கையெழுத்திட்ட மந்திரிகள்... காற்றில் பறந்த வாக்குறுதிகள்... நாளை முதல் பஸ் ஸ்டிரைக்!

மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகப் பல அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுவரும் நிலையில், நாளை (பிப். 25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கப்போவதாக அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017, பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அதற்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்கள், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் என ஏகப்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், அரசு ஊழியர்களும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களும், அரசு மருத்துவர்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர். அத்தனை போராட்டங்களும் தமிழக அரசால் ஒடுக்கப்பட்டன. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன.

அந்த வகையில், தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் இன்றைக்கும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாகத்தான், பிப்ரவரி 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் சந்திப்பு சென்னையில் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்றது. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., ஹெச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எஃப்., எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டி.டபிள்யூ.யூ ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், பிப்ரவரி 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்குவதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்.

இது குறித்து, வேலைநிறுத்தத்தை அறிவித்திருக்கும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத் தலைவர்களிடம் பேசினோம்.
``தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், போக்குவரத்துத்துறைக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்குவதில்லை. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால், தமிழக அரசு அதைக் கண்டுகொள்வதில்லை. தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தைவைத்து போக்குவரத்துக்கழகங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இதுவரை தொழிலாளர்களின் பணம் ரூ.8,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்களுக்குப் பணி ஓய்வுக்கால பலன்கள், ஓய்வுபெறும் நாளில் வழங்கப்படுவதில்லை.
மற்ற துறைகளின் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைவிட குறைவான ஊதியமே போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, போக்குவரத்துக் கழகத்துக்கு தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகள், ஒப்பந்தப்படியான சலுகைகள், பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறோம். இந்தக் கோரிக்கைகளுக்காக 2017-ம் ஆண்டு மூன்று நாள்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அப்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகிய மூன்று அமைச்சர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்படும், ஊழியர் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்படும், தொழிலாளர்களின் சேமிப்புப் பணம் உரிய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று எழுத்துபூர்வமாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் வாக்குறுதியை அமைச்சர்கள் நிறைவேற்றவில்லை.

போக்குவரத்துக் கழகம் ஈட்டும் 100 ரூபாய் வருமானத்தில் 14 ரூபாய் கடனுக்கான வட்டியாகப் போய்விடுகிறது. அதனால், போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்று சொல்லிவருகிறோம். இந்தநிலையில், கடந்த ஆண்டு, செப்டம்பர் 1-ம் தேதியுடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியறுத்தி டிசம்பர் மாதம் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும்கூட, போராட்டத்தில் இறங்காமல் அரசுக்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், பிரச்னையைத் தீர்ப்பதற்கு அரசு முன்வரவில்லை. எனவே, போராட்டத்தில் இறங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர்.
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் ஆறுமுகநயினாரிடம் பேசியபோது, ``போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும். பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தர வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கியக் கோரிக்கைகள்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் இறங்குகிறோம். பொதுமக்கள் பாதித்துவிடக் கூடாது என்றுதான் வேலைநிறுத்தம் என்ற முடிவை உடனடியாக நாங்கள் எடுக்கவில்லை. ஆனால், இப்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் கோரிக்கை குறித்து அரசுத் தரப்பில் எந்த நகர்வும் இல்லாத காரணத்தால்தான் வேலைநிறுத்தம் என்ற முடிவை தொழிற்சங்கங்கள் இப்போது எடுத்திருக்கின்றன. எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார் ஆறுமுகநயினார்.
இது குறித்து போக்குவரத்துத்துறை உயரதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, `இது குறித்து அரசு முடிவுசெய்யும்’ என்று தெரிவித்தனர். காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு இதுவரை முன்வரவில்லை என்று தொழிற்சங்கத்தினர் நம்மிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.