Published:Updated:

இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வுக்கு ஏன் போகிறார்?- டி.டி.வி சொல்லும் வேறு காரணம்

ttv dinakaran
ttv dinakaran

இசக்கி சுப்பையா அ.தி.மு.கவுக்குப் போவதற்கான பின்னணி குறித்து டி.டி.வி. தினகரன் பேசியிருக்கிறார்.

அமமுக முக்கிய நிர்வாகி இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வில் சேர உள்ள நிலையில் இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசினார்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா
எல்.ராஜேந்திரன்

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் கட்சியின் நிர்வாகி இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வில் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ttv dinakaran
ttv dinakaran

ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களை தடுத்துநிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதற்கு முன்னாள் இசக்கி சுப்பையா 48 நாள் அமைச்சராக இருந்தவர். எங்கள் கட்சியில் அவரை அமைப்புச் செயலாளராக போட்டது உங்களுக்குத் தெரியும். அவர் அ.தி.மு.க.வுக்குப் போகப்போகிறார் என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொன்னதால் தெரிகிறது. இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தினகரன் கட்சி சரிவு என்று நீங்கள் போடுங்கள். வருங்காலத்தில் அது உண்மையா பொய்யா என்கிறதை எங்கள் தொண்டர்களும் மக்களும் முடிவு செய்வார்கள்.

நீங்கள் கைகாட்டியவர்கள்தான் நிர்வாகிகள் ஆனார்கள். இப்போது அவர்கள் போகிறார்கள். இது குறித்து?

ஒவ்வொருத்தருக்கும் ஒரு பதவி கொடுக்கிறோம். ஏற்கெனவே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 48 நாள் ஒரு மண்டல அமைச்சராக இருந்தவர். அவர் வந்து எனக்கு நல்ல பதவி கொடுங்கள் என்று கேட்கிறார். யாரை குறை சொல்கிறாரோ, அவர் சொல்லித்தான் இசக்கி சுப்பையாவுக்கு பதவி கொடுத்தோம். 2009-ல் முதல் முறையாக அவருக்குப் பதவி கிடைத்தது என்னுடைய ரெக்கமென்டில்தான். எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எங்களை எதிர்ப்பதால் நாங்கள் அழிந்து போய்விட்டோமா. பன்னீர் செல்வமும் எங்களை எதிர்ப்பதால் அழிந்து போய்விட்டோமா. எங்களால் கைகாட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போகிறதினால் எங்கள் இயக்கம் இன்னும் வலுவடையுமே தவிர பாதிப்படையாது. தினகரன் ஆணவத்தில் சொல்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி அல்ல. யாரையும் பிடித்துவைக்க முடியாது. யாரையும் நாங்கள் கூப்பிடல. அவர்களா சுயமாக வந்தார்கள். இப்போது போகிறார்கள் என்றால் போகட்டும்.

உங்கள் கட்சியில் இப்படித் தொடர்ந்து நிர்வாகிகள் செல்கிறார்களே. அதுவும் தலைமையை குறை சொல்லித்தான் செல்கிறார்கள். இது குறித்து?

வெளியே போவதற்கு ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அது உங்களுக்கே தெரியும். என்னிடம் வந்தே நிறைய தடவை சொல்லுவார். `எனக்கு 70 கோடிக்கு மேல் பில் பாக்கி இருக்கு. நான் கோர்ட்டுக்குப் போய்தான் வாங்க வேண்டி இருக்கிறது. வேலுமணி எனக்கு ரொம்ப பிரச்னை கொடுக்கிறார்' என்று. நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் போகலாம். அதுதான் உண்மை. எங்களுக்கு இது பின்னடைவா என்று சொல்கிறீர்கள். அது வருங்காலம் முடிவு செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு