அரசுப் பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது தொடர்பாக தமிழக அரசு ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``பேருந்து நிறுத்தத்தில் முறையாகப் பேருந்தை நிறுத்தி, மாற்றுத்திறனாளி பயணிகளை மறுக்காமல் ஏற்றிச் செல்ல வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் இருக்கையில் அவர்களை அமரவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோபமாகவோ, அவமதிக்கும்படியான வார்த்தைகளைப் பேசாமல் அன்புடனும், உபசரிப்புடனும் நடந்துகொள்ளவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான நிறுத்தத்தில் இறங்க உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண சலுகைகளைச் சரியாக வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
