Published:Updated:

தாராளமயத்தின் 30 ஆண்டுகள் - 1: நரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் கூட்டணியும், பொருளாதார சுதந்திரமும்!

கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த இந்தியாவின் அன்றைய பொருளாதார நிலை குறித்து, நிதித்துறைச் செயலாளர் சுமார் 90 நிமிடங்கள் விளக்க, நிலைமையின் தீவிரத்தை மிக ஆழமாக கிரகித்துக் கொண்டார் நரசிம்ம ராவ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“பொருளாதார நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன?”

1991 ஜூன் 21 அன்று இந்தியாவின் 10-வது பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த, 70 வயதான பி.வி.நரசிம்ம ராவ், கேபினட் செயலாளர் நரேஷ் சந்திராவுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கேட்ட கேள்வி இதுதான்.

“இல்லை சார்... அது உண்மையில் மிக மோசமாக இருக்கிறது” என நிலைமையின் தீவிரம் நரேஷ் சந்திராவின் பதிலில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.

நரசிம்ம ராவ்
நரசிம்ம ராவ்
30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவிருந்த நரசிம்ம ராவ் நாட்டின் பொருளாதார நிலை குறித்து இப்படியொரு கேள்வி எழுப்பும் சூழல் உருவான வரலாறு சற்றே திகைக்கச் செய்யக் கூடியதுதான்; என்றாலும் இந்தக் கேள்விக்கான தீர்வாக அவர் முன்வைத்த ‘தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்' கட்டவிழ்ந்த விதமோ சுவாரசியமானது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சீர்திருத்தங்களின் விளைவுகள் இன்று இந்தியாவை எங்கு நிறுத்தியிருக்கின்றன என்பது விரிவான விசாரணைக்குரியது.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசாங்கம், பொருளாதார வளர்ச்சிக்காக, சோஷலிச மாடலான ‘திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற பாதுகாப்பு அணுகுமுறையைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இந்தியப் பொருளாதாரம் அன்றைக்கு முதன்மையாக வேளாண்மையை மையப்படுத்தி இருந்தது; இந்தப் பின்னணியில், தொழில்துறை சார்ந்த பொருளாதாரக் கொள்கை என்பது இறக்குமதி, அந்நிய முதலீடுகள், வர்த்தகம், தொழில் தொடங்குதல், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு ‘லைசென்ஸ்-பர்மிட் ராஜ்’ போன்ற கடுமையான ஒழுங்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்ததாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ஆசியப் புலிகள்’ என்றழைக்கப்படும் தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை 1960-களில் தொழில்துறையில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தன; சீனா 1978-ல் அந்நிய தொழில் நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்குவதற்கு வழிசெய்யும் ‘ஓபன் டோர் பாலிசி’யை அமல்படுத்தி அசுரப் பாய்ச்சல் கண்டது.

ஆசியப் புலிகள்
ஆசியப் புலிகள்

ஆனால், பாதுகாப்பான அணுகுமுறையால் மந்தமான நிலையிலேயே இந்தியப் பொருளாதாரம் தேங்கியிருந்தது. இதனால் மிகக் கடுமையான நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கியது. பிரச்னைகளைச் சமாளிக்க, அனைத்துலக நாணய நிதியத்திலிருந்து (ஐ.எம்.எஃப்) கடன் வாங்குவது குறித்து 1980-களின் தொடக்கத்திலேயே இந்திய அரசாங்கம் பரிசீலித்தது. எனினும், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி இதை முன்னெடுக்கவில்லை.

இந்தியப் பொருளாதாரம் அதன் மோசமான காலகட்டத்தில் நுழைந்த இதே வேளையில்தான், ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மையையும் தொடங்கிவைத்தது. 414 இடங்களோடு அதுவரை யாரும் பெற்றிராத அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த ராஜீவ், 1989 தேர்தலில் வெறும் 197 இடங்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தார். இந்திய அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கின. பா.ஜ.க., வெளியிலிருந்து ஆதரவளித்த நிலையில், வி.பி.சிங் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் முன்பாகவே வி.பி.சிங் பதவி விலக நேர்ந்தது.

அரசியல் கொதிநிலையும், பொருளாதார மந்தநிலையும் இணைந்த இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்க, பிரதமர் பொறுப்புக்கு வந்தார் சந்திரசேகர். நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்க, பொருளாதாரத்தைச் சீரமைக்கும் பொருட்டு ஐ.எம்.எஃப் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய அரசு. ஆனால், மூடி’ஸ், எஸ் & பி போன்ற சர்வதேசப் பொருளாதாரத் தரச்சான்று நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார நிலையைக் குறைத்து மதிப்பிட, அது நடக்காமல் போனது. சந்திரசேகர் அரசாங்கம் ராஜீவ் காந்தியை உளவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டில் காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற, 223 நாட்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

சோவியத் யூனியன் சிதறியது
சோவியத் யூனியன் சிதறியது

சோவியத் யூனியன் சிதறியது. இது இந்திய - சோவியத் இருதரப்பு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. வளைகுடாப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் வரவு-செலவு சமநிலை குலைந்தது. அந்நியச் செலாவணி இருப்பு கிட்டத்தட்ட காலியாகிப் போனது. அந்த இருப்பைக் கொண்டு அத்தியாவசிய இறக்குமதியை அடுத்த 2 வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை. நாடு திவாலாகும் சூழலுக்குச் சென்றது.

அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்தி, வரவு-செலவு சமநிலையைக் கையாளும் நோக்கில், பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம் 20 டன்களை ஸ்விட்சர்லாந்துக்கு விமானத்தில் கொண்டுசென்று 234 மில்லியன் டாலர்களைத் திரட்டியது இந்திய அரசு.

இத்தகைய அசாதாரண காலகட்டத்தில் தான், சிறுபான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது; பிரதமர் பதவிக்கான போட்டியிலேயே இல்லாத, பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதுதான் கேபினட் செயலாளர் நரேஷ் சந்திரா மிக அவசரமாகப் பிரதமரைச் சந்தித்து, நிதிநிலை பற்றி விளக்க வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தார்.

அன்றைக்கு நரேஷ் சந்திராவின் பதற்றத்தைக் கண்டு நரசிம்ம ராவ் கேட்ட கேள்விதான் “பொருளாதார நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறதா என்ன?” என்பது.

கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த இந்தியாவின் அன்றைய பொருளாதார நிலை குறித்து, நிதித்துறைச் செயலாளர் சுமார் 90 நிமிடங்கள் விளக்க, நிலைமையின் தீவிரத்தை மிக ஆழமாக கிரகித்துக் கொண்டார் நரசிம்ம ராவ். 17 மொழிகளில் மௌனமாக இருக்கத் தெரிந்த ராவின் மௌனத்தின் கனம் அப்போது மேலும் கூடியிருந்தது. வாய் திறந்தபோது ராவ் ஒரு பொருளாதார தாராளவாதியாக வெளிப்பட்டார்; அது இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைந்த தருணம் என தாராளவாதிகள் பிற்பாடு எழுதினர்.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

உலகத்தின் சந்தைக்குத் தன்னைத் திறந்துவிட்ட இந்தியா, தன்னளவில் ஒரு சந்தையாக அப்போது பரிணமித்தது. அதுவரை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிசெய்த எந்த அரசும் செய்ய முடியாத அல்லது செய்யத் தவறிய ஒன்றைச் சிறுபான்மை பலத்துடன் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் அரசு, மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள், அறிவுஜீவுகளின் துணையோடு நிகழ்த்திக் காட்டியது.

தன்னுடைய முழு நம்பிக்கைக்குரியவரான மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்ததிலிருந்து இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரசிம்ம ராவ்.

பொருளாதார நடவடிக்கைகளில் முதல் கட்டமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு முறை குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, மான்டெக் சிங் அலுவாலியாவின் ‘எம்’ ஆவணத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வர்த்தகக் கொள்கையை ஜூலை 4 அன்று அறிவித்தார் வர்த்தக இணையமைச்சர் ப.சிதம்பரம். இறக்குமதிக் கட்டுப்பாடுகளை இந்தப் புதிய கொள்கை தளர்த்தியது.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

இவற்றின் தொடர்ச்சியாக, 1991 ஜூலை 24 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். கடுமையாக விலை கட்டுப்பாட்டு முறை நீக்கம், அந்நிய முதலீட்டுக்கு வரவேற்பு, இந்தியாவின் நிதி வரையறைக்கு புதிய ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது, ஒருமித்தமாக சுங்கவரிகளைக் குறைப்பது, மானியங்களை வெட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்த அந்த நிதிநிலை அறிக்கை, தனித்த ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது.

“நமக்கு முன்பாக உள்ள நீண்ட, கடினமான பயணத்தின் சிரமங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை; `ஒரு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டதென்றால், உலகின் எந்த ஒரு சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது’ என்று விக்டர் ஹ்யூகோ சொன்னதைப் போல், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மேலெழும். மொத்த உலகமும் உரக்க, தெளிவாகக் கேட்கட்டும்: இந்தியா இப்போது அகலத் திறந்திருக்கிறது. நாம் வெற்றி பெறுவோம்!” - என்று மன்மோகன் சிங், நிதிநிலை அறிக்கையின் முடிவில் அறைகூவல் விடுக்க, உலகமயமாக்கல் என்னும் வாகனத்தின் சக்கரங்களில் ஒன்றாக இந்தியா மாறியிருந்தது.
புதிய பொருளாதார கொள்கை
புதிய பொருளாதார கொள்கை

இந்தப் பொருளாதார சீர்திருத்தத்துக்குக் காங்கிரஸ் கட்சியிலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. நேரு உருவாக்கிய கட்டமைப்பிலிருந்து இந்தியாவும் காங்கிரஸும் விலகிச் செல்வதாகக் கட்சியின் மூத்தவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க ''இந்தியாவின் இறையாண்மை ஐ.எம்.எஃப்-ல் அடகுவைக்கப்பட்டுவிட்டது'' எனக் கொந்தளித்தது.

மிகக் குறுகிய காலத்தில் இந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், பல ஆண்டுகளாக உருவாகிவந்த யோசனையின் விளைவுதான் அது. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதன் தாக்கம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தையே மாற்றியமைத்த 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இயல்பாக நடந்த ஒன்றா அல்லது காலத்தின் கட்டாயமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு