Published:Updated:

`அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை!’ - நடிகர் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அன்புமணி

``நாங்கள் கூறிய உண்மையை நம்பாமல், தி.மு.க கூறிய பொய்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணியை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள்”

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ம.க கட்சி அலுவலகத்தில், கட்சியின் 31-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சமூக நீதி, நீர் மேலாண்மை, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, மது மற்றும் புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட இயக்கம் பா.ம.க. தொடர்ந்து மக்களுக்காக இந்த இயக்கம் பாடுபடும்.

அன்புமணி
அன்புமணி

வேலூர் தேர்தலில், நிச்சயமாக ஏ.சி. சண்முகம் வெற்றிபெறுவார். பா.ம.க, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். நாங்கள் கூறிய உண்மையை நம்பாமல், தி.மு.க கூறிய பொய்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணியை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள். வேலூர் மக்கள், அந்தத் தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

`தமிழகப் பிரச்னைகளைக் கவனித்தால் போதும்!' - அன்புமணி பிளான்

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வுக்கும், எக்ஸிட் தேர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மாநிலத்திற்கேற்ப, தேவைப்படுபவர்கள் தேர்வை நடத்திக் கொள்ளலாம். மருத்துவப் படிப்பிற்கு நீட் கட்டாயம் என்ற நிலைமை மாறவேண்டும்.

சூர்யா
சூர்யா

அதற்காக பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தும். புதிய கல்விக் கொள்கைகுறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை. இது ஜனநாயக நாடு. கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த தபால் துறைக்கான தேர்வில், தமிழில் வினாத்தாள் அளிக்கப்படாதது தவறு. தமிழ்நாட்டில் தமிழில் வினாத்தாள் அளிப்பது அவசியம். மீண்டும் தமிழில் ஒருமுறை இத்தேர்வை நடத்தினாலும் தவறில்லை” என்றார்.