Election bannerElection banner
Published:Updated:

அரசுக் கட்டுப்பாட்டில் கோயில்கள்; இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு - விடுவித்த உத்தரகாண்ட் முதல்வர்!

கேதார்நாத்
கேதார்நாத்

அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கக் கூடாது என்று பா.ஜ.க மற்றும் இந்துத்வா அமைப்புகள் வலியுறுத்திவரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் 51 கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட முக்கியக் கோயில்கள் அந்த மாநிலத்தில் அமைந்துள்ளன. பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும், கோயில்களை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற நோக்கங்களுடன் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட 51 முக்கியக் கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு முன்பு முடிவுசெய்தது.

பத்ரிநாத்
பத்ரிநாத்

அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் கோயில்களை நிர்வகிப்பதற்கு தேவஸ்தான வாரியம் ஒன்றை உருவாக்க முடிவுசெய்த திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க அரசு, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் தேவஸ்தான நிர்வாக மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் பேபி ராணி மவுரியா ஒப்புதல் வழங்கினார். அந்தச் சட்டத்தின் மூலமாக, பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட 51 முக்கியக் கோயில்களின் நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

இந்தக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான முயற்சிகள் தொடங்கியதிலிருந்தே, அர்ச்சகர்கள், பண்டிதர்கள், சாதுக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்துக்களின் நம்பிக்கையில் அரசு தலையிடுவதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், சட்டமன்றம் நோக்கி பேரணியும் நடத்தினர்.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. 51 கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கான அந்தச் சட்டம் அரசியல் சாசனப்படியானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், அந்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று அர்ச்சகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தன.

தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வசூலில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்தப் பணி முடிந்த பிறகு, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து 51 கோயில்களை விடுவிக்க வேண்டுமென்ற பிரசாரத்தைத் தொடங்கப்போகிறோம் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் கூறியது.

இதற்கிடையில், தேவஸ்தான போர்டு மூலம், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்க முடியும் என்றும், கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் வளர்ச்சி ஏற்படும் என்றும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறிவந்தார்.

ஆனால், அரசிடமிருந்து 51 கோயில்களையும் மீட்டுவிட வேண்டும என்பதில் கோயில் அர்ச்சர்கள் உறுதியாக இருந்தனர். “இந்தக் கோயில் எங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. இதை பல தலைமுறைகளாக நாங்கள் நிர்வகித்துவருகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

அரசின் முடிவு மீதான தங்கள் கவலையையும் எதிர்ப்பையும் வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸிடம் கூறி, அர்ச்சர்களும் பண்டிதர்களும் அழுத்தம் கொடுத்துவந்தனர். பத்ரிநாத் கோயிலின் அர்ச்சகரான பிரஜேஷ் சதி தலைமையில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்து மதத் தலைவர்களின் மாநாட்டில், கோயில்களின் நிர்வாகங்களை அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``இந்துக்களுடைய நம்பிக்கையின் மையங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. அந்தக் கோயில்களின் நிர்வாககங்களை அரசு எடுத்துக்கொள்வது இந்து மத நம்பிக்கை முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வி.எச்.பி தேசிய இணைச்செயலாளர் சுரேந்திரா ஜெயின் கூறினார்.

மேலும் அவர், ``அதிக வருமானம் வரக்கூடிய கோயில்களில் மட்டுமே சிறந்த சேவைகள் வழங்குவது பற்றி அரசு கவலைப்படுவது ஏன்? கிராமப்புறங்களில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கோயில்களில் அந்த அக்கறையை ஏன் அரசு செலுத்தவில்லை?” என்ற கேள்விகளை அவர் எழுப்பினார். 51 கோயில்களை அரசிடமிருந்து மீட்பதற்கான அர்ச்சகர்கள் உள்ளிட்டோரின் போராட்டத்துக்கு சங்கராச்சார்யா ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஆதரவு தெரிவித்தார்.

சுப்பிரமணியன் சாமி
சுப்பிரமணியன் சாமி

பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி, இந்தப் புதிய சட்டத்தை திரும்பப் பெற உத்தரவிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் அவர், அந்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில், உட்கட்சிப் பூசல் காரணமாக திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. அதையடுத்து, புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்றார். அர்ச்சகர்கள், பண்டிதர்கள் உள்ளிட்ட தரப்பினர் புதிய முதல்வரை சந்தித்து கோயில்களை அரசு நிர்வகிப்பதற்கான புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர்.

அதைத் தொடர்ந்து,``தேவஸ்தான வாரியம் அமைப்பது தொடர்பான அரசின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படும். 51 கோயில்களை அரசு நிர்வகிக்கும் என்ற முடிவு ரத்து செய்யப்படும்” என்று முதல்வர் தீரத் சிங் ராவத் தற்போது கூறியிருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம்

கோயில் நிர்வாகங்களை அரசு எடுத்துக்கொள்வது இந்தியாவில் இது முதன்முறை அல்ல. 1955-ம் ஆண்டு ஜகந்நாத் பூரி கோயில், 1988-ம் ஆண்டு வைஷ்ணவி தேவி கோயில், 1982-ம் ஆண்டு மஹாகல் உஜ்ஜெயின் கோயில், 1983-ம் ஆண்டு காசி விஸ்வநாதர் கோயில், 1987-ம் ஆண்டு திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் என கேயில்களை அரசு எடுத்துக்கொள்வதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

சத்தீஸ்கர் பயங்கரம்... தொடரும் மாவோயிஸ்ட் தாக்குதல்... என்ன செய்யப்போகிறது அரசு?

தமிழகத்தில் இந்துக் கோயில்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அறநிலையக் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. கோயில்களை அரசு தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில், ``இந்து சமுதாயத்தினர் தங்களின் புனிதமான வழிபாட்டுத் தலத்தைத் தாங்களே பேணி, பராமரித்து நிர்வகிக்க, அவர்களுக்கு உண்டான ஜனநாயக உரிமையை அரசு வழங்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஜக்கிவாசுதேவ்
ஜக்கிவாசுதேவ்

ஆனால், இந்து கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலையொட்டி பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ``இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் இந்துக்களிடமே ஒப்படைக்கப்படும்” என்று வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு