தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிர்த் தியாகம் செய்து கடந்த மே 22-ம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 12 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கும், பலத்த காயமடைந்தவர்கள் 5 பேருக்கும், பலத்த காயம் அடைந்தவர்களின் வாரிசுகள் 4 பேருக்கும் என 21 பேருக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் பணி வழங்கப்பட்டது. இதில்,19 பேருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் கிராம உதவியாளர் பணியிடமும், 2 பேருக்கு சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் சமையலர் பணியிடமும் வழங்கப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள். `கண் துடைப்பிற்காக ஏதோ ஒரு பணியிடத்தை எங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ளது. எங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்’ எனப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸுக்கு, கடந்த 27.07.20-ல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் `இளநிலை வருவாய் ஆய்வாளர்’ பணி வழங்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மீண்டும் வலுத்தது. ``உயிரிழப்பு என்பது ஈடுகட்ட முடியாததுதான். அதற்காக பணி வழங்கியதில் அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது. எங்களுக்கும் கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ’தி.மு.க ஆட்சி அமைந்ததும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்’ என தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வரான 14 நாட்களிலேயே சொன்னபடியே கல்வித் தகுதியின் அடிப்படையில் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை கடந்த மே 21-ம் தேதி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில், 8 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியும், 4 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியும், 3 பேருக்கு ஊர்நல அலுவலர் (நிலை-2) பணியும், ஒருவருக்கு காசாளர் பணியும், ஒருவருக்கு ஈப்பு ஓட்டுநர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் வலது கால் அகற்றப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டுள்ள பிரின்ஸ்டனுக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளர் கிரேடில், ’ஊர்நல அலுவலர் நிலை – 2’ என்ற பணியிடம் ஒதுக்கப்பட்டது.

``துப்பாக்கிச்சூட்டுல என்னோட வலது கால் உருக்குலைஞ்சுட்டு. ஆபரேசன்ல காலை நீக்கிட்டாங்க. 80% கால் ஊனமாகி, செயற்கைக்கால் உதவியில மெது மெதுவா நடக்குறேன். 10 நிமிசத்துக்கு மேல பயணம் செய்ய முடியாத என்னால எப்படி 29 கி.மீ தூரம் இருக்குற ஓட்டப்பிடாரத்துக்கு தினமும் போயிட்டு வர முடியும்? பணி வழங்கப்பட்டதுல, 5 பேருக்கு தூத்துக்குடியிலயே பணி ஒதுக்கியிருக்காங்க. என்னோட உடல் நிலை கருதி தூத்துக்குடியிலேயே பணி ஒதுக்கித் தரணும்” என்றார் கண்ணீருடன்.
பிரின்ஸ்டனின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜிடம் பேசினோம், ``அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அதே நிலையிலான பணியை, காலியிடத்தைப் பொறுத்து தூத்துக்குடி ஒன்றியத்திலோ அருகிலுள்ள ஊராட்சி ஒன்றியத்திலோ மாற்றுப் பணியிடமாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் உறுதியாக. அதேபோல, கடந்த மே 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜை, பிரின்ஸ்டன் சந்தித்து பணியிட மாற்றம் தொடர்பான கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.

உடனடியாக, கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற உத்தரவிட்டதுடன், அடுத்த நாளே தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் காலியாக உள்ள ’இளநிலை உதவியாளர்’ பணியிடத்தில் பணியமர்வு செய்திட உத்தரவிட்டதுடன் அதற்கான பணி நியமன ஆணையையும் வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பிரின்ஸ்டன், விகடனுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.