Published:Updated:

திருவண்ணாமலை: 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட்? - போராட்டத்தில் கிராம மக்கள்!

பாலியப்பட்டு கிராம மக்கள்
News
பாலியப்பட்டு கிராம மக்கள்

பாலியப்பட்டு கிராமத்தை மையமாக கொண்டு புதிய சிப்காட் அமைய இருப்பதாக கசிந்த உறுதிச் செய்யப்படாத தகவலால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த கிராம மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்போ, ஆணையோ இதுவரை வெளியாகாவில்லை. இந்த நிலையில், பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி சிப்காட் அமைய இருப்பதாக அந்தப் பகுதி மக்களுக்கு கசிந்த உறுதிச் செய்யப்படாத தகவலால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த கிராம மக்கள்.

பாலியப்பட்டு கிராம மக்கள் போராட்டம்
பாலியப்பட்டு கிராம மக்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது பாலியப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில், சிப்காட் அமைய இருப்பதாக உறுதியற்ற தகவலைக் கூறும் இந்த கிராம மக்கள்... இந்த முடிவை அரசு திரும்பப் பெறவேண்டும் என கருப்பு கொடி ஏற்றி, 20 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஒன்றிய கவுன்சிலருமான குட்டி என்பவரிடம் பேசினோம். ``சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் எங்க ஊரை மையப்படுத்தி புதிய சிப்காட் அமைய போவதாக எங்களுக்கு தெரியவந்தது. இந்த திட்டம் இங்கு வந்தால், சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்களும், 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்படும். இந்த தகவலை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் தொடர்ச்சியாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம் இவர்களுடைய முக்கிய நோக்கமே இரும்புத் தாது வளம் இருக்கும் கவுத்தி மலைதான். அந்த மலை வரை இந்த சிப்காட் வரைபடம் போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து 250 பேர் வரைக்கும் சென்றிருந்தோம். எங்களை பார்த்துவிட்டு கலெக்டர் சார் கூட்டத்திற்கே வரவில்லை. 'அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம்' என நாங்கள் நீண்ட நேரமாக வாதாடிய பிறகு 10 பேரை மட்டும் தன்னுடைய பங்களாவுக்கு அழைத்து பேசினார் கலெக்டர்.

போராட்டத்தில் ஊர் மக்களுடன் குட்டி
போராட்டத்தில் ஊர் மக்களுடன் குட்டி

நடந்ததை எடுத்து சொல்லி சிப்காட் வேண்டாம் என கூறிய போது, 'உங்க பிரச்னையை மட்டும் சொல்லுங்க. அரசுக்கு எதிராக இந்த மாதிரி எல்லாம் பண்ணிகிட்டு இருந்தால் குண்டாஸ் சட்டத்தில் முன்னாடி நின்னு பேசுரவங்கள பிடிச்சு உள்ள போடவும் தயங்க மாட்டேன்' என்று அச்சுறுத்தும் படி பேசியிருக்கிறார். ஸ்டெர்லைட் பாதிப்பு விவகாரத்தை மேற்கோள் காட்டி எங்க ஊர்காரங்க பேச, அதே சம்பவத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றியும் பேசிமிரட்டியிருக்கிறார். 'நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ, அமைச்சரை போய் பாருங்க' என கூறி, கடைசி 10 நிமிடம் மட்டும் நல்லபடியாக பேசி அனுப்பியிருக்கிறார். எம்.எல்.ஏ., மு.பெ.கிரி சாரை பார்த்ததுக்கும் சரியான பதில் ஏதும் இல்லை. இப்படியாக அதிகாரிகள் பேசும் விதத்தில் தான் எங்களின் சந்தேகம் உறுதியானது. அண்மையில் போளூர் நிகழ்ச்சியில் பேசியிருந்த அமைச்சர் ஏ.வ.வேலு, `செங்கம் அருகே புதிய சிப்காட் யார் எதிர்த்தாலும் அமைந்தே தீரும்' என பேசியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சிப்காட் அமைவதால் எங்க பஞ்சாயத்து மட்டுமல்லாம... ஐயம்பாளையம், ஆடையூர், தேவநந்தல் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட பகுதிகளும் பாதிப்படையுது. இதில் பெரும் பாதிப்படைவது பாலியம்பட்டு பஞ்சாயத்து தான். இங்கு சிப்காட் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும். எங்களை சுற்றி உள்ள கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எப்படியும் நாளை(08.01.2022) 2,000 மக்களை ஒன்று திரட்டி விழிப்பு உணர்வு பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இது தொடர்பாக விளக்கம் கேட்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டோம். அழைப்பு இணைக்கப்படாததினால் அவர் உதவியாளரை தொடர்பு கொண்டோம். ``சார் இன்ஸ்பெக்ஷன்ல இருக்கிறார். திங்கள் கிழமை நேரில் வந்து பேசுங்கள்" என கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். ஆட்சியர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்கு பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.