்வர் பதவியைப் பிடித்த சந்திரசேகர ராவ், இன்றைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறார்.

ஜெயலலிதா - சந்திரசேகர ராவ்
ஜெயலலிதா - சந்திரசேகர ராவ்

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதி, ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுகிறது. அதனால், அந்தப் பகுதியைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடியவர், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) தலைவர் கே.சந்திரசேகர ராவ். அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களால் ஆந்திரா பலமுறை ஸ்தம்பித்தது. நீண்டநெடிய போராட்டத்துக்குப் பிறகு, அவரின் கோரிக்கை வெற்றிபெற்றது. புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

2014-ம் ஆண்டு, ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்டு ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய மாநிலத்தின் முதல் முதல்வர் ஆனார், சந்திரசேகர ராவ். விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் உட்பட, கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை சந்திரசேகர ராவ் நிறைவேற்றினார். அதனால், அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது.

அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அவர், ஐந்தாண்டுக் காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலுக்குத் தயாரானார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றிபெற்றது.

ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதிலும் அவர்களின் போராட்டங்களைக் கையாளும் முறையிலும் சந்திரசேகர ராவ் சறுக்கியுள்ளார், என்கிறார்கள் தெலங்கானாவில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 48,800 தொழிலாளர்கள் சமீபத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டங்களால் வளர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ், போக்குவரத்து தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை ரசிக்கவில்லை.

ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் டிஸ்மிஸ் செய்வதாக அவர் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு தொழிலாளர்கள், பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

`பண்டிகைக் காலத்தின்போது போராட்டம் நடத்தலாமா?’ என்று பொங்கினார், சந்திரசேகர ராவ். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பே சட்டப்படி போராட்ட அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்துவிட்டனர். ஆனால், அப்போது அவர் பிரச்னையைப் பேசித் தீர்க்கவில்லை. தொழிற்சங்கங்கள்மீது கடும் கோபத்தில் இருக்கும் சந்திரசேகர ராவ், கொஞ்சம் கீழே இறங்கிவந்து, `எந்தவொரு தொழிற்சங்கத்திலும் சேரமாட்டேன் என்று பத்திரத்தில் எழுதிக்கொடுக்கும் தொழிலாளர்கள் மட்டுமே மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி
ஸ்ரீனிவாஸ் ரெட்டி

இன்னொரு அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் என்னவென்றால், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அத்தனை பேரையும் ஒரே கையொப்பத்தில் ஜெயலலிதா எப்படி வீட்டுக்கு அனுப்பினார் என்பது தொடர்பான சட்டநுணுக்கங்களை தெலங்கானா மாநில அதிகாரிகள் ஆய்வுசெய்துவருகிறார்கள் என்பதுதான். ஆனால், எதற்கும் அஞ்சாமல் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிவருகிறார்கள்.

இதற்கிடையே, போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதே நேரத்தில் அரசு மீது கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கம்மத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்ற ஓட்டுநர் கடந்த சனிக்கிழமையன்று தீக்குளித்தார். 90 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அந்தச் செய்தியைக் கேட்டு போராட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்ததாக, சுரேந்தர் கௌடு என்ற போக்குவரத்து தொழிலாளி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

26 கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 5-ம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியது. இது சட்டவிரோதப்போராட்டம் என்று அரசு கூறியிருக்கிறது. மேலும், போராடும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் அரசு கூறிவிட்டது.

``இந்தப் போராட்டத்தைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பேருந்துகளை நிறுத்த முயற்சி செய்தாலோ, பேருந்துப் பணிமனைகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினாலோ, அதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருக்கிறார் சந்திரசேகர ராவ்.

போராட்டங்கள் நடத்தியே தலைவராக உருவெடுத்ததையும், முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததையும் மறந்துவிட்ட இந்தத் தலைவருக்கு, அதிகாரம் கண்ணை மறைக்கிறது.