“இதற்குப் பெயர் வங்கி இணைப்பு அல்ல... வங்கிகளை மூடுதல்!”- வங்கி ஊழியர்கள் சங்கம்

இந்த நடவடிக்கையின் மூலம் வங்கி ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, என்கிறார் நிர்மலா சீதாராமன். ஆனால்...
பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்து வரும் செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே, “இந்தியப் பொருளாதாரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தேக்கநிலையில் உள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் இப்படியான ஒரு சுழலில் இதுவரை சிக்கியதில்லை. தனியார் துறைகளில் நீடித்துவரும் தயக்கங்களைக் கலைய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தன்னுடைய கருத்தை முன்வைத்திருந்தார், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்.

அதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உலக அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது மந்த நிலையில்தான் உள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் என்பது வளர்ச்சிவீதத்தில்தான் உள்ளது” என்றார்.
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பத்து வங்கிகளை 4 வங்கிகளின் குடையின்கீழ் கொண்டுவருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார், நிர்மலா சீதாராமன். இந்த அதிரடி அறிவிக்கைகள் வந்தவுடனே போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர், இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
பெரிய வங்கிகள்தான் பலமான வங்கிகள் எனச் சொல்லிவிட முடியாது. பெரிய வங்கிகளால் ஆபத்துகள்தான் அதிகம்.வெங்கடாசலம்
இந்த அறிவிப்பின் மூலம், 27-ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையானது 12-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து நிர்மலா சீதாராமன், “இந்த நடவடிக்கையின் மூலம் வங்கி ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில், தற்போது செயல்பட்டு வரும் 18 வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தோடுதான் செயல்பட்டு வருகின்றன" என அறிவித்தார். ஆனால், “அரசின் இந்த முடிவால் வங்கிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் சிக்கல்கள் ஏற்படும்” என்கிறார்கள், சில வங்கி ஊழியர்கள்.
வங்கித் தேர்வுக்காகப் படித்துவரும் மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, “அரசு வேலைக்குச் செல்வதுதான் பலருடைய கனவுகளாக இருக்கிறது. இதில், வங்கிப் பணிக்கென தனியான தேர்வு முறைகளும், பாடத்திட்டங்களும் உள்ளன. பலர் இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்தத் தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகிறோம். இந்நிலையில் பல்வேறு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதில் சிக்கல் ஏற்படும்” என்றனர்.
இதுகுறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் பேசுகையில், “பத்து வங்கிகள், நான்கு வங்கிகளாக மாறுகிறது என்றால் வங்கிகள் மூடப்படுகின்றன என்றுதான் அர்த்தம். இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 6 வங்கிகள் என்பது இருக்காது. இப்போது இந்தியாவில் வங்கிகளை மூடவேண்டிய தேவை எங்கு ஏற்பட்டது? அதிக வங்கிக் கிளைகளைத் திறக்க வேண்டிய நிலைதான் உள்ளது. வங்கிகளை இணைப்பதற்குக் காரணம் சொல்லும்போது, உலகப் போட்டிக்கு இணையாகப் பெரிய வங்கியாக மாறும் என்கிறார்கள். பெரிய வங்கிகள்தான் பலமான வங்கிகள் எனச் சொல்லிவிட முடியாது. பெரிய வங்கிகளால் ஆபத்துகள்தான் அதிகம். காரணம், பெரிய வங்கிகள் அதிகளவில் கடன்களைக் கொடுப்பார்கள். பிறகு, பெரிய வாராக்கடனில் சிக்கிக்கொள்வார்கள். அதனால் பெரிய வங்கியாக மாற்றுவதால் எல்லாம் லாபமும் கிடைத்துவிடாது” என்றார்.
தொடர்ந்து, இதனால் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் பேசினார். “இதனால் ஊழியர்களுக்கு இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, இந்த இணைப்பு மூலமாகக் கிளைகளை மூடினார்கள் எனச் சொன்னால் ஊழியர்கள் உபரி ஆகிவிடுவார்கள். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றினால் அவர்கள் வேலையைத் துறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மறைமுகப் பிரச்னை என்னவென்றால், இதன் விளைவாக இனிமேல் வங்கிப் பணிகளுக்கு ஆட்களைக் குறைவாகத்தான் எடுப்பார்கள். ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுத்துக்கொண்டிருந்த வங்கிகள், இனி ஆயிரம் நபர்களைத்தான் எடுப்பார்கள். புதிய வேலைவாய்ப்பும் குறையும், அதேபோல் கிளைகளை மூடுவதால் வாடிக்கையாளர்களுக்குப் பிரச்னையும் ஏற்படும்.

வங்கிகளில் இருக்கக்கூடிய முக்கியப் பிரச்னை வாராக்கடன். அவற்றை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால், இந்த இணைப்பு நடவடிக்கையால் வாராக்கடன் மீதான கவனம் குறைந்துவிடும். பொருளாதாரத்துக்கு உதவுவதுதான் வங்கிகளின் முக்கியக் கடமை. ஆனால், அதிகரித்து வரும் வேலையிழப்பு, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, பெரும் தொழிற்சாலைகள் எல்லாம் சிக்கலில் இருக்கின்றன. இந்தச் சூழலில் வங்கிகளை இணைப்பது என்பது மிகத் தவறான முடிவு. அதுவும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு” என்றார்.
ஊழியர்களின் குரலுக்கு அரசு செவி கொடுப்பது நலமே!