Published:Updated:

காமராஜர் ஏன் மற்ற முதல்வர்களிடமிருந்து வேறுபடுகிறார் தெரியுமா? #Kamarajar

இன்று காமராஜர் நினைவு நாள். ‘தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்பதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் பலர் முழங்கும் வாசகம். அந்த அளவுக்கு பல சாதனைகளைப் படைத்தது காமராஜரின் ஆட்சி. காமராஜர் ஏன் அப்படிக் கொண்டாடப்படுகிறார் தெரியுமா?

காமராஜர்
காமராஜர்

படிக்காத மேதை, கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் என்ற பட்டங்களுடன் அழைக்கப்படும் காமராஜர், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ந்த மகத்தான மக்கள் தலைவர். அரசியல் ஆளுமையும், தொண்டர்கள் பலமும் மிக்கவரான காமராஜருக்கு, கிங் மேக்கர் என்ற பட்டமும் உண்டு. காரணம், தமிழகத்தில் பல முதல்வர்களை அவர் உருவாக்கினார்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகியோரை காமராஜர்தான் முதல்வர்களாக ஆக்கினார். ஒருகட்டத்தில், கட்சியிலும் ஆட்சியிலும் நெருக்கடி ஏற்பட்டபோது, அவரே முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. காமராஜர் முதல்வர் ஆனது, தமிழகத்துக்கு திருப்புமுனையான தருணம்.

காமராஜரின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்கள் வந்தன. தொழிற்சாலைகள், நீர்த்தேக்க அணைகள், பாலங்கள், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள், கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி எனக் காமராஜரின் சாதனைகளை மிகப்பெரிய பட்டியலே போடலாம்.

காமராஜரின் எளிமைக்கும் ஆளுமைக்கும், சமயோசித்தத்துக்கும் உதாரணமாக ஏராளமான சம்பவங்களைச் சொல்ல முடியும். அவற்றில் சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம்.

காமராஜரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சினிமா தியேட்டர் கட்டினார். தியேட்டரை நீங்கள்தான் திறக்க வேண்டும் என்று காமராஜரை அழைத்தார். காமராஜரும் சரி என்றார். ஆனால், சினிமா தியேட்டரின் கட்டுமானப் பணிகள் முழுமை பெறவில்லை. அதனால், தியேட்டருக்கான உரிமம் வழங்க முடியாது என்று மாவட்ட கலெக்டர் கூறிவிட்டார். உடனே, ‘தியேட்டரைத் திறக்கப்போவது யார் தெரியுமா, முதல்வர்தான் திறக்கப்போகிறார்’ என்று தியேட்டர் உரிமையாளர் கூறியிருக்கிறார். அதற்கு, ‘யார் திறந்து வைத்தாலும் சரி, தியேட்டர் கட்டுமானம் முழுமையடையாமல் லைசென்ஸ் தர முடியாது’ என்ற கலெக்டர் கறாராகக் கூறியிருக்கிறார்.

காமராஜர்
காமராஜர்

உடனே காமராஜரிடம் சென்ற அந்த நண்பர், லைசென்ஸ் தர முடியாது என்று கலெக்டர் மறுத்துவிட்ட தகவலைக் கூறியிருக்கிறார். அதற்கு, இப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதால்தான் என்னால் நல்ல ஆட்சியைத் தர முடிகிறது என்று காமராஜர் கூறியிருக்கிறார். பிறகு, ‘சரி, நான் வந்து தியேட்டரைத் திறக்கிறேன். ஆனால், பணிகள் முழுமை பெற்ற பிறகே தியேட்டரை இயக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். சொன்னபடியே தியேட்டரைத் திறந்து வைத்த காமராஜர், நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக கலெக்டர் பங்களாவுக்கு காரில் சென்றுள்ளார். கலெக்டரிடம் நலம் விசாரித்துவிட்டு, கலெக்டரின் மகனைப் பார்த்து, ‘அப்பாவைப்போல பெரிய அதிகாரியாக வர வேண்டும்’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளார்.

காமராஜர் தமிழக முதல்வராக வந்தபோது, தமிழ்நாட்டில் ஒரு சர்க்கரை ஆலைகூட இல்லை. அதனால், 10 சர்க்கரை ஆலைகளை உருவாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். சர்க்கரை ஆலைகளை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் எந்திரங்களை ஜப்பானிலிருந்து பெற முடிவுசெய்யப்பட்டது. ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, 10 சர்க்கரை ஆலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு சர்க்கரை ஆலை அமைத்துக்கொடுத்தால் 10 சதவிகிதம் தள்ளுபடி தருவோம் என்று ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அந்த 10 சதவிகிதத்துக்கான பணத்தை நீங்களோ, உங்கள் தலைவரோ, உங்கள் கட்சியோ எடுத்துக்கொள்ளலாம் என்று அமைச்சரிடம் கூறியுள்ளனர். அந்த விஷயத்தை காமராஜரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு தொழிற்சாலைக்கு 10 சதவிகிதம் என்றால், பத்து தொழிற்சாலைகளுக்கு நூறு சதவிகிதம் என்று கணக்குப்போட்ட காமராஜர், அதை வைத்து இன்னொரு சர்க்கரை ஆலை அமைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக ஒரு சர்க்கரை ஆலை கிடைத்தது.

ஒருமுறை திருநெல்வேலியிருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றுள்ளார் காமராஜர். போகிற வழியில் காவல்கிணறு இடத்தில் கிராம மக்கள் காமராஜரின் காரை மறித்துள்ளனர். காரிலிருந்து இறங்கிய காமராஜர், என்ன பிரச்னை என்று கேட்டுள்ளார். தங்கள் கிராமத்தில் மின்சாரமே இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். தன்னுடன் வந்த அதிகாரியிடம் ஏன் இங்கு மின்சாரம் இல்லை என்று விசாரித்துள்ளார் காமராஜர். அதற்கு, மின் கம்பங்கள் பற்றாக்குறை இருப்பதால், இந்தப் பகுதிக்கு மின்சாரம் கொடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். மின்கம்பங்களுக்குப் பதிலாக பனைமரங்களைப் பயன்படுத்தி மின்சார வசதி தர முடியுமா என்று அதிகாரியிடம் காமராஜர் கேட்டுள்ளார். அது சாத்தியம்தான் என்று அதிகாரியும் கூறியிருக்கிறார். உடனே, வீட்டுக்கு ஒரு பனைமரம் தர முடியுமா என்று அந்த மக்களிடம் காமராஜர் கேட்டுள்ளார். அவர்களும் பனைமரம் தருவதாகக் கூறியுள்ளார். சில நாள்களில் அந்தக் கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்தது.

முற்றும் துறக்கும் முனிவர்களாலும் தாய்ப்பாசத்தை விட முடியாது என்பார்கள். தன்னோடு தாயைக் கூட்டிக்கொண்டு வந்தால் ஒவ்வொரு உறவினர்களாக வருவதும், அவர்கள் அதிகாரிகளுடன் பேசுவதும் நடக்கலாம். அதன் காரணமாக அதிகார துஷ்பிரயோகங்கள் ஏற்பட நேரிடும் என்பதை யோசித்தார் காமராஜர். தாயை விருதுநகரிலேயே இருக்க வைத்தார். எந்த உறவும் காமராஜரை எதற்காகவும் அணுகவில்லை. ‘பெற்ற தாயையே பொதுவாழ்க்கையின் தூய்மைக்காக ஒதுக்கி வைத்தவர். அவரிடம் ஒரு சிபாரிசு கேட்கலாகாது’ என்று எல்லோரும் புரிந்துகொண்டனர். தோற்ற போதும் அவர் கலங்கியதில்லை. வென்ற போதும் அவர் ஆர்ப்பரித்ததில்லை.

மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்து கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் காமராஜர் ஆட்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் ஆட்சிகள் நடைபெற்றன. பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த ஒவ்வோர் ஆட்சியும் ஏதோ ஒரு வகையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன. ஆனாலும், காமராஜர் ஆட்சி என்பது இப்போதும்கூட தனித்துவத்துடன் தமிழக வரலாற்றில் நின்றுகொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் பொதுவாழ்வில் காமராஜர் கடைப்பிடித்த தூய்மை. இவர் கைகாட்டியவர்தான் இந்தியப் பிரதமர் என்கிற அளவுக்கு செல்வாக்குப் படைத்தவராக இருந்தார் காமராஜர். அவ்வளவு செல்வாக்குக்குப் பிறகும், இறுதியில் அவருக்கு எஞ்சியிருந்தவை 60 ரூபாய், 10 கதர் வேட்டி சட்டைகள்தான். அந்தத் தூய்மையின் காரணமாகத்தான் மற்ற எல்லாரையும்விட காமராஜரை ஒருபடி மேலே அமர்த்தி வைத்திருக்கிறது வரலாறு!