கொரோனா யுத்தத்துக்கு நடுவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதைத் திடீரென 58-லிருந்து 59 ஆக உயர்த்தியிருக்கிறது எடப்பாடி ஆட்சி. கொரோனா பேரிடரில் ஏற்பட்ட நிதிச் சுமையைச் சமாளிக்க எடுத்த ஆயுதம் இது என ஒரு சாராரும் வரும் சட்டசபைத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட ஸ்டண்ட் என மற்றொரு சாராரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள், அரசியல் சாசனப்படி அமையப் பெற்றுள்ள நிறுவன பணியாளர்கள், அரசு கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தச் சலுகையைப் பெறுவார்கள்.
இந்த மே மாதம் இறுதியில் 25,300 ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டும். அப்படி ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு பணிக்கொடையாக 2,763.64 கோடி ரூபாயும் விடுமுறை சம்பளமாக 2,220.73 கோடி ரூபாயும் என மொத்தம் 4,984.37 கோடி ரூபாயை அளிக்க வேண்டும். இந்தத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தார்கள். ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதால் 4,500 கோடி ரூபாயும் அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியமாக அளிக்க வேண்டிய 500 கோடி ரூபாயும் சேர்த்து 5,000 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகியிருக்கிறது.

இப்படி கொரோனா பேரிடரில் ஒரு பக்கம் நிதியை மிச்சப்படுத்தினாலும் அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெறவும் ஆளும்கட்சி முயன்றிருக்கிறது. 2001 - 2006 ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை டெஸ்மா, எஸ்மா சட்டங்களைப் பயன்படுத்தி அன்றைக்கு ஒடுக்கினார் ஜெயலலிதா. 1.5 லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். அவர்கள் உச்ச நீதிமன்றம் வரையில் போய் போராடினார்கள். கடைசியில் அவர்களை மன்னித்தார் ஜெயலலிதா. ''அம்மாகூட அரசு ஊழியர்களின் வயது வரம்பை உயர்த்தவில்லை. எடப்பாடி ஆட்சியில்தான் இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது'' எனப் பெருமிதம் கொள்கிறார்கள் ஆளும் கட்சியினர். ''ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறோம்'' என்கிறது ஆளும் தரப்பு.
தேர்தல் பணிகளை அரசு ஊழியர்கள்தான் மேற்கொள்கிறார்கள். வாக்குச் சாவடிகளிலும் வாக்கு எண்ணும் மையங்களிலும் அரசு ஊழியர்கள்தான் பணியாற்றுவார்கள். அவர்களின் தயவு ஆளும்கட்சிக்குத் தேவை. அதையும் கருத்தில் கொண்டுதான், அரசு ஊழியர் வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது என அரசு ஊழியர் தரப்பு சொல்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசு ஊழியர் வயது வரம்பை உயர்த்தியதில் நிச்சயம் அரசியல் உண்டு. இப்படி வயது வரம்பை உயர்த்தியதால் அரசு ஊழியர்கள் அ.தி.மு.க ஆட்சிக்கு ஆதரவாக இருப்பார்களா? உண்மையில் அரசு ஊழியர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? ஓராண்டுக்கு முன்பு நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களை அலசிப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர் பொது மக்களைப்போல வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, ஓட்டுப் போட முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவர்களின் வாக்குகள் பதிவாகாது. அவர்கள் வாக்களிக்கத் தனியாகத் தபால் ஓட்டுகள் வழங்கப்படும். வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும் பொறிக்கப்பட்ட பழைய வாக்குச்சீட்டு முறையில்தான் இவர்கள் வாக்களிப்பார்கள்.

தங்ளைப் பற்றிய விவரங்களைப் படிவம் 6-ல் பூர்த்தி செய்து, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின் அவர்களுக்குப் படிவம் 13 A மற்றும் தபால் வாக்குச் சீட்டு தரப்படும். அதை நிரப்பி, உரிய சான்றுகளுடன் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வாக்குச் சீட்டுகள் அந்தந்தத் தொகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். அதில், விருப்பமான வேட்பாளர்களுக்கு முத்திரை குத்தி வாக்களிப்பார்கள். தேர்தல் பயிற்சி முகாமிலோ பொதுவான ஓர் இடத்திலோ உள்ள பெட்டிகளில் தபால் ஓட்டுகள் போடப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்புவரை தபால் ஓட்டுகளைப் போட முடியும்.
இதன்படி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் எனப் பார்ப்போம். அந்தத் தேர்தலில் மொத்தம் 2,61,592 தபால் ஓட்டுகள், தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. அவை பதிவு செய்யப்பட்டு, திரும்ப அளிக்கப்பட்டன. அப்படி வந்த தபால் வாக்குகளில் 2,05,907 ஓட்டுகள்தான் செல்லத்தக்கவை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் நடத்தினார்கள். அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது எடப்பாடி அரசு. அந்த வடுக்கள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் தபால் ஓட்டில் வெளிப்படுத்தினார்கள் அரசு ஊழியர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் ம.தி.மு.க, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, பி.ஜே.பி, தே.மு.தி.க, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டன.

வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதனால், தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகளை மொத்தமாகக் கணக்கிட்டபோது 56 கட்சிகளுக்கு தங்கள் வாக்குகளை அளித்திருந்தார்கள் அரசு ஊழியர்கள்.
செல்லத்தக்க 2,05,907 ஓட்டுகளில் தி.மு.க-வுக்குதான் அதிகம் பேர் வாக்களித்தனர். 88,100 வாக்குகள் தி.மு.க-வுக்கு போடப்பட்டிருந்தன. அடுத்தபடியாக காங்கிரஸுக்கு 32,529 ஓட்டுகள் கிடைத்தன. மூன்றாவது இடத்தைப் பிடித்த அ.தி.மு.க-வுக்கு 20,299 வாக்குகள் விழுந்தன. நான்காவது இடத்துக்கு பா.ம.க வந்தது. அந்தக் கட்சிக்கு 9,904 ஓட்டுகள் கிடைத்தன.

சுயேச்சைகள் 9,267, நாம் தமிழர் கட்சி 8,156, பி.ஜே.பி 7,407, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6,332, இந்திய கம்யூனிஸ்ட் 6,228, மக்கள் நீதி மய்யம் 4,984, நோட்டா 3,260, தே.மு.தி.க 3,076, முஸ்லிம் லீக் 2,358, விடுதலைச் சிறுத்தைகள் 1,828, பகுஜன் சமாஜ் 887, த.மா.கா 432 எனத் தபால் வாக்குகளைப் பெற்றன. ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளுக்கு மேலே உள்ள இன்ஃபோவை பார்க்கவும்.
கூட்டணி வாரியாகக் கிடைத்த வாக்குகள் எவ்வளவு என்பதையும் அலசுவோம். தி.மு.க கூட்டணிக்கு மொத்தம் 1,37,375 தபால் வாக்குகள் கிடைத்தன. 2,05,907 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளில் 1,37,375 பேர் தி.மு.க கூட்டணியை ஆதரித்திருக்கிறார்கள். அதாவது 66 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்தனர். அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த மொத்த தபால் ஓட்டுகள் எண்ணிக்கை 41,118.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசியதால் 37 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. அது தபால் ஓட்டுகளிலும் பிரதிபலித்தது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த 2016 சட்டசபைத் தேர்தலில் நிலை என்ன என்பதையும் பார்ப்போம்.
அந்தத் தேர்தலில் அரசு ஊழியர்கள் போட்ட மொத்த ஓட்டுகளையும் கூட்டணி வாரியாகப் பிரித்து கணக்குப்போட்டால், தி.மு.க கூட்டணிக்குத்தான் மிக அதிகமாக 1,87,593 வாக்குகள் கிடைத்தன. அ.தி.மு.க கூட்டணிக்குக் கிடைத்த வாக்குகள் 70,744. மூன்றாவது இடத்தில் தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணிக்கு 15,133 ஓட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் பி.ஜே.பி கூட்டணிக்கு 7,074 வாக்குகள் விழுந்திருக்கின்றன.

2016 சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான தபால் ஓட்டுக்களையே இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணிகள் பெற்றிருந்தன.
இப்படி இரண்டு தேர்தல்களை வைத்துப் பார்க்கும்போது அரசு ஊழியர்கள் பலரும் தி.மு.க. ஆதரவு மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் வயது வரம்பை உயர்த்திய எடப்பாடி அரசுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் இருப்பார்களா என்பதற்கான விடை 2021 சட்டசபைத் தேர்தலில் கிடைக்கும்.