Published:Updated:

`சர்ச்சைக்குரிய மாற்றுப்பாலின உரிமை பாதுகாப்பு மசோதா!'- மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

ஒட்டுமொத்த மாற்றுப்பாலின மக்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இன்று அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், இந்த மசோதா தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

திருநங்கை
திருநங்கை

மாநிலங்களவை கூட்டத்தொடரில், அரசின் மாற்றுப்பாலின உரிமை பாதுகாப்பு மசோதா, பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இன்று நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், மக்களவை கூட்டத் தொடரில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தி.மு.க, இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பச் சொல்லி பரிந்துரைத்திருந்தன. தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், "மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இதைத் தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரையுங்கள்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

ஆறுவார கால அவகாசம் கொடுங்கள். சிறிது காலம் கடந்து நிறைவேற்றுவதால் இதில் ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது" என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரெக் ஓ பிரையனும் இதையே பரிந்துரைத்தார்.

"மாற்றுப் பாலினத்தவர்களுக்கு பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த மசோதாவையும் கடந்து சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. பணியிடத்தில் பாலியல் சீண்டல், போக்ஸோ, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் என அத்தனையிலும் அவர்களை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதனால் இதை அவசரமாக நிறைவேற்றத் தேவையில்லை" என்று அவர் குறிப்பிட்டார். தேர்வுக் குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான வாக்கெடுப்பில், 70 பேர் எதிராக வாக்களித்த நிலையில், அது பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

திருநர்கள் போராட்டம்
திருநர்கள் போராட்டம்

தற்போதைய மசோதாவின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக மாற்றுப்பாலினத்தவர்கள், தங்களது பாலின அடையாளத்தைத் தாங்களே தேர்வு செய்துகொள்ளும் உரிமையைத் தருகிறது.

அதேநேரம், மாற்றுப்பாலின அடையாள அட்டையைப் பெறுவதற்கு உடல் பரிசோதனைகள் மற்றும் அடையாளச் சான்றிதழ்களை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளே வழங்குவர் என்றும் அது, பாலின அறுவைசிகிச்சைக்குப் பிறகு தலைமை மருத்துவர் தரும் சான்றிதழைப் பொறுத்தே தரப்படும். ஒருவேளை மாஜிஸ்திரேட் சான்றிதழை மறுக்கும் நிலையில், அதன் மீதான மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை இந்த மசோதா அளிக்கவில்லை.

"இது, மாற்றுப் பாலினத்தவரின் வாழும் உரிமையையே பறிப்பதாக இருக்கிறது" என்று களச்செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.