Published:Updated:

மோடி- ஜின்பிங் என்னவெல்லாம் விவாதிக்கக்கூடும்?- பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்

சீனா, இந்தியாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சிமிக்க நாடாக இருப்பதற்கு இந்தியர்களும் ஒரு முக்கியக் காரணம்.

 மோடி -  ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு, இன்று தொடங்கி 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 1956-ம் ஆண்டு, அப்போது சீன அதிபராக இருந்த சூ என் லாய் இந்தியா வந்திருந்தார். அதன்பின், 63 ஆண்டுகள் கழித்து சீன அதிபர் இந்தியா வர இருப்பதால், இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இதுதான் அந்த கார்..!- சீன அதிபர் பயன்படுத்தும் ஹன்கோவில் அப்படி என்ன விசேஷம்?
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

இன்று, பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் உட்பட இரு நாடுகளைச் சார்ந்த மற்ற முக்கிய அதிகாரிகளுக்கிடையே 75 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மீண்டும் 12-ம் தேதி காலை 40 நிமிட ஆலோசனைக் கூட்டமும், இரு நாட்டு அதிகாரிகள் சந்திப்பும் என மூன்று கட்டமாக ஆலோசனைக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள் என இரு நாடுகளுக்கிடையேயான முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவும் இந்தியாவும் பல்வேறு வகையில் நெருக்கமாக இருந்துவரும் நிலையில், சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு தொழில்துறையினர் உட்பட பல்வேறு துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் வ. நாகப்பனிடம் பேசினோம்.

"எல்லைப் பாதுகாப்பு பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துவந்த சீனா, தற்போது இரு நாடுகளுக்கிடையேயான உள்நாட்டுப் பிரச்னைகளை அந்தந்த நாடுகளே பேசித் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியாவை சந்தோஷப்பட வைக்கிற ஒன்றுதான். இந்த அறிவிப்புக்குப் பின் சீன அதிபர் இந்தியா வருவதால், இரு நாடுகளின் வளர்ச்சி குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக 19 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் மொபைல்,லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் என 80 சதவிகித பொருள்கள் சீனப் பொருள்களாகத்தான் இருக்கும்.
பொருளாதார நிபுணர்- நாகப்பன்

இரு நாட்டு அதிகாரிகள் சந்திக்கும்போது, உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால், தற்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில், இந்தியா - சீனா இடையேயான வர்த்தக ஆலோசனைகளும் இடம்பெறலாம். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, ஏற்றுமதி அளவை அதிகரித்து, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சீனர்கள், இந்தியர்களைவிட முன்னேறி இருக்கின்றனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியாவிற்கும் சாத்தியப்படுத்தத்தான் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் இடையிலான முதல் உச்சி மாநாட்டைப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான வுஹான் நகரில் சீனா நிகழ்த்தியது எனத் தகவல்கள் வெளியாகின.

அதேபோன்று, நாளை இந்தியாவில் நடைபெற உள்ள இரண்டாவது சந்திப்பிற்கு, இந்தியா மாமல்லபுரத்தைத் தேர்வு செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. போதி தர்மர் பௌத்த மதத்தைப் பரப்ப, காஞ்சிபுரத்திலிருந்துதான் சீனா சென்றார். அவரின் நினைவாகத்தான் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது எனச் சொல்லப்பட்டாலும், தனது பொருளாதார சக்தியை நிரூபித்த சீனாவிற்கு, இந்தியாவின் கலையுணர்வை நிரூபிக்க மாமல்லபுரம் தேர்வுசெய்யப்பட்டி ருக்கலாம்.

ஆய்வு
ஆய்வு

சீனா, இந்தியாவைவிட பொருளாதாரத்தில் வளர்ச்சி மிக்க நாடாக இருப்பதற்கு இந்தியர்களும் ஒரு முக்கியக் காரணம். ஏனெனில், சீனாவில் உற்பத்தி இருக்கும் அளவிற்கு அதை வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இல்லை. இந்தியாவில் பணப்புழக்கம் அதிகம் என்பதால் இங்கு பொருள்களை வாங்கிப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, சீனப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன்மூலம் அந்நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரித்துக்கொண்டது. உதாரணமாக, கடந்த ஒரு வாரத்தில், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக 19 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதில் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர், மற்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் என 80 சதவிகித பொருள்கள் சீனப் பொருள்களாகத்தான் இருக்கும்

இந்தியா - சீனா இடையேயான வர்த்தகத்தில், சீனாவுக்குத்தான் மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருள்கள் முதல் எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை ஏராளமான பொருள்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
பா.ஜெயவேல்

"இந்தியாவில் எளிமையாக உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருள்கள்கூட விலை மலிவு என்பதற்காக சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்பை கூட சீனாதான் உற்பத்திசெய்து கொடுத்தது. இதுபோன்ற ஒவ்வொரு இறக்குமதியிலும் சீனாவின் அந்நியச் செலாவணி அதிகரித்துக்கொண்டேவருகிறது என்பதால், நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய - சீனா நாடுகளுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி குறித்தும் பேசப்படலாம்.

ஏற்றுமதியில், இந்தியா சீனாவைவிட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலை என்று சொல்லிவிடமுடியாது. இந்தியாவிடம் கல்வி என்ற ஆயுதம் வலிமையாக இருக்கிறது. சீனர்களை ஒப்பிடும்போது,  இந்தியர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் கல்வி வசதியில், 60 சதவிகிதம் மட்டுமே சீனாவில் உள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

தற்போதைய பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்யவும், இந்திய- சீனா இடையே இந்தியாவின் அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் இந்தியா புதிய வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கவேண்டும். அதில் ஒரு வழி, இந்தியக் கல்வி நிறுவனங்களை சீனாவில் தொடங்கும் முயற்சி. இதன்மூலம் நமக்கு நிறைய நன்மைகள் நடக்கும். இந்தியாவின் அந்நியச் செலாவணியையும் அதிகரிக்க முடியும்."