Published:Updated:

`இதையெல்லாம் மோடிகிட்ட சொல்லிடாதீங்க ஜின்பிங்!' #XiJinping

சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார்; இன்றும் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில், இருவரும் பல்வேறு விவகாரங்களைப் பேசவுள்ளனர். ஜி ஜின்பிங் சீனாவில் அதிபரான பிறகு, பலவற்றைத் தடை செய்தார். அவர் தடை செய்தவற்றைப் பற்றிய தொகுப்பு.

1
ஆங்கில எழுத்து 'N'

ஆங்கில எழுத்து 'N'க்கு அனுமதியில்லை!

கடந்த 2018-ம் ஆண்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவில் அதிபர் பதவியின் ஆட்சிக் காலம் குறித்த புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். அதன்படி, ஜி ஜின்பிங் சீனாவின் நிரந்தர அதிபராக இருப்பார் என முடிவுசெய்யப்பட்டது. இது சீன மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியதுடன், அந்த அதிருப்தி சீன நெட்டிசன்களிடையே இணையத்திலும் வெளிப்பட்டது.

அல்ஜீப்ராவில் 'x' என்ற எழுத்து, 'எல்லையற்றது' எனக் கருதப்படுவதுபோல, சீனாவில் ஆங்கில எழுத்தான 'n', 'எல்லையற்றது' எனக் கருதப்படுகிறது. ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் குறித்து விமர்சனம் செய்வதற்காக, நெட்டிசன்கள் 'N' எழுத்தைப் பயன்படுத்தி வந்ததையடுத்து, இணையத்தில் அந்த எழுத்து பயன்படுத்துவதைத் தடைசெய்தது சீன அரசு. இரண்டு நாள்களுக்குப் பிறகு, நெட்டிசன்கள் வேறு பிரச்னைகளைப் பேசத் தொடங்கியபோது, இந்தத் தடை நீக்கப்பட்டது.

2
Xi Jinping and Obama

வின்னி தி பூஹ் (Winnie, the Pooh) - யாரும் பார்க்கக் கூடாத கதாபாத்திரம்!  

2013-ம் ஆண்டு, சீன அதிபராகப் பதவியேற்ற ஜின்பிங், அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்தார். ஜின்பிங், பூஹ் கதாபாத்திரம் ஆகியோருக்கு இடையில் உருவ ஒற்றுமை இருப்பதாகக் கூறி, அப்போதே பரப்பத் தொடங்கினர் சீனாவின் நெட்டிசன்கள். 2015-ம் ஆண்டு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவைச் சந்தித்தார் ஜின்பிங். அப்போதும், சீன நெட்டிசன்கள் இதையே டிரெண்டு செய்தனர்.

Xi Jinping and Shinzo Abe

2015-ம் ஆண்டு, சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில், கூரையில்லாத காரில் ஜின்பிங் பயணம் செய்யும் படத்தையும், பூஹ் கதாபாத்திரத்தோடு நெட்டிசன்கள் உவமைப்படுத்தியது ஜின்பிங் அரசுக்கு கடும் எரிச்சலைத் தந்தது. சீனாவின் இணைய வரலாற்றில் அதிகமாக நீக்கப்பட்ட படமாக, அது அமைந்ததோடு, 'வின்னி தி பூஹ்' கதாபாத்திரமும் சீனாவில் தடைசெய்யப்பட்டது.

Xi Jinping and Winnie the Pooh

பூஹ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான 'க்றிஸ்டோஃபர் ராபின்' என்ற ஹாலிவுட் படமும் சீனாவில் தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவின் பிரபல அடல்ட் காமெடி அனிமேஷன் தொடரான 'சௌத் பார்க்' (South Park), இரண்டு நாள்களுக்கு முன், ஜின்பிங்கை 'பூஹ்' கதாபாத்திரத்தோடு இணைத்து கலாய்த்தது. அதனால் இந்தத் தொடரையும் தற்போது சீன அரசு தடை செய்துள்ளது.

Vikatan
3
George Orwell books

ஜார்ஜ் ஆர்வெல் புத்தகங்கள் படிக்கவும் பகிரவும் தடை! 

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை', '1984' ஆகிய புத்தகங்கள் அரசு பயங்கரவாதம், அரசு மக்களைக் கண்காணிப்பது, சர்வாதிகாரம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டது. நிரந்தர அதிபராக ஜின்பிங் தன்னை அறிவித்த பிறகு, சீன நெட்டிசன்கள் அவரை விமர்சிக்க ஜார்ஜ் ஆர்வெல் புத்தகங்களை நாடினர். தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் காரணமாக, ஜார்ஜ் ஆர்வெல் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன.

4
Xi Jinping

ஜின்பிங் அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வார்த்தைகளுக்கு 'நோ'!

ஜின்பிங் தன்னை நிரந்தர அதிபராக அறிவிப்பதற்கு முன்பே, இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டது. ஜின்பிங் நிரந்தர அதிபராக அறிவிக்கப்பட்டால், நெட்டிசன்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்துவர் என்ற விவரங்கள் முதலில் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், இந்தத் தடை அமைந்தது.

`நான் எதிர்க்கிறேன்!', `மறுக்கிறேன்!', `ஆளுமை வழிபாடு', `பேரரசரின் கனவு', `அடிமைத்தனம்', `வெட்கமற்றவர்கள்', `வேறு நாட்டில் குடியேறு!', `டிஸ்னி', `விமானத்தில் ஏறு', `எதிர்நீச்சல் அடி!', `காலம்தோறும்' , `சட்டத்தை மாற்று!', `ஜி சேதுங்', `பேரரசர் வாழ்க!'
இவையெல்லாம் சீன அரசால் தடை செய்யப்பட்ட வார்த்தைகள்
5
Sunrise Kempinski Hotel, Beijing

வித்தியாசமாக அலங்காரம் செய்யப்பட்ட கட்டடங்கள் கூடாது!

90-களில் சீனாவில் தாராளமயமாக்கல் கொள்கை பொருளாதாரத்தில் அமல்படுத்தப்பட்ட பிறகு, மேற்கத்திய பாணியிலான கட்டடங்கள் பிரபலமடைந்தன. சீனாவில் கட்டடக்கலை பாணியே பெரும் மாற்றத்தைச் சந்தித்தது.

இதைத் தடுப்பதற்காக, ஜின்பிங் தலைமையிலான சீன அரசு, 'மிகப்பெரிய, பிற நாகரித்தை விரும்புகின்ற, வித்தியாசமான' கட்டடங்களுக்குத் தடை என அறிவிப்பு வெளியிட்டது.

china central television headquarters ( Mark Lehmkuhler / Flickr )

அதற்குப் பதிலாக, சீனக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும், அழகான, செலவுகுறைந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.

6
Xi Jinping and Peng Liya

சிலேடைகளில் கலாய்த்தலுக்குத் தடை!

2014-ம் ஆண்டின் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின்போது, ஜின்பிங் தன்னை 'டாடி ஜி' (அப்பா ஜி) எனவும், தன் மனைவியை 'மாமா பெங்' (அம்மா பெங்) எனவும் குறிப்பிட்டு, குழந்தைகளிடையே 'டாடி ஜி மாமா பெங்கைக் காதலிக்கிறார்' என்று பாசமாகச் சொன்னார். 'டாடி'யின் முதலெழுத்து 'டா'வையும், 'மாமா'வின் முதலெழுத்து 'மா'வையும் சேர்த்து, 'இது 'டாமா'வின் ஆட்சி!' என்று எழுதினார் சீன நெட்டிசன் ஒருவர். சீன மொழியில் 'டாமா' என்றால் 'கஞ்சா' என்று பொருள். தங்களைப் பாராட்டுகிறார்களா, கலாய்க்கிறார்களா என்று தெரியாத சீன அரசு, ஒட்டுமொத்தமாக சிலேடைகள், அதாவது இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள், அனைத்துக்கும் தடை விதித்தது.

சீன அரசு விதித்த தடை ஆணையில், வார்த்தைகளில் விளையாடுவது சீன மொழியின் புனிதத்தை சிதைப்பதாக இருக்கிறது எனக் கூறியது. மேலும், அரசு விளம்பரங்கள், அறிவிப்புகள் எதிலும் வார்த்தை விளையாட்டுகள், சிலேடைகள் இடம்பெறாது எனவும் கூறப்பட்டது. 'சீனக் கலாசாரத்தையும் சீன மக்களையும் கெடுக்கும் வார்த்தை விளையாட்டுகளும், சிலேடைகளும் இனி தடை செய்யப்படுகின்றன' என்றது அந்த ஆணை.

இவற்றைத் தவிர இஸ்லாமியர்கள் தாடி வளர்க்கக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, பௌத்தர்கள் மறுபிறப்பில் நம்பக் கூடாது போன்ற சட்டங்களும், கிறிஸ்துவ தேவாலயங்கள் மூடல், டைம் ட்ராவல் திரைப்படங்களுக்குத் தடை முதலானவையும் சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தன் மீது எழும் விமர்சனங்கள் எதையும் வளரவிட விரும்பாமல், இவற்றையெல்லாம் தடைசெய்தவர் சீன அதிபர் ஜி ஜின்பிங். இன்று தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் ஜின்பிங். ஏற்கனவே, காஷ்மீரில் இணையத்திற்குத் தடை, கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்கு என இந்தியா வேறொரு பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், மோடியும், ஜின்பிங்கும் சந்திக்கும்போது, மோடி தன்னைக் கட்டியணைத்து, பாசத்தைப் பொழிந்தாலும் ஜின்பிங் அவர் தடை செய்தவற்றையெல்லாம் மோடியிடம் சொல்லாமல் இருப்பாராக!
அடுத்த கட்டுரைக்கு