Published:Updated:

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு - இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்குமா?

தமிழக அரசு
தமிழக அரசு

"அரசு காலிப் பணியிடங்களை, தனியார் வசம் ஒப்படைப்பதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது. அதற்கான கால அவகாசமும் இந்த ஓர் ஆண்டாக இருக்கலாம் என்கிறார்கள்."

கொரோனோ காரணமாக மக்களின் பொருளாதார இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் வேலையிழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிற, அரசு ஊழியர்களின் பணிக்கால வயதில் மாற்றம் கொண்டுவருவதாகத் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 என இருந்ததை 59 ஆக உயர்த்துவதே அந்த அறிவிப்பு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, மிகச் சிலரிடம் ஆதரவைப் பெற்றாலும், பலதரப்பினர் இடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

பணியாளர் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்ட அறிவிப்பு குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா பேசுகையில், "தமிழக அரசின் இந்த அறிவிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைச் சிதைக்கின்ற வகையில் உள்ளது. அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.

எஸ்.பாலா,
மாநிலச் செயலாளர்,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
எஸ்.பாலா, மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

அந்தக் காலி பணியிடங்களைத் தமிழக அரசு நிரப்புவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் பணி ஓய்வுபெறும் வயதை அதிகரித்து இருப்பது `புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காது. இதற்கிடையில் இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக மற்றொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அது, ஓய்வு பெற்றவர்களைப் பல்வேறு நிலைகளில் பணியமர்த்துவது தொடர்பான ஓர் உத்தரவையும் அரசாணை எண் 56-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் இளைஞர்களின் கனவைச் சிதைத்துவிடும். குறிப்பாக, 35 வயதுக்குள் எப்படியாவது இந்த ஆண்டு பணிவாய்ப்பைப் பெற்றுவிடலாம் என்று உழைத்துக்கொண்டிருக்கிற இளைஞர்களுக்குத் தமிழக அரசின் இந்த அறிவிப்பு இடியாக இறங்கியுள்ளது" என்றார்.

ஆ.செல்வம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
ஆ.செல்வம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
தமிழக அரசு காலிப் பணியிடங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
ஆ.செல்வம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான ஆ.செல்வம் பேசுகையில், "அரசு ஊழியர்கள் யாரும் இது தொடர்பாகக் கோரிக்கை எழுப்பாத நிலையில், ஓய்வு வயது வரம்பை ஏன் உயர்த்த வேண்டும்? தமிழகம் முழுவதும் சுமார் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, ஏன் இந்த அறிவிப்பு? தமிழக அரசு, காலி பணியிடங்களைத் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைக்கிறது.

2003-ம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதைத் தடை விதித்ததைப்போல், ஓராண்டுக்கு அரசுப் பணிகளுக்குத் தடை என்ற ஒரு நிலையைத் தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி வருகிறது. அந்த அடிப்படையில்தான் அரசாணை எண் 56-ன் கீழ் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆதிஷேய்யாவை தலைமையிலான குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு காலிப் பணியிடங்களைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது. இந்த ஓராண்டை அதற்கான அவகாசமாகக் கருதுகிறேன். இவ்வாறு செய்வதன் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும்" என்கிறார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தவர்கள்
தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்தவர்கள்
#VikatanInfographics

தமிழக அரசின் அறிவிப்பு குறித்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முருகையன் பக்கிரிசாமி பேசுகையில், "தமிழக அரசின் கஜானா காலியாக உள்ளது. அதை மறைப்பதற்காக இப்படியான ஓர் அவசரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 30,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுடைய ஓய்வூதியத் தொகை திருப்பித் தர வேண்டும் என்பதற்காக இப்படியான முடிவை அறிவித்துள்ளது" என்று இப்பிரச்னையின் வேறு கோணத்தைக் காட்டுகிறார்.

முருகையன் பக்கிரிசாமி. முனைவர்
முருகையன் பக்கிரிசாமி. முனைவர்

டி.என்.பி.சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி வரும் இளைஞர் ஒருவரிடம் பேசினேன். "கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுத்துறை வேலைக்காகத் தேர்வு எழுத பயிற்சிபெற்று வருகிறேன். ஒவ்வொரு முறையும் டி.என்.பி.சி வெளியிடும் காலிப்பணியிடங்களைப் பொறுத்தே விண்ணப்பித்து வருகிறேன்.

அதற்குக் காரணம் குறைந்த காலி பணியிடங்கள் இருக்கும்போது, தேர்வு எழுதினால் வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்த முறையைப் பின்பற்றி தேர்வு எழுதி வருகிறேன். தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பை உயர்த்தி இருப்பதால் இந்த ஆண்டுக்கான டி.ன்.பி.சி தேர்வு அறிவிப்பு வெளியாகுமா? எவ்வளவு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன" என்றார் வருத்தமுடன்.

டி .என் .பி.சி அலவலகம்
டி .என் .பி.சி அலவலகம்
20 லட்சம் கோடி ரூபாய்; நான்காம் கட்ட ஊரடங்கு; என்ன செய்யப்போகிறது மத்திய அரசு? #VikatanExplainer

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் டின். பி.சி தேர்வுகளைத் தொடர்ந்து எழுதிவரும் இளைஞர் முருகன் பேசுகையில், "இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகாது என்று சொல்வது தவறு. வயது வரம்பு அதிகரிப்பதால் அந்த ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அடுத்த ஆண்டில் உருவாகும். இது முழுக்க முழுக்க ஓய்வு பெறக் கூடியவர்களுக்கு செட்டில்மென்ட் செய்தாக வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து அரசு இவ்வாறு அறிவித்துள்ளது" என்றார்

இது குறித்து மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "தற்போது சுகாதாரப் பேரிடர் காலம் என்பதால், அனுபவமுள்ள அரசு ஊழியர்களை இழக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. அந்த வகையில்தான், தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பை உயர்த்தி இருக்கிறோம். அதனால் வயது வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதை வைத்து தமிழக அரசைக் குறைகூறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைத் தொடர்ந்து நிரப்பி வருகிறோம். குறிப்பாக, 2011-லிருந்து 2019 வரை சுமார் 5 லட்சம் பணியிடங்களை பல்வேறு நிலைகளில் நிரப்பப்பட்டுள்ளன. இதனால் எந்த வகையிலும் இளைஞர்களுக்கு பாதிப்பில்லை" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
`குணமடைந்த பின்னும் கொரோனா பாசிட்டிவ்... அச்சப்படத் தேவையில்லை!’ - விளக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனாவின் கோர தாண்டவத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் கடுமையாக உள்ளன. இந்தச் சூழலில் அரசுத்துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டால் வேலையில்லாதவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு