Published:Updated:

தினமும் 70,000 விண்ணப்பங்கள்... 2 மணி நேர டெட் லைன்... எப்படி வழங்கப்படுகிறது இ-பாஸ்?

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், இ-பாஸ் நடைமுறையும் தொடர்கிறது. 90 நாள்களைத் தொடப்போகும் இந்த நடைமுறையில் எப்படி வழங்கப்படுகிறது இ-பாஸ்?

ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என அரசு அறிவித்துள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம், சொந்த ஊர் திரும்புபவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அரசு ஒப்பந்தத்துக்கு விண்ணப்பிக்கச் செல்பவர்கள் ஆகிய காரணங்களின் அடிப்படையில் மட்டும் தற்போது இ-பாஸ் வழங்கப்படுகின்றன.

இ-பாஸ் விண்ணப்பம்
இ-பாஸ் விண்ணப்பம்

தொடக்கத்தில் ஒரு மாவட்டத்துக்குள் பயணிக்கவும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. பின்னர், தமிழகத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்த தமிழக அரசு, மண்டலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியம் இல்லை என்றும் மண்டலம் விட்டு மண்டலம் செல்வதற்கு மட்டுமே பாஸ் வாங்க வேண்டுமென்றும் கூறியது. 50 சதவிகித பேருந்துப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டு இயல்பு நிலைக்குத் தமிழகம் திரும்பத் தொடங்கியது.

தமிழகம்: `ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு; தொடரும் இ-பாஸ்!’ - புதிய தளர்வுகளின் முழு விவரம்

அந்த நேரத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்கவே, தளர்வை நீக்கிய தமிழக அரசு, பொதுப் போக்குவரத்துக்கும் தடைவிதித்தது. தற்போதுள்ள நடைமுறையில் மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியமில்லை. மாவட்ட எல்லையைத் தாண்ட வேண்டுமானால் பாஸ் அவசியம். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஏழு அரசுத்துறை பணியாளர்களுக்கு மட்டும் பாஸ் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேநிலை ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ-பாஸ் சோதனை
இ-பாஸ் சோதனை
படம்: சொ.பாலசுப்பிரமணியன்

இந்த இ-பாஸ் நடைமுறை எப்படிச் செயல்படுகிறது, என்னென்ன காரணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, தங்கள் விண்ணப்பங்கள் ரத்தாகுவதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிடுகிறார்களே... அது ஏன் என்கிற பல கேள்விகளுடன் வேளச்சேரியிலுள்ள வெர்டாஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவர் வசந்த் ராஜனிடம் பேசினோம். இவரின் நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் இருந்து பெறப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களை பிரித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஒப்புதலுக்காக அனுப்புகிறது.

``இ-பாஸ் நடைமுறை எப்படிச் செயல்படுகிறது?''

``தொடக்கத்தில் பொதுமக்கள் எங்கே இருந்து பயணிக்கிறார்களோ, அந்த மாவட்ட நிர்வாகமே பாஸ் வழங்கிவந்தது. பின்னர், இந்த நடைமுறையை மாற்றி, சென்று சேர வேண்டிய மாவட்ட நிர்வாகம்தான் பாஸ் வழங்க வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டுவந்தோம். இ-பாஸ் விண்ணப்பிக்க பொதுமக்கள் பயன்படுத்தும் வெப்சைட்டில், அரசு அதிகாரிகள் பிரத்யேகமாக தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு வடிவமைத்துள்ளோம். ஒருவர் பாஸ் பெற விண்ணப்பிக்கும்போதே, அவருக்கு அனுமதியளிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் தானாகச் சென்றுவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை ஒரு மெயில் செக் செய்வதுபோல அந்த அதிகாரிகள் செக் செய்யலாம். திருமணம், இறப்பு, மருத்துவ அவசரம் என எந்தப் பிரிவில் பார்க்க, அந்த அதிகாரி விரும்புகிறார்களோ, அப்படி விண்ணப்பங்களை வகைப்படுத்திப் பார்க்கலாம்.''

வசந்த் ராஜன்
வசந்த் ராஜன்

இறப்பு, மருத்துவ அவசரம் விண்ணப்பங்கள் மீது மட்டும் இரண்டு மணிநேரத்துக்குள் முடிவு எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த இரண்டு பிரிவிலும் வரும் விண்ணப்பங்களை ஒரு மணிநேரத்துக்குள் முடிவெடுக்காமல் வைத்திருந்தால், உடனடியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட அரசு இ-சேவை மையத்தின் மேலாளர் ஆகிய மூவருக்கும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. ஒன்றரை மணிநேரமாகியும் முடிவெடுக்கவில்லை என்றால், உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கு விஷயம் கொண்டுவரப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள். இதன்படி, இறப்பு, மருத்துவ அவசரம் விண்ணப்பங்கள் உடனடியாகத் தீர்வு காணப்படுகின்றன. அரசு அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப உதவி செய்வதோடு எங்கள் பணி முடிந்துவிடுகிறது. இதற்காக எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஐந்து பேர் பணிபுரிகின்றனர். மற்றபடி அனுமதி வழங்குவதெல்லாம் அரசு அதிகாரிகள்தான். அவ்வப்போது அரசு கேட்கும் ரிப்போர்ட்களை மட்டும் அனுப்பி வைக்கிறோம்.''

இ-பாஸ் பத்திக் கேட்டா இப்படியா பதில் சொல்வீங்க..? - துணிக்கடை ஊழியரின் தவிப்பு #MyVikatan

``ஆனால், இ-பாஸ் விண்ணப்பித்த சிலர் தங்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் புகார் சொல்கிறார்களே?''

``இ-பாஸ் வேண்டி ஒருநாளைக்கு 70,000 விண்ணப்பங்கள் வருகின்றன. இதில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வருவதற்கும் செல்வதற்கும் விண்ணப்பிப்பவர்கள்தான் அதிகம். விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதற்கு என்றே இரவு பகல் ஷிப்ட்டில் பணியாளர்களை அமர்த்தி மாநகராட்சி அதிகாரிகள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். இரண்டு நிமிடத்துக்கு ஒரு விண்ணப்பத்தை சரிபார்த்தால் மட்டுமே இவ்வளவு விண்ணப்பங்களின் மீதும் முடிவெடுக்க முடியும். இ-பாஸ் விஷயத்தில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.

வசந்த் ராஜன்
வசந்த் ராஜன்

சில சமயங்களில் போதிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பங்கள் வருகின்றன. உதாரணத்துக்கு, மதுரைக்கு மருத்துவ சிகிச்சைக்குச் செல்ல ஒருவர் சிவகங்கையிலிருந்து விண்ணப்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் 2019-ல் வாங்கிய மருந்துச்சீட்டை ஆதாரமாக அளிக்கிறார். உண்மையிலேயே அவரிடம் அந்த சீட்டுதான் இருந்திருக்கலாம். இதனடிப்படையில் அவருக்கு அனுமதி அளித்தால், பின்னர் இதையே காரணமாக வைத்து பலரும் அதுபோல விண்ணப்பிப்பார்கள். பிறகு ஊரடங்கு தேவையே இல்லையே. உரிய ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பித்தால் பாஸ் நிச்சயமாக வழங்கப்படுகிறது.''

``போலி பாஸ் வழங்கப்படுவதாக சமீபத்தில் சர்ச்சை வெடித்தது. அதேபோல, பணத்தைப் பெற்றுக் கொண்டு பாஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே?''

``ஒருசில மாவட்டங்களில் ஒரிஜினல் பாஸ் போலவே போட்டோஷாப் செய்து போலி இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதை ஒழிப்பதற்காகத்தான் நாங்கள் வழங்கும் அனுமதி சீட்டில் `க்யூ.ஆர் கோட்’ முறையை அறிமுகப்படுத்தினோம். சோதனைச் சாவடியிலுள்ள காவல் அதிகாரிகளின் கையில், இந்த `க்யூ.ஆர் கோட்’-ஐ படிக்கும் கருவி கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டிலுள்ள இந்த `கோட்’ மீது கருவியால் லேசர் ஒளியைப் பாய்ச்சினாலே போதும், அது உண்மையான பாஸா இல்லை போலியா என்பது தெரிந்துவிடும். ஒருசில இடங்களில் பணம் பெற்றுக்கொண்டு பாஸ் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, டெக்னிக்கலாக சில மாற்றங்களைப் புகுத்தியுள்ளோம். இனி அதுபோல பணத்தை வாங்கிக் கொண்டு பாஸ் வழங்க முடியாது.''

இ-பாஸ் சோதனை
இ-பாஸ் சோதனை

``இந்தப் பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``ஒரு புதிய அனுபவம். மே 2-ம் தேதி எங்கள் பணியைத் தொடங்கி, ஆகஸ்ட் 2-ம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையப்போகிறது. முதல் 10 நாள்கள் மிகவும் கடினமாக இருந்தது. தூங்குவதற்குக் கூட இரண்டு மணிநேரமே ஓய்வு கிடைத்ததால் சிரமப்பட்டோம். ஒவ்வொரு முறை அரசு புதிய அறிவிப்பாணை வெளியிடும்போதும், வெப்சைட்டில் அதற்கேற்ப மாற்றங்களைப் புகுத்தியுள்ளோம். மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலகர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் என அனைவருக்கும் தனித்தனி வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. அவற்றில் தகவல்களைப் பறிமாறுகிறோம். இன்று, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் தமிழ்நாடு இ-பாஸ் விண்ணப்பிக்கும் வெப்சைட்டை பயன்படுத்துகின்றனர். அப்படி இருந்தும் வெப்சைட் டவுன் ஆகாமல் செயல்படுவதே பெரிய சாதனைதான். இப்பணி மனநிறைவாக இருக்கிறது."

அடுத்த கட்டுரைக்கு