Published:Updated:

நகைக்கடன் குழப்பம்... என்ன நடக்கிறது கூட்டுறவு வங்கிகளில்?

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ள தகவலால் விவசாயிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்களுக்குச் சேட்டுக்கடையாக இருப்பது கூட்டுறவு வங்கிகள்தான். சேட்டுக்கடை, தனியார் நகைக்கடன் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு நகைக்கடன் கிடைக்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது. அதிலும் நகைக்கான உத்தரவாதமும் நிச்சயம். விதை வாங்க, உரம் வாங்க, கல்யாணம், காதுகுத்து போன்ற விஷேசங்கள், மருத்துவமனைச் செலவுகள், கல்விக் கட்டணம் எனப் பல்வேறு அவசர செலவுகளுக்குக் கிராமப்புற மக்கள் உடனடியாக நகைக்கடன் வாங்குவது கூட்டுறவு வங்கிகளில்தான்.

மோடி - எடப்பாடி பழனிசாமி
மோடி - எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் வழங்கி வந்த நகைக்கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் துறையிலிருந்து, குறுஞ்செய்திமூலம் வந்த தகவலில் அடிப்படையில் கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சாமானிய மக்களுக்கு இது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய, கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ''ஏழை மக்கள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கூட்டுறவு வங்கி நகைக்கடன் ஒரு குறுஞ்செய்திமூலம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் குழப்பமடைந்திருக்கிறார்கள். கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மத்தியில் இதற்கான எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, அரசு எந்தவிதமான அறிவிப்பும் செய்யாத நிலையில், உடனடியாக நகைக்கடன் நிறுத்துவது என்பது மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கிறார்கள் மக்கள். இந்நிலையில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் நகைக்கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட இடர்பாடுகளைச் சமாளிக்க உதவும் நகைக்கடனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், "விவசாயிகள் வரவுச் செலவு வைக்கச் சுலபமாக இருப்பது கூட்டுறவு வங்கிகள்தான். அங்குதான் ஒரு பவுன் நகையைக்கூட அடகு வைக்க முடியும். அதைவிட, இந்தளவுக்குக் குறைந்த வட்டிக்கு வேறு எங்கும் நகைக்கடன் கிடைக்காது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது விவசாயிகளின் கைகளை வெட்டிவிட்டு, `போய் வேலை பாருங்கள்’ என்று சொல்வதற்குச் சமமானது. இந்த நேரத்தில்தான் விவசாயப் பணிகளைத் தொடங்குவோம். இப்போது கடன் இல்லையென்று சொல்வது கொடுமை. நானும் ஒரு விவசாயி எனச் சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

இளங்கீரன்
இளங்கீரன்

ஏற்கெனவே கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு செல்லும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பையும் முதலமைச்சர் பதிவு செய்யவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசும் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் விவசாயிகள்மீது பல்வேறு தாக்குதல் தொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது'' என்றார்.

நகைக்கடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல்மூலம் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உட்பட எந்தக் கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை. அரசின் நிதிநிலைக்கு ஏற்பத் தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை! - அதிர்ச்சி கொடுத்த அரசின் உத்தரவு

இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு