Published:Updated:

சாதிச் சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடி மாணவர்; தாக்கிய காவல் ஆய்வாளர்! - நடந்தது என்ன?

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்
News
தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்

மாணவரை தாக்கிய சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கணபதி என்பவரை மறுதினமே பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மகேந்திரா (20). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள 'அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி'யில் பி.எஸ்சி இயற்பியல் துறையில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மாணவர், தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டி நீண்ட நாள்களாக போராடி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 30-ம் தேதி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு காத்திருந்திருக்கிறார். பல மணி நேரமாக காத்திருந்தும் அதிகாரிகள் சரியான பதிலை அளிக்காததால், இரவு சுமார் 10 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தனிநபராக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனி நபராக தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்
தனி நபராக தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்

அப்போது அங்கு வந்த போலீஸார், அந்த மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த மாணவர் அதற்கு இணங்காததால், காவலர் ஆய்வாளர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மாணவரை தாக்கிய சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கணபதி என்பவரை மறுதினமே பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாதிச் சான்றிதழ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கஜேந்திராவிடம் பேசினோம். ``எனக்கு சாதிச் சான்றிதழ் வேண்டுமென 2017-லிருந்து தொடர்ந்து மனு கொடுத்து வர்றேன். எந்த அதிகாரியும் கண்டுக்கல. நான் 12-வது முடிச்சுட்டு காலேஜ் போனப்போ எனக்கு சீட் கிடைச்சுச்சு. ஆனா, சாதிச் சான்றிதழ் இல்லாம காலேஜ்ல சேருவதற்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சமூக செயற்பாட்டாளராக இருக்கும் ஒரு அண்ணன் எனக்கு உதவி பண்ண ஆரம்பிச்சாரு. 2020-ம் வருஷம், சாதிச் சான்றிதழ் கேட்டு கலெக்டர், கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தோம். அதுக்கப்புறமா வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் எல்லாரும் என்னைய பத்தி விசாரிச்சாங்க. விசாரிச்சி முடிச்ச அறிக்கையை, அப்போது கோட்டாட்சியராக இருந்த ராஜேந்திரன் சாருக்கு அனுப்பியிருந்தாங்க.

அவரு... மானுடவியலாளர் அதிகாரி ஒருத்தருக்கு ஃபார்வேர்ட் பண்ணாரு. அவங்க, எனக்கு சாதிச் சான்றிதழ் தரலாமா? என ஆய்வு பண்ணிட்டு 'சான்றிதழ் தருவதற்கு தகுதியானவர் தான்' அப்படின்னு கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பியிருந்தாங்க. அப்போ இருந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை சாரும், கோட்டாட்சியரும் 'உனக்கு இன்னும் 2 நாளுல சாதிச் சான்றிதழ் தந்துடுவோம்' என சொன்னாங்க.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
தே.சிலம்பரசன்
கொஞ்ச நாள் கழிச்சு நானே நேரா போய் கேட்டப்போ, "மானுடவியலாளர் அதிகாரி அனுப்பிய ரிப்போர்ட் தொலஞ்சுடுச்சு" அப்படின்னு சொல்லிட்டாரு கோட்டாட்சியர்.

எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சீக்கிரமாவே கலெக்டரும், கோட்டாட்சியரும் ட்ரான்ஸ்ஃபர் ஆயிட்டாங்க. அதுக்கு அப்புறமா கலெக்டராக மோகன் சாரும், கோட்டாட்சியராக ஹரிதாஸ் சாரும் வந்தாங்க. அந்த சமயத்துல தான்... என்ன ஏற்கெனவே வந்து ஆய்வுசெய்த மானுடவியலாளர் அதிகாரி, திருப்பச்சாவடி மேடு எனும் பகுதிக்கு என்னை போல சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்காக ஆய்வு செய்ய வந்திருப்பதாக எனக்குத் தகவல் கிடைச்சது. அவரை நேரா போய் பார்த்து, `சாதிச் சான்றிதழ் இன்னும் கிடைக்கலை ஐயா' அப்படின்னு நடந்ததை சொல்லி முறையிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்று அவர் ஆய்வு பண்ணிய 17 பசங்க ரிப்போர்டுடன் சேர்த்து எனக்கும் ரிப்போர்ட் அனுப்பினாரு. அதுக்கு அப்புறமா நான் கோட்டாட்சியர் ஹரிதாஸ் சாரை பார்த்தபோது, `உனக்கு ஒரு ரிப்போர்ட் வந்திருக்கு, சாதிச் சான்றிதழ் தரேன்' அப்படின்னு சொன்னாரு. கலெக்டர் சாரும்... ரிப்போர்ட் வந்த பசங்க எல்லாருக்கும் கடந்த 31-ம் தேதிக்குள்ள சாதிச் சான்றிதழ் தர சொல்லி இருந்தாரு. அதனால சுமார் 15 நாளா காலேஜுக்கு கூட போகாம கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமா நடந்துக்கிட்டே இருந்தேன். கடந்த 29-ம் தேதி எங்க வீட்டுக்கு ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியர், ஒருமாதிரி ஒருமையில பேசினாரு. அப்புறமா மறுநாள் (30-ம் தேதி) காலையில அவருடைய அலுவலகத்துக்கு வந்த கோட்டாட்சியர், கலெக்டர் சார் மீட்டிங்கை முடிச்சுட்டு எங்கேயோ ஆய்வுக்கு போயிட்டாரு. நான் அங்கேயே தான் இருந்தேன்.

சாயங்காலம் 5 மணிக்கு மறுபடியும் வந்தாரு. அப்போதிலிருந்து நைட்டு 8.30 மணி வரைக்கும் அவர் ரூமுக்கு முன்னாடி தான் நின்னுகிட்டு இருந்தேன். அவ்வளவு நேரம் நின்னதுக்கு அப்புறமா, `நான் உன்ன விசாரணை பண்ணல. உனக்கு ரிப்போர்ட் முறையில்லாம வந்திருக்கு. அதனால சாதிச் சான்றிதழ் தர முடியாது' அப்படின்னு சொல்லிட்டாரு. எனக்கு மன உளைச்சல் அதிகம் ஆகிடுச்சு.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
தே.சிலம்பரசன்

உடனே கலெக்டரை பாக்க போனேன். அவர் அப்போ இல்லன்னு சொன்னாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம... மனசு தாங்காம தான் கலெக்டர் ஆபீஸ் முன்னாடியே போராட்டத்தில் உட்கார்ந்துட்டேன். மறுநாள் (31.12.2021) எஸ்.பி சாரும் 'சான்றிதழை சரிபார்த்து தரச் சொல்கிறேன்' என ஆறுதல் சொன்னாரு. அன்னைக்கு சாயங்காலம் 5 மணிக்கு கோட்டாட்சியர் கிட்ட சாதிச் சான்றிதழ் பத்தி கேட்டப்போ... `நீ வீட்டுக்கு போ... நான் வந்து தரேன்' அப்படின்னு சொன்னாரு. நானும் நம்பி வீட்டுக்கு வந்தேன். நைட் 7 மணி போல வி.ஏ.ஓ., ஆர்.ஐ ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து ஒரு லெட்டரை கொடுத்துட்டு என்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு போனாங்க. நான் அந்த லெட்டரை பிரிச்சி பார்த்தப்போ, `மானுடவியலாளர் அறிக்கை முறையற்று உள்ளது. உங்களுக்கு சான்றிதழை தர இயலாது' என இருந்துச்சு. உடனே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு.

ஒரு மானுடவியலாளர் லெட்டரை எப்படி கோட்டாட்சியர் முறையற்றது என சொல்ல முடியும். கோட்டாட்சியரே ஆய்வு செய்யும்படி பரிந்துரைத்தவர் தானே மானுடவியலாளர். 17 மாணவர்களுடன் எனக்கும் ஏன் கடிதம் இணைத்து அனுப்பினார் என அவரிடமே கோட்டாட்சியர் கேட்டிருக்கலாமே. அவரே தெளிவாக சொல்லி இருப்பாரே, இல்லையெனில் கலெக்டர் சார் பார்வைக்கு கொண்டு போயிருக்கலாம். ஆனா நான் பல வருஷமா போராடி இறுதி கட்டத்துக்கு வந்ததுக்கு அப்புறமா 'சாதிச் சான்றிதழ் தர முடியாது' என்பது எந்த விதத்தில் நியாயம்.

ஏற்கெனவே, ஆய்வு ரிப்போர்ட் தொலைந்தது தொடர்பா முன்னாள் கோட்டாட்சியரும், இந்த கோட்டாட்சியரும் பேசிகிட்டிருக்காங்க. தங்களை காப்பாத்திக்க என்ன பலிகடா ஆக்கப் பாக்குறாங்க. எங்க ஊர்ல, எங்கு சமூகத்துகாரங்க சுமார் பத்து குடும்பம் இருப்போம். நிறைய பேருக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் போனதால் 12-வதுக்கு மேல யாரும் படிக்கவே இல்ல. நானாவது இந்த சமூகத்தில இருந்து மேல வரணும் அப்படின்னு நினைச்சு தான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். ஆனால் சாதிச் சான்றிதழ் தர மாட்டேங்குறாங்க. இன்று சாயங்காலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்" என்றார் சோகமாக.

காவல் ஆய்வாளர் மாணவரை தாக்கியதாக வெளியான வீடியோ காட்சி
காவல் ஆய்வாளர் மாணவரை தாக்கியதாக வெளியான வீடியோ காட்சி

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் ஹரிதாஸை தொடர்பு கொண்டோம். ``நான் அவருக்கு ஆணை ஒன்று வழங்கி உள்ளேன். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு உள்ளேன். அவர்கள் சொல்வது போல ஏதும் இல்லை" என்றார் சுருக்கமாக.

மாவட்ட ஆட்சியர் மோகனை சந்திக்க உள்ளதாக கூறியிருக்கிறார் அந்த மாணவர், நல்லது நடக்கும் எனும் நம்பிக்கையில்..!