Published:Updated:

கொரோனா நேரத்தில் 2 ஆயிரம் கோடி டெண்டர் முறைகேடு... மத்திய அரசின் தடா!

2000 கோடி டெண்டர் முறைகேடு
2000 கோடி டெண்டர் முறைகேடு

விகடன் வெளிக்கொண்டு வந்த 2,000 கோடி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள். கொரோனா நேரத்தில் டெண்டரில் செட்டிங் செய்யப்பட்ட புகாரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் வரையில் டெண்டரில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி’ என்ற தலைப்பில், 25.12.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் ஒப்பந்தத்துக்கான 2,000 கோடி ரூபாய் ஒப்பந்தப்புள்ளியைப் பெற இரண்டு பெரிய நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புக்குக் காரணம் என கை காட்டப்படும் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த டெண்டரையும் வழங்க வேண்டும் என ஆளும் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்கு அந்தத் துறையின் செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மறுக்கவே... அவருக்கு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் வந்துகொண்டிருக்கிறது.

ஜூனியர் விகடன் ரேப்பர்
ஜூனியர் விகடன் ரேப்பர்

டெண்டரை வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக ஆளுங் கட்சி பெரும்புள்ளி ஒருவருக்கு 14 சதவிகிதம் வரை கமிஷன் பேசி சரிக்கட்டிவிட்டார்களாம்’ என மிஸ்டர் கழுகு பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்பிறகு தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. சில நாள்களிலேயே சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

அதோடு, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் அருங்காட்சியகங்களின் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். சண்முகம் இடத்துக்கு ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அனைத்து மாநில கிராம ஊராட்சிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அரசின் சேவைகளை மக்கள் பயன்பெறும் வகையில் `பாரத் நெட்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. `இந்தத் திட்டத்தைத் தமிழக அரசின் மூலம்தான் செயல்படுத்த வேண்டும்' என்று 2015-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைக்க... தமிழகத்திலேயே செயல்படுத்த ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதன்படி `தமிழகத்தின் 12,524 கிராம ஊராட்சிகளும், ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்படும். அரசின் பல சேவைகளைக் கிராமங்களில் இருந்தே இணையம் மூலம் பெற்று மக்கள் பயனடையும் வகையில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும்.

அலைக்கற்றை
அலைக்கற்றை

இதற்காகத் தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. `பாரத் நெட்’ திட்டத்தை 3,000 கோடி ரூபாயில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமானது. 12,524 கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான திட்டம் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த பாரத் நெட் திட்டத்தில் நடக்கும் டெண்டர் முறைகேட்டைத்தான் கடந்த ஆண்டு இறுதியில் விகடன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு கோரியது கட்டுரைக்கு வலு சேர்த்ததோடு பல சந்தேகங்களை எழுப்பியது. இந்தத் திட்டத்தில் கடந்த மாதம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் 15-ம் தேதி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் டெண்டரில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

டெண்டர் மாற்றங்கள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் இலக்கான ஆரோக்கியமான போட்டிக்கு எதிரானது. குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விதிகளை மாற்றியிருக்கிறார்கள். இந்த விஷயத்தை அறப்போர் இயக்கம் வெளிப்படுத்தியது. அதுதொடர்பாக அப்போது விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

டெண்டர் மாற்றங்கள் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இதற்குக் காரணமான தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இந்த முறைகேட்டுக்குக் காரணமாக அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகள் தொடர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது அறப்போர் இயக்கம். அதோடு இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் புகார் அனுப்பியது.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

தமிழக கிராமங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் கொண்டு செல்லும் திட்ட டெண்டரின் நிபந்தனைகளை இரண்டு நிறுவனங்களுக்குச் சார்பாகவும், பெரும்பாலான ஒப்பந்ததாரர்களுக்கு எதிராகவும் தகவல் தொழில்நுட்பத் துறை மாற்றியது மற்றும் முறைகேடுகள் குறித்து முதல்வர், தலைமைச் செயலாளர், மத்திய தகவல் தொடர்பு துறை, மத்திய விஜிலன்ஸ் கமிஷன், காம்படிஷன் கமிஷன் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade - DPIIT) ஆகிய துறைகளுக்கு ஏப்ரல் 19, மற்றும் 29 தேதிகளில் புகார் அனுப்பியது அறப்போர் இயக்கம். அப்படி அனுப்பப்பட்ட புகாரை ஏற்றுத்தான் இப்போது அதிரடியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.

நடவடிக்கை கடிதம்
நடவடிக்கை கடிதம்

'அறப்போர் இயக்கத்தின் புகார் விசாரித்து முடிக்கப்படும் வரை 2 ஆயிரம் கோடி டெண்டரில் முடிவுகள் எடுக்கப்படக் கூடாது' எனச் சொல்லியிருக்கிறார்கள். மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT). இது தொடர்பாக விரிவான வீடியோவை வெளியிட்டிருக்கிறது அறப்போர் இயக்கம்.

அந்தக் கடிதத்தின் நகல் அறப்போர் இயக்கத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ''தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) “Public Procurement (Preference to Make in India) Order, 2017” dated 15th June, 2017 உத்தரவுப்படி போட்டியைச் சீர்குலைக்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகள் விதிப்பதும் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு எதிராகவும் வெளியூர் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாகவும் நிபந்தனைகளைப் போடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் இயக்குநர் ஆகியோரிடம் புகாருக்கான பதில் அறிக்கைகள் DPIIT கேட்டுள்ளது. DPIIT-ன் நிலைக்குழுவில் இந்த அறிக்கை தீர்மானத்திற்காக வைக்கப்படலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

இதுபோல் தமிழகத்தில் போடப்படும் அனைத்து டெண்டர்களையும் கண்காணிக்க முடிந்தால் டெண்டர்களில் செட்டிங் செய்யப்படுவது குறையும். இப்படி செட்டிங் டெண்டர்களுக்குப் பின்புலமாக இருக்கும் அதிகாரிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தால், அதன் பிறகு எந்த அதிகாரியும் தவறான டெண்டர்களில் கையொப்பம் போடத் தயங்குவார்கள். குறிப்பாக இந்த 2 ஆயிரம் கோடி டெண்டர் செட்டிங் செய்யப்படுவதற்கு வசதியாக நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டு, வேறு இரண்டு அதிகாரிகள் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் தங்களுக்குக் கொடுத்த பணியை நேர்மையில்லாமல் செய்து முடிக்கின்றனர். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவது முறைகேடான வேலைகளைச் செய்யும் அதிகாரிகளுக்குச் சரியான எச்சரிக்கையாக அமையும். தமிழக அரசு உடனே டெண்டர் நிபந்தனைகள் மாற்றியதைத் திரும்பப் பெற்று, ஊழல் இல்லாத நேர்மையான டெண்டரை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு